பேராசிரியர் நினைவுகள்: சமர்ப்பணம்
ஊர்விட்டு ஊர் நேர்முகத் தேர்வுக்காக வந்தவர், வந்த இடத்தில் சாப்பிடும் சமயத்தில் சட்டை முழுதும் சாம்பார் கோலத்தில், இன்னும் அரைமணி நேரத்துக்குள் இன்டர்வியூவுக்குத் திரும்ப வேண்டிய நெருக்கடியில், அணிந்துகொள்ள மாற்றுச் சட்டை இல்லாமல், கைக்கு வெகு அருகில் வந்த வாய்ப்பை நழுவவிட்ட ஏமாற்றத்தில் மனமுடைந்து விம்மத் தொடங்கினார் என்று பார்த்தோம்.

அந்த மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிலர் அங்கேயே அறை எடுத்துத் தங்கியுமிருந்தார்கள். அப்படி ஒருவர் அந்த இளைஞர் அமர்ந்த பந்தியிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விம்முவதைப் பார்த்ததும் அருகில் வந்து விசாரித்துக் காரணத்தைத் தெரிந்து கொண்டார். "இவ்வளவுதானே! இதற்கென்ன இப்படி ஒரு மனத்தளர்ச்சி? என்னோடு மாடிக்கு வா. நம்ம ரெண்டு பேர் அளவும் ஏறத்தாழ ஒண்ணாத்தான் இருக்கும். சலவைக்குப் போய்வந்த வெள்ளைச் சட்டை நாலஞ்சு மேல இருக்கு. வா" என்று ஆதரவாகப் பேசி, மாடிக்கு அழைத்துச் சென்று, ஒரு அவசரக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்து, தன் சட்டைகளில் ஒன்றைத் தந்தார்.

இளைஞரும் அணிந்து கொண்டார். அளவு கச்சிதமாக இல்லாவிட்டாலும் ஏதோ போட்டுக் கொள்ளும்படி இருந்தது. நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். தேர்வில் வென்றார். வேலை கிடைத்துவிட்டது. மெஸ் அறைக்குத் திரும்ப வந்து சட்டையைத் திரும்பக் கொடுத்துவிட்டு, தன் சட்டையுடன் ஊர் திரும்பினார். பிறகு பணியில் சேர்ந்தார்.

அந்த இளைஞர் இந்த நிகழ்வைத் தான் வாழ்நாள் முழுவதும் மறக்கவே இல்லை. ஆசிரியர் இதைத்தான் ஒவ்வொரு முறையும் குறிப்பிடுவார். "அதுக்கப்புறம் எனக்குத் தெரிஞ்சு பதினேழு வருஷம், ஒவ்வொரு வருஷமும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் அந்த இளைஞரிடமிருந்து, சட்டையைத் தந்து உதவியவருக்கு ஒரு கடிதமும், ஏதேனும் ஒரு சிறிய பரிசுப் பொருளும் ஆண்டு தவறாமல் வரும். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கும் சட்டையைக் கொடுத்தவருக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது. அது தொடர்ந்துதான் இருக்கும் என்று நம்புகிறேன்" என்பார் பேரா. நாகநந்தி.

இதைச் சொல்லிவிட்டு ஒரு கேள்வியை எழுப்புவார். இந்த நிகழ்வைச் சற்று மாற்றிப் போட்டுப் பாருங்கள். சட்டையைக் கொடுத்தாரே, அவர் அப்படியென்ன உலகத்தில் இல்லாத மாபெரும் காரியத்தைச் செய்துவிட்டார்? தன் சட்டையைச் சுமார் மூன்று மணி நேரத்துக்கு இன்னொருவருக்கு அணியக் கொடுத்தார். அவ்வளவுதானே! சட்டையை தானமாகவா கொடுத்தார்? இரவல்தானே தந்தார்? இது என்ன பெரிய உதவி?

இந்தக் கோணத்திலும் சிந்திக்கலாம்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இளைஞருக்குப் பதவி உயர்வு கிடைத்த சமயத்திலோ, வேறு சமயங்களிலோ, சட்டையை இரவல் தந்தவர் "ஒண்ணு தெரியுமா? இவனுக்கு இன்டர்வ்யூ நேரத்துல சட்டைல சாம்பார் கொட்டிடுச்சு. பேய்முழி முழிச்சிட்டு நின்னுக்கிட்டிருந்தான். கடைசில நான்தான் என் சட்டையக் குடுத்து, இன்டர்வ்யூவுக்குப் போயிட்டு வாப்பான்னு அனுப்பி வச்சேன். இவனுக்கு இந்த வேலை கிடைச்சதுக்கே நாந்தான் காரணம்" என்றெல்லாம் பேசுகிறார், அதுவும் இந்த இளைஞரின் காதில் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக என்ன செய்வார்கள்? "இப்ப என்ன சார் பெரிசா செஞ்சிட்டீங்கன்னு அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிறீங்க? ஒரு நாலு மணி நேரம் போட்டுக்கறதுக்கு ஒரு சட்டை கொடுத்தீங்க. அவ்ளோதானே? எங்கூட வாங்க. என் சட்டையத் தரேன். ரெண்டு நாளைக்குப் போட்டுக்கொள்ளுங்கள். திருப்பித் தாருங்கள். இல்லைனா, பேசாம கடைக்கு வாங்க. அந்த சட்டைக்கு ஆறு சட்டை தைச்சுத் தரேன்" என்பது போலெல்லாம் பேச முடியுமல்லவா? அப்படிப் பேசும் உலகம் தானே இது!

ஆனால், அது இக்கட்டான நேரத்தில் செய்யப்பட்ட உதவி. அந்த நேரத்துக்கு அந்தச் சட்டை கிடைத்திராவிட்டால், அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கவும் முடியாது; அந்த வேலையில் அமர்ந்திருக்கவும் முடியாது. காலத்தால் செய்த உதவி என்பதும் இந்தச் செயலுக்குள் இருக்கிறது; பயன்தூக்கார் செய்த உதவியாகவும் இது இருந்திருக்கிறது. கொடுத்தவர் என்ன பயனை எதிர்பார்த்துக் கொடுத்தார்! வாங்கிக் கொண்டவர் எப்படிப்பட்ட இக்கட்டில் இருந்தார்! இந்த உதவியின் அளவு இன்னது என்று தேர யாரால் முடியும்? உதவியைச் செய்தவராலா, பெற்றுக் கொண்டவராலா! மனம் நெகிழ, 'ஐயா! நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி. இந்தச் சமயத்தில் நீங்கள் இதைச் செய்திராவிட்டால், என்ன நடந்திருக்குமோ, தெரியாது' என்று இரண்டொரு சொற்களை வழங்கிவிட்டு, அந்த நிகழ்வையே மறந்துவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இந்த உதவியின் தாக்கத்தை மனத்தின் அடி ஆழத்தில் வாங்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அதை நினைவில் வைத்திருந்து, ஆண்டுதோறும் அவருக்கு அந்த தினத்தன்று ஒரு கடிதமும் ஏதோ பரிசுப் பொருளும் அனுப்பியவரை எது அவ்வாறு செய்ய உந்தியது?

'உதவி செய்யப்பட்டார் சால்பு' என்பார் வள்ளுவர். அந்த உதவி, அளவினால் ஒன்றுமே இல்லாததுதான். பொருளளவில் கூட, அது இரவல் தரப்பட்டதுதான். ஆனால், செய்யப்பட்ட காலத்தால் அது குறிப்பிடத் தக்கதாகிறது. அந்த இக்கட்டான சமயத்தில் இன்னார் தனக்கு இவ்வாறு உதவினார் என்பதை வாழ்நாள் முழுவதும் மறவாமல் இருந்த அந்த நபரின் (எத்தனை காலம்தான் 'இளைஞராக' இருந்திருப்பார்!) உள்ளத்தில் நிறைந்திருந்த பண்பு நலத்தின் அளவை 'நீட்டி அளப்பதோர் கோலாக' இந்தச் சம்பவத்தின் பின்விளைவு நிற்கிறது. 'நீங்க நாலு மணிநேரம் போட்டுக்கறதுக்கு சட்டை கொடுத்தீங்களா, நான் உங்களுக்கு நாலு புது சட்டையாகத் திருப்பித் தருகிறேன்' என்பது உலக நடைமுறைதான்; மேற்படி நபரின் நெகிழ வைக்கும் செயலும், அவர் அந்த நிகழ்வைத் தன் உள்ளத்தில் பொக்கிஷமாகப் பொதிந்து வைத்திருந்த சால்பைச் சுட்டிக் காட்டும், இந்த உலகில் அரிதாகத் தென்படும் நடைமுறைதான்.

ஒரு சட்டையைச் சில மணி நேரம் அணிந்து கொள்வதற்காகத் தந்தவருக்கு, வாழ்நாள் முழுவதும் ஒருவர் நன்றி மறவாமல், செய்ததைத் தன் உள்ளத்தில் வைத்துப் போற்றிக் கொண்டிருந்தார் என்றால், இவ்வளவு பெரிய செல்வத்தை, நான் கேட்காமலேயே வாரிக் கொடுத்திருக்கும் வள்ளலாகிய ஆசிரியருக்கு நான் எவ்வளவு நன்றி பாராட்ட வேண்டும்! எவ்வளவு செய்தாலும் தகும்; போதாது.

அவருடைய நினைவைப் போற்றும் விதத்தில்தான் தற்போது, அவர் எனக்களித்த பெருங்கொடையாகிய கம்பராமாயணத்தை இந்தத் தலைமுறையினருக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலின் பேரில், நான் வசிக்கும் பெங்களூருவில் சிறிய அளவில் கம்பராமாயண முற்றோதலைத் தொடங்கியிருக்கிறேன். ஆசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், காற்றில் கரைந்து சென்றுவிடாமல், தற்செயலாக அவை ஒலிநாடாப் பதிவாக, பதினான்கு ஆண்டுகளுக்கப் பிறகு கிடைத்ததன் காரணத்தால்தான் இன்று கிடைத்த அளவில் அவற்றை இனிவரும் சந்ததியினர் பயனடையும் விதத்தில் வலையேற்ற முடிந்தது என்பதை நேரடியாக உணர்ந்தவன் என்பதால், இந்த கம்பராமாயண முற்றோதல் நிகழ்வை ஒளிப்பதிவாக யூட்யூபில் வலையேற்றிக் கொண்டிருக்கிறேன். முதல் வகுப்பின் பதிவு இங்கிருந்து



தொடங்குகிறது. கலந்து கொள்பவர்கள் ஒருமுறை ஒவ்வொரு செய்யுளாக வாய்விட்டுப் படிப்பதும், விளக்கம் தொடர்வதுமாய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மணிநேரம் வகுப்பு நடைபெறுகின்றது. கையில் ஒரு கம்பராமாயணப் புத்தகத்துடன் அமர்ந்துகொண்டு கவனித்தால், வகுப்பில் பங்குபெறும் அனுபவமும் கிடைக்கும். இந்த முயற்சிக்கு யூட்யூப் மூலமாகக் கிடைக்கும் உலகளாவிய பங்கேற்பு நெகிழ வைக்கிறது. இந்த முயற்சி பேராசிரியருக்கு நான் அளிக்கும் சமர்ப்பணம்.

வரும் இதழ்களில் வெவ்வேறு தலைப்புகளோடு சந்திப்போம். நான் பேசும் ஒவ்வொரு கருத்திலும் ஆசிரியரின் மொழி கலந்தே ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com