திருவையாறு ஐயாறப்பர்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் 15வது தலம் தஞ்சையில் அமைந்திருக்கும் திருவையாறு. நால்வர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர் உள்ளிட்ட பலரால் பாடப்பெற்ற பெருமையுடைய திருத்தலம். திருவாஞ்சியம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு ஆகிய ஐந்து தலங்களும் காசிக்குச் சமமானவையாகும். ஆறாவது தலம் திருவையாறு. திருவையாற்றுப் புராணம், ஸ்ரீ பஞ்சநத தோத்திரத்துவம் போன்றவை இத்தலத்தின் பெருமையைப் பேசுகின்றன. காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஐந்து நதிகள் பாய்வதால் ஐயாறு, திருவையாறு, பஞ்சநதி என்பது தலத்தின் பெயராக உள்ளது. தல இறைவனுக்கு ஐயாறப்பர், செம்பொற்சோதியார், ஜெப்பேசர், கயிலாய நாதர், பிரணார்த்திஹரர், பஞ்சநதீஸ்வரர், மகாதேவ பண்டாரகர் எனப் பல பெயர்கள் உள்ளன. சுயம்பு மூர்த்தம். லிங்கம் பிருதிவி லிங்கம் (மண்) ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தலத்து இறைவனைப் பலவாறாகப் புகழ்ந்து அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

இறைவியின் பெயர் அறம்வளர்த்த நாயகி, தர்மாம்பிகை, தர்மசம்வர்த்தினி, திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாச்சியார் என்பன. நின்ற திருக்கோலம். மேல்கரங்களில் சங்கு சக்கரத்துடன், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றி விஷ்ணுரூபமாகக் காட்சி தருகிறாள். காஞ்சி காமாட்சி போன்று இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்தமையால் அறம்வளர்த்த நாயகி என்றும் தர்மசம்வர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பாளை, "அரியல்லா தேவியில்லை; ஐயன் ஐயாறனர்க்கே" என்று புகழ்ந்துரைக்கிறார் அப்பர் பெருமான். காவிரியாறு, சூரிய புஷ்கரணி, சமுத்திர தீர்த்தம், தேவாமிர்த தீர்த்தம், பிந்தி தீர்த்தம் எனப் பல தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தில் காவிரியில் மூழ்கினால் மற்ற தலங்களில் துலாமாதம் முழுதும் மூழ்கிய பலன் உண்டு. காவிரிக்கரையின் அருகே மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா கண்கொள்ளாக் காட்சி. வில்வம் தலவிருட்சம். இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குட்பட்டது.

நாவுக்கரசர் காளத்தியப்பரை வணங்கியபின் கயிலைநாதரையும் தரிசிக்கக் கடும் வழிகளைக் கடந்து சென்று உடலும் உள்ளமும் அயர்ந்தபோது, ஈசனே ஒரு முனிவர் உருக்கொண்டு, "கயிலை செல்வது கடினம். மானுட உடல் கொண்டு தரிசிப்பது அரிது. திரும்பிச் செல்" என்றார். நாவுக்கரசர், "கயிலையைக் காணாமல் மீளேன்" என்று கூற, அவரது உள்ள உறுதி கண்டு ஈசனும் மனமிரங்கி, "இங்கு காணப்படும் பொய்கையில் மூழ்கி எமது திருக்கோலத்தை ஐயாற்றில் கண்டு தரிசிக்க" என்றருளினார். நாவரசரும் அவ்வாறே செய்து, ஐயாற்றில் கயிலை நாதனின் திருக்காட்சி கண்டு, " மாதர் பிறைக் கண்ணியானை" என்ற பதிகம் பாடித் தரிசித்தார். ஆடி அமாவாசை அன்று அப்பர் சுவாமிகளுக்கு கயிலைநாதர் காட்சி அளித்த விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இக்கோயில் சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவீதிகள் உள்ளிட்டு 5 பிரகாரங்கள் கொண்டது. சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. அந்தத் திருச்சுற்றிலேயே உமாமகேஸ்வரர், சங்கர நாராயணர், பரிவார மூர்த்தங்கள், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளனர். இரண்டாம் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் ஆலயம், அருகில் ஜப்பேசுர மண்டபம் உள்ளது. அதில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதிவிநாயகர், நவகிரகங்கள் எழுந்தருளியுள்ளனர். கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. பூலோக கைலாயமாகிய இங்கு தெற்கு கோபுரவாயில் வழியாக இறைவன் திருவிழாவின் போது வீதி உலா வருவார். நான்காம் திருச்சுற்றில் சூரிய புஷ்கரணி குளம், அப்பர் கயிலையைக் கண்டு தரிசித்த தென்கயிலாயமும், வடகயிலாயம் என்னும் ஓலோக மாதேவிச்சுரமும் உள்ளன. தென்கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதி உள்ளது. ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் உள்ளார். இங்கு குங்கிலியமிட்டு வழிபாடு செய்கின்றனர். குங்கிலியப் புகை பரவும் எல்லைவரை விஷம், எமபயம் ஏதுமில்லை என்பது நம்பிக்கை. ஆட்கொண்டேசரே மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

சுவாமி கோயிலுக்கு ஈசான்யத்தில்
அம்மன் ஆலயம் உள்ளது. இதற்கு இரண்டு சுற்றுக்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு. இங்குள்ள முக்திமண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனி ஆகியோர் உபதேசம் பெற்றனர். இந்த மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை. சோழர்காலக் கல்வெட்டுக்கள் இவ்வாலயத்தில் மிகுதியாக உள்ளன. இத்தலத்துச் சிற்பங்கள் பழமையானவை. சித்திரை மாதப் பௌர்ணமி விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இறைவன், இறைவியுடன் ஏழூர்களுக்கு வலம் வருவார். மக்களும் உடன் வலம்வருதல் கண்கொள்ளாக் காட்சி. இவ்விழாவை மக்கள் திருநந்தி தேவரின் திருமண ஊர்வலம் என்பர். தமிழ், வடமொழி, இசை, நாட்டியம் என நுண்கலைகளை வளர்க்கும் புகழ்பெற்ற அரசர் கல்லூரி இத்தலத்தில் உள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறர்’ என்று கூவினால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com