ஜூலை 13, 2013 அன்று ஷெர் ஃபோரம் தியேடரில் செல்வி. ரசனா தேஷ்பாண்டேயின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்ச்சி ஜதீஸ்வரத்தில் ராஜநடை போட்டது. அபூர்வமான ஜதிகளுக்குச் சளைக்காமல் ஆடினார் ரசனா. நாட்டைக் குறிஞ்சி வர்ணத்தில் அபிநயங்களுடன் நிருத்யமும் செய்து, ஸ்ரீ கணேசப் பெருமானின் கதைகளை விதவிதமாக அபிநயித்தார். செஞ்சுருட்டி ராக 'மாடு மேய்க்கும் கண்ணா' பதத்துக்கு யசோதையின் கேள்விகளுக்குக் குறும்பான பதில்களைக் கொடுத்த கிருஷ்ணனிடமிருந்து கண்ணை எடுக்க விடாமல் ஆடிக் கைதட்டலை அள்ளினார். சிவதாண்டவப் பாடல்களுக்கு அசராமல் ஆடியது நிறைவு. இறுதியில் தனஸ்ரீ ராகத் தில்லானாவுடன் நிறைவு செய்தார். ரசனாவின் குரு பத்மினி வாசனுக்குப் பெருமையைச் சேர்த்தது இந்த அரங்கேற்றம். உடன்பாடிய திரு. பாபு பரமேஸ்வன், மிருதங்க வித்வான் திரு. பிரபுஸ்ரீராம், வயலின் வாசித்த திரு. சுப்ரமண்யன், புல்லாங்குழல் இசைத்த திரு. கார்த்திக் ரவிகுமார் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
இந்திரா பார்த்தசாரதி, கலிஃபோர்னியா |