அமெரிக்காவில் வளர்ந்த பெண்ணா, தமிழ்க் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா, தமிழில் நன்றாகப் பேசுவாளா என்றுதான் கேட்பார்கள். ஆனால், ஜூலை ஆறாம் தேதியன்று சென்னை வாணி மஹாலில், ஸ்ருதி பிரபுவின் பாட்டுக் கச்சேரி கேட்க வந்தவர்கள், அமெரிக்காவில் வளர்ந்த பெண், தமிழில் பாடவேறு செய்கிறாளே என்று மூக்கில் விரலை வைத்தார்கள். இது அரங்கேற்றமா, இல்லை கச்சேரியா என்று வியந்தார்கள். சிறப்பு விருந்தினராக வந்த திருமதி. சுதா ரகுநாதன், "ஸ்ருதி, ஸ்ருதி சுத்தமாகப் பாடுகிறாள்" என்று பாராட்டினார்.
பிரபல வித்வான்கள் ராகவேந்தர் ராகவ் வயலினும், தஞ்சாவூர் முருகபூபதி மிருதங்கமும் வாசித்தது ஸ்ருதியின் பாட்டுக்கு மெருகூட்டியதோடு, நல்லாசியாகவும் அமைந்தது. சபையை இசையில் ஆழ்த்திய ஸ்ருதி, பியானோவும் வாசிப்பார். டென்னிஸ் வீரர். படிப்பிலும் சுட்டி. அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், தேசிய அளவில் கொடுக்கப்படும் National Merit Scholar விருது பெற்றவர்.
மிகுந்த சேவை உணர்வு கொண்ட ஸ்ருதி, 'சங்கர நேத்ராலயா', 'அக்ஷயா டிரஸ்ட்' ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்ததுண்டு. மிருகங்களின் நலன், வன்முறைக்கு ஆளான சிறாரின் நலன் என்று பலவகை நலப்பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பிளேனோ டீனேஜ் கோர்ட்டில் டீனேஜ் ஜூரராக இருந்து பின்னர் பதின்ம வயதினரின் வழக்குரைஞராகவும் சேவை செய்துள்ளார். நீச்சல், வாசிப்பு, நாவல் மற்றும் கவிதை எழுதுதல், சதுரங்கம் ஆகியவை இவரது பிற பொழுதுபோக்குகளாகும்.
கலிஃபோர்னியா மாநிலத்தில் தனது ஐந்தாம் வயதில், இசை கற்க ஆரம்பித்த ஸ்ருதி, டெக்சஸுக்கு இடம்பெயர்ந்தபோதும் இசைக் கல்வியைத் தொடர்ந்தார். கலிஃபோர்னியாவில் இருக்கும் தன் குருநாதரிடம் தொலைத்தொடர்பில் இசை பயின்றார். தனது குருநாதர்களான திருமதி. சங்கீதா சுவாமிநாதன், திருமதி. சாந்தி மகாதேவன் ஆகியோரை ஸ்ருதி நன்றியோடு நினைவுகூர்கிறார்.
வ. சௌந்தரராஜன், டாலஸ், டெக்சஸ். |