செப்டம்பர் 7, 2013 அன்று டாலஸின் ரிச்சர்ட்ஸனிலுள்ள ஐஸ்மன் சென்டரில் (Eisemann Center) சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. தமிழகத்திலுள்ள 'உதவும் கரங்கள்' சேவை அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைத் திருமதி. ராதிகா கணேஷ் வடிவமைத்து இயக்குகிறார். இவர் Expressions என்ற நடனப் பள்ளியை நடத்தி வருவதுடன், பல்வேறு பிரபல நாட்டிய நிகழ்ச்சிகளை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு சாஸ்தா தமிழ் அறக்கட்டளைக்காக ' ஆயிரம் கரங்கள் நீட்டி' என்ற நாட்டிய நாடகத்தை வடிவமைத்து இயக்கியிருந்தார்.
"முருகன்–வள்ளி காதலைத் திரைப்படம் போன்ற காட்சியமைப்புடனும், நடனத்துடனும், மேடையில் அரங்கேற்ற முயற்சி செய்துள்ளோம். தமிழக நாட்டுப்புற நடனம், பாரம்பரிய நடனம், தமிழர் வீரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரியக் கலைகள், வித்தைகள், இசை என அனைத்தையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம்" என்கிறார் ராதிகா.
சிறார் உட்படச் சுமார் 100 பேர் கொண்ட நடனக்குழு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தீவிரப் பயிற்சி செய்து வருகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை சாஸ்தா அறக்கட்டளை திரு. வேலு தலைமையில் தன்னார்வத் தொண்டர் குழு கவனிக்கிறது. உதவும் கரங்களின் திருவண்ணாமலை பெண்கள் காப்பகக் கட்டிட வேலைக்காகக் கடந்த ஆண்டு 'ஆயிரம் கரங்கள்' மூலம் 65 ஆயிரம் டாலர் நிதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியில் இந்தக் கட்டிட வேலை நிறைவுபெறும் என்றும் வேலு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு வலைமனை: www.pltamil.org முகநூல்: www.facebook.com/SasthaTamilFoundation மின்னஞ்சல்: SasthaTamilFoundation@gmail.com
செய்திக்குறிப்பிலிருந்து |