ஃப்ரீமான்ட் (கலி.): மருத்துவ சேவைக்கு உதவ நாட்டிய நிகழ்ச்சி
செப்டம்பர் 29, 2013 அன்று ஃப்ரீமான்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கில், ந்ருத்யோல்லாஸா அகாடமியின் குரு. திருமதி. இந்துமதி கணேஷ் மற்றும் அவரது மாணவர்கள் வழங்கும் நடன நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஆன்மீக குரு ஸ்ரீ முரளீதர சுவாமிகளின் வழிகாட்டலில் இயங்கிவரும் Global Organization for Divinity என்ற லாபநோக்கற்ற அமைப்புக்கு நிதியுதவும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 'மனிதநேயமும் தெய்வீகமும் இணைபிரியாதவை' என்ற கொள்கையோடு உலகெங்கிலும் சமூகத் தொண்டாற்றி வருகிறது. அமெரிக்காவில் G.O.D. ஆண்டுதோறும் ரத்ததான முகாம், எலும்பு மஜ்ஜை (Bone marrow drive) முகாம், மருத்துவப் பரிசோதனை முகாம், ஏழைக் குடும்பங்களுக்குக் கல்வியுதவி, பொருளுதவி போன்ற சேவைகளைச் செய்து வருகின்றது.

சுவாமிகளின் அருளாசியுடன் இந்தியாவில் 1995ல் நிறுவப்பட்ட "சாந்தீபனி குருகுலம் டிரஸ்ட்' ஏழைகளுக்கு அன்னதானம், துணிமணிகள், கல்வி, உடல்நலம் போன்றவற்றுக்கு உதவி வருகிறது.ஸ்ரீபெரும்புதூர் அருகே மஹாரண்யம் என்னும் கிராமத்தில் 'பிரேமிக வரதன் கிளினிக்' என்னும் இலவச மருத்துவ மையம் வாரந்தோறும் நடைபெறுகின்றது. இதனால் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பயனடைகிறார்கள். தவிர, வசதி இல்லாத இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. வேத பாடசாலையும் நடத்திவருகிறது

சென்ற ஆண்டில் கோவிந்தபுரம் என்னும் கிராமத்தில் G.O.D. USA மற்றும் நல்லுள்ளங்களின் உதவியோடு இலவச மருத்துவமனை ஒன்று கட்டியது. இங்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மையத்தின் சேவைகளை விரிவாக்கவும், சிறப்பு சிகிச்சைகளை (Specialty treatments) அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிய நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி இந்த விரிவாக்கத்துக்கு உதவும். நண்பர்கள் மற்றும் நல்லுள்ளம் படைத்தோரை இந்த உயரிய பணிக்கு நிதி திரட்ட உதவுமாறு G.O.D. கேட்டுக்கொள்கிறது.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: www.godivinity.org
தொலைபேசி: 18304GODUSA.

ஸ்ரீனி கோபாலகிருஷ்ணன்,
ஃப்ரிமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com