அரங்கேற்றம்: அமியா பிரசாத், அன்யா பிரசாத்
ஜூலை 7, 2013 அன்று அமியா பிரசாத், அன்யா பிரசாத் இரட்டையரின் நாட்டிய அரங்கேற்றம் தௌசண்டு ஓக்ஸில் உள்ள ஷெர் ஃபோரம் தியேடரில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து அலாரிப்பிலேயே நடனமணிகளின் திறமையை உணர முடிந்தது. வலஜி ராகக் கனகதாசர் பதத்தில் கணேசரின் புகழ் துதிக்கப்பட்டது. தஞ்சாவூர் நால்வரின் தாளக்கட்டுக்கள் நிறைந்த வசந்தா ராக ஜதீஸ்வரத்தில் திறமையை நிரூபித்தனர். லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா வர்ணத்தில் ஸ்ரீனிவாசன் பெருமையைக் காட்டியதுடன், வாமனாவதாரத்தைச் சித்திரித்தது அபூர்வமாக அமைந்திருந்தது. புரந்தரதாஸரின் ராகமாலிகா சாகித்யத்தில் பால கிருஷ்ணன் குறும்புகள் மிக வேடிக்கை.

ஹனுமான் சாலிஸாவின் பாக்களுக்கு ஆஞ்சநேயரின் திறமைகளை நாட்டிய ரூபத்தில் கொண்டு நிறுத்தினர் பிரசாத் சகோதரிகள். தில்லானாவுக்குப் பிறகு பஞ்சபூதங்களுக்கு மங்களம் கூறிக் கச்சேரியை நிறைவு செய்தார்கள். மாலதி ஐயங்காரின் நட்டுவாங்கம், நந்தகுமார் உன்னி கிருஷ்ணனின் பாட்டு, ரகுநந்தன் கிருஷ்ணனின் புல்லாங்குழல், இளைஞர் கிரண் ஆத்ரேயாவின் வயலின் ஆகியவை வெகு அழகாக உடன்சென்றன.

இந்திரா பார்த்தசாரதி,
கலிஃபோர்னியா

© TamilOnline.com