இருக்கும் இடமே சொர்க்கம்!
காட்டில் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்தப் பூனைக்கு நகர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டும், சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. திடீரென ஒருநாள் காலை அருகிலுள்ள நகரத்தை நோக்கிக் கிளம்பியது.

நகரத்தை அடைந்தபோது முற்பகல் வேளையாகி இருந்தது. பல மைல் தூரம் நடந்தும், ஓடியும் வந்ததால் பூனைக்கு மிகவும் தாகமாக இருந்தது. தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தது. தூரத்தில் ஒரு குழாயில் நீர் வருவதைப் பார்த்த பூனை அதை நோக்கி ஓடியது.

குழாயின் அருகே சோம்பிப் படுத்துக் கிடந்த நாய் பூனையைப் பார்த்தது. உடனே எழுந்து தீவிரமாகக் குலைத்து பூனைமேல் பாய வந்தது. நாயின் சப்தம் கேட்டுப் பிற நாய்களும் அங்கே ஓடி வந்தன. பயந்து போன பூனை தண்ணீர்கூடக் குடிக்காமல் வேகமாக ஓடத் துவங்கியது. நாய்கள் குரைத்துக் கொண்டே பூனையைத் துரத்தின. பூனை ஒரு ஜன்னலின் மீது தாவி ஏறியது. அங்கிருந்து மொட்டை மாடிக்குச் சென்றது. சிறிது நேரம் பூனையைப் பார்த்துக் குரைத்த நாய்கள், அந்த இடத்தை விட்டுச் சென்றன.

நிம்மதிப் பெருமூச்சுவிட்ட பூனை அப்படியே சோர்ந்து படுத்துக் கண்களை மூடியது. சிறிது நேரத்தில் எங்கிருந்தோ உணவின் வாசனை அதன் மூக்கைத் துளைத்தது. உணவின் மணம் பசியை மேலும் தூண்டி விட்டது. பூனை எழுந்து வாசனை வந்த இடம் நோக்கிச் சென்றது.

ஒரு பாட்டி மொட்டை மாடியில் வடகம் பிழிந்துக் கொண்டிருந்தாள். பூனை அவற்றை எப்படியாவது உண்ணலாம் என எண்ணி மெள்ள மெள்ள அடியெடுத்து வந்தது. வேலையாக இருந்த பாட்டி திடீரென திரும்பிப் பார்த்தாள். பூனை வடகத்தைத் தின்னும் ஆவலுடன் வருவதைப் பார்த்தவள், தன் கையிலிருந்த கம்பைப் பூனையின் மீது எறிந்தாள். அது பூனையின் காலில் படுவதற்கு பதிலாக வாலில் பட்டது. "மியாவ், மியாவ்"என வலியில் அலறியபடி பூனை அந்த இடம் விட்டு ஓடியது.

"சே, என்னடா இது நகரம்! அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறதே, இங்கு வந்ததே தவறுதானோ" என நினைத்தது பூனை. அப்போது ஒரு வீட்டுப்பூனை எதிரே வந்தது.

"நீ யார், எங்கிருந்து வருகிறாய், உன்னை இதற்கு முன் பார்த்ததே இல்லையே!" என்றது வீட்டுப்பூனை.

"ஆமாம். நான் காட்டில் வசிப்பவன். சும்மா இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என வந்தேன். அப்பா... தெரியாத்தனமாக வந்து விட்டேன். இங்கே ஒரே நரக அனுபவமாக இருக்கிறது. நான் என் வாழ்க்கையில் எலிகளைக் கூட இந்த அளவுக்குத் துரத்தியதில்லை. நான் என் காட்டிற்கே திரும்பப் போகப் போகிறேன்" என்று சொல்லி நடந்த விஷயங்களை விளக்கியது காட்டுப் பூனை.

"ம்ம்ம்ம். சரிதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பிரச்சனை. அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். எல்லாம் பழகிப் போய்விடும். சரி சரி, நீ வந்ததுதான் வந்தாய். இதோ கீழ்வீட்டில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். அது ஆறியதும் அவர்களுக்குத் தெரியாமல் நாம் போய்க் குடிப்போம். பின் நீ உன் வழியில் போ; நான் என் வழியில் போகிறேன்" என்றது வீட்டுப்பூனை.

"சரி" என்றது காட்டுப் பூனை.

சிறிது நேரம் கழித்து இரண்டு பூனைகளும் திருட்டுத்தனமாகப் பாலைக் குடிக்கச் சென்றன. பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டுச் சிறுவன் பார்த்து விட்டான். உடனே அவன், தன் கையிலிருந்த கவண் வில்லால் பூனைகளின் மீது கற்களை எறிந்தான். இரண்டுக்குமே நல்ல அடி. "மிய்யாவ்" என்று கத்திக்கொண்டே இரண்டும் அவ்விடம் விட்டு ஓடின.

"போதும் போதும் இந்த நரகவாசம். இனி ஒருக்காலும் நான் நாட்டுப் பக்கம் வரவே மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே காட்டை நோக்கி ஓடியது காட்டுப்பூனை.

"இருக்கும் இடம்தான் அவரவர்க்கு சொர்க்கம்" என்றது வீட்டுப்பூனை!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com