அரங்கேற்றம்: ரிதிகா ஐயர்
ஜூலை 6, 2013 அன்று செல்வி. ரிதிகா ஐயரின் நாட்டிய அரங்கேற்றம் ஷெர் ஃபோரம் தியேடரில் நடந்தது. குரு. மாலதி ஐயங்காரின் சிஷ்யையான 12 வயதே ஆன ரிதிகா மிகுந்த உற்சாகத்துடனும் தன் வயதுக்கேயான சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஆடினார். மாலதியின் நடன அமைப்பு விசேஷமாக இருந்தது. புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து அலாரிப்பு முடித்தவுடன் ரஸானி ராகத்தில் அமைந்த ஜதீஸ்வரத்துக்கு குரு ஜதிகள் சொல்ல விறுவிறுப்புடன் தடங்கலில்லாமல் ஆடினார் ரிதிகா.
சிவனைப் பற்றிய தோடி ராக வர்ணத்துக்கு அற்புதமாக ஆடி அசரவைத்தார். தசாவதாரங்களை அழகுடன் சித்திரித்த ராகமாலிகை பதத்தை நிறைவாகச் செய்தார். சுருட்டி ராகப் பதத்தில் தேவியின் அவதாரங்களை அழகாகப் பார்க்க முடிந்தது. ரதிபதிப்ரியாவில் அமைந்த தில்லானாவுக்குச் சித்திரித்த தோரணைகளுப் பின், குருவாயூரப்பனைப் பிரார்த்தித்து முடித்தார். வந்தே மாதரத்துக்கு ஆடி நிறைவு செய்தார். பக்கம் வாசித்த திரு. நந்தகுமார் உன்னி கிருஷ்ணன் (பாட்டு), திரு. கிரண் ஆத்ரேயா (வயலின்), திரு. ரகுநந்தன் (புல்லாங்குழல்), திரு. குருமூர்த்தி (மிருதங்கம்) ஆகியோர் ஜமாய்த்துவிட்டார்கள்.

இந்திரா பார்த்தசாரதி,
கலிஃபோர்னியா

© TamilOnline.com