ஜூலை 28, 2013 அன்று அட்லாண்டாவின் டிகேட்டரிலுள்ள போர்ட்டர் சேன்ஃபோர்டு நிகழ்கலை அரங்கில் நிருத்ய சங்கல்பா டான்ஸ் அகாடமி மாணவி செல்வி. வீணா கணபதியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு. சவிதா விஸ்வநாதனின் சிறப்பான பயிற்சியில் வீணாவின் நாட்டியம் ஜதிலயத்துடன் களைகட்டத் தொடங்கியது. விநாயகர் துதியில் தொடங்கி, சந்திர கவுத்துவத்துக்கும் ஜதிஸ்வரத்துக்கும் நளினமாக அபிநயம் கூட்டி லயிக்கச் செய்தார் வீணா. தொடர்ந்து வந்த, "உன் பாதங்களில் சரணடைய வந்த என்னைக் காப்பதில் ஏன் இந்த வேறுபாடு?" என்று கண்ணனைக் கேட்கும் வர்ணம், பாபநாசம் சிவனின் "ஆனந்த நடமிடும் பாதம்" எனும் சிவ கீர்த்தனம் ஆகியவற்றுக்கு பாவத்துடனும், பக்திப் பரவசத்துடனும் நடனமாடி கரகோஷத்தைப் பெற்றார். "அவன் தன்னை மறந்தாலும் என்னால் அவனை மறக்க இயலாது" என்று உருகிக் கோவலனுக்குத் தூதனுப்பக் கண்ணகி பாடும் சிலப்பதிகாரப் பாடலுக்கு குரு. சவிதாவின் நாட்டிய அமைப்பு அருமை. துர்க்கா தேவி கீர்த்தனம், தில்லானா ஆகியவற்றுக்குப் பின் நிகழ்ச்சி மங்களத்துடன் நிறைவடைந்தது.
ஜோதிஸ்மதி ஷீஜித் (வாய்ப்பாட்டு), ஷீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), G.S. ராஜன் (புல்லாங்குழல்), பாபநாசம் கோகுல் (வயலின்), குரு. சவிதா (நட்டுவாங்கம்) என்று அனைவரும் நிகழ்ச்சிக்கு உயிரூட்டினர். குரு. சவிதா விஸ்வநாதன் சென்னை கலாக்ஷேத்ரா பாணியை 15 வருடங்களுக்கும் மேலாகக் கற்பித்து வருவதோடு, பரதக்கலையை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். தனது ஆறாம் வயதில் நாட்டியம் கற்கத் தொடங்கி, நன்கு பயின்று சிறப்பாக ஆடிய வீணாவுக்கு வாழ்த்துகள்.
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |