ஏட்டிக்குப் போட்டி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததா என்பதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் பாலத்தை அரசே எடுத்து நிர்வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

உடனடியாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதி சுனாமி நிதி வசூல் கணக்கையும், அதன் செலவு விவரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. தவிர, சில மாதங்களுக்கு முன்பு கல்லக்குடி சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டடம் கட்டத் தமிழக அரசு ஒரே நாளில் இரண்டு உத்தரவுகள் பிறப்பித்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு அமராவதி நதிப் பாலத்தை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புனரமைக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினால் ஏற்கெனவே பாலத்தைக் கட்டி, பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனத்துடனான கரூர் நகராட்சியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் அந்த பாலத்தை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கவரி வசூலிக்கப்படுவதும் உடனே கைவிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் தமிழகம் முழுவதும் மக்கள் அல்லல்படும் வேளையில் நிவாரணப் பணிகளில் ஆக்கபூர்வமாகச் செயல்படாமல், தமிழகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவதும், அறிக்கைப் போர் தொடுப்பதும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கேடிஸ்ரீ

© TamilOnline.com