நகரத்தார் கூட்டமைப்பு மாநாடு கலிஃபோர்னியா சான் ஹோசே சிவிக் சென்டரில் ஜூலை 5, 6 தேதிகளில் காலையிலிருந்து இரவுவரை நாடகம், நடனம், இசை, வாத்ய இசை, சொற்பொழிவுகள் கருத்தரங்குகள், இளையோர் சந்திப்பு என எழுபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. 1350 பேர் விழாவில் கலந்துகொண்டனர். கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் குவிந்திருந்தனர். வள்ளல் அழகப்பச் செட்டியாரின் பேரர் தொழிலதிபர் வயிரவன் இராமநாதன் தலைமைப் பொறுப்பேற்று விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். செட்டிநாட்டு உணவு வகைகள் செட்டிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட புகழ்பெற்ற சமையற் கலைஞர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டன. வயிரவன் இராமநாதனின் தொடக்கவுரை, தொழிலதிபர் கருமுத்து கண்ணனின் வீடியோ உரை, தொழிலதிபர் பத்மபூஷண் டாக்டர். எம்.வி.சுப்பையா அவர்களின் சிறப்புரை ஆகியவற்றுடன் விழா துவங்கியது.
சூப்பர் டான்சர், சூப்பர் சிங்கர், கணிதம்/வேதியல் போட்டிகள், வளரும் தலைமுறையினருக்குத் தொழிலில் வெற்றி குறித்த போட்டிகள் வைக்கப்பட்டுப் பரிசுகள் வழஙப்பட்டன. மருத்துவக் கருத்தரங்கம் திருமதி. தில்லைக்கரசி கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர்கள் ஜெயந்தி சுப்பையா, அனிதா வயிரவன், வீரப்பன் அண்ணாமலை, மீனா சாத்தப்பன், சம்பந்தம் ஆகியோர் பல்வேறு நோய்கள், சிகிச்சைகள் குறித்துப் பேசினர். திருமண வாழ்க்கை வெற்றி பெற வழிவகுக்கும் வகையில் திருமணத்திற்கு முன்னும், பின்னும் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்த கருத்தாழமிக்க நிகழ்வு நடைபெற்றது. டாக்டர். சம்பந்தம், பத்திரிகையாளர் எஸ். முத்தையா, திருமதி. உமா சொக்கலிங்கம், கார்த்திக் சந்திரமௌலி, பத்து கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தொழில்முனைவோர் கருத்தரங்கமும் இடம்பெற்றது. நகரத்தார் பண்பாடு, கலை குறித்த கருத்தரங்கத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், முருகப்பா குழுமத் தலைவர் திரு. எம்.வி. சுப்பையா, திரு. முத்தையா, லேனா கண்ணப்பன், திருமதி. உமையாள் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.
169 பேர் கொண்ட இளையோர் குழு சான் ஃப்ரான்சிஸ்கோ வரை பேருந்துச் சுற்றுலா சென்று வந்தனர். தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு. சிங்காரம், சிகாகோ திரு. சேவுகன் இருவரையும் அவர்கள் தொண்டுக்காகப் பாராட்டப்பட்டனர். தொடக்கத்தில் 61 பேர் கொண்ட குழுவினர் வழங்கிய வரவேற்பு நடனம், ஃபீனிக்ஸ் மக்கள் வழங்கிய நிழல் நாடகம், டாலஸ் கரகாட்டம், ஃபேஷன் டான்ஸ், கலிஃபோர்னியரின் 'விதம் விதமாக கல்யாணம் பேசறாங்க' நாடகம், நியூ ஜெர்ஸி வாஷிங்டன் குழந்தைகள் நடனம் என்று களை கட்டியது. கனடா குழுவினரின் 'சாந்தி கல்யாணம்' நாடகம், வட்டார மொழி, பழக்க வழக்கங்கள், நாட்டு நடப்புக்களைக் கொண்டு நகைச்சுவை விருந்து படைத்தது. வி. பால் கதை-வசனம் பாராட்டுக்குரியது. சிலப்பதிகார நாட்டிய நாடகம் சிறப்புச் சேர்த்தது. இதற்குப் பெரிதும் உதவிய, நேர நிர்வாகம் செய்த மீனா நல்லகுமார், கலை அமைத்த நல்லகுமார் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தொழில் முனைவோர் மாநாடு திருமதி. உமா மெய்யப்பன் தலைமையில் இராமு வீரப்பன், இராமநாதன் வயிரவன், கிருஷ்ணா சுப்பிரமணியம் பங்கேற்க நடந்தது.
உமையாள் முத்து, டெட்ராய்ட், மிச்சிகன் |