நமைச்சலும் குடைச்சலும் (Neuropathy)
கை, கால் நரம்புகள் தளர்ச்சியால் சிலருக்கு நமைச்சலும் குடைச்சலும் ஏற்படுவதும், மரத்துப் போவதும் இயல்பு. சிலருக்கு வலி ஏற்படலாம். இந்த நரம்புத் தளர்ச்சி பல காரணங்களால் உண்டாகலாம். மணிக்கட்டுச் சுருங்கை நோய்க்குறிகள் (Carpal Tunnel Syndrome), நீரிழிவால் நமைச்சல், வைட்டமின் B12 குறைவால் ஏற்படும் நமைச்சல் இவற்றைப் பற்றி அலசுவோம்.

மணிக்கட்டுச் சுருங்கை நோய்க்குறிகள்
இந்த வகை நரம்புத் தளர்ச்சி கைகளில், அதிலும் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் பகுதிகளைப் பாதிக்கும். நமநம என்று நமைச்சல், சில நேரங்களில் எரிச்சல், அல்லது வலி ஏற்படலாம். இந்த வலி வேதனை இரவில் அதிகமாகத் தெரியலாம். பகல் வேளையில் அவரவர் வேலையைப் பொறுத்து அதிகமாகலாம். கணினி அல்லது கை வேலை அதிகம் செய்பவருக்கு நமைச்சல் அதிகமாக இருக்கலாம். சிலருக்கு வலி குறைவாகவும் நமைச்சல் அதிகமாகவும் இருக்கும். இது ஒரு கையில் மட்டும் அல்லது இரண்டு கைகளிலும் தாக்கலாம்.

இந்த வகை நரம்புத் தளர்ச்சி கை மூட்டில் இருக்கும் மீடியன் என்ற நரம்பு நசுக்கப்படுவதால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகம் இருந்தாலோ, நீரிழிவு அல்லது தைராய்டு நோய் இருந்தாலோ ஏற்படலாம். ஒரு சிலருக்கு எந்தக் காரணம் இல்லாமலும் இந்த நரம்புத் தளர்ச்சி உண்டாகலாம். Carpal Tunnel என்பது கைகளின் மணிக்கட்டில் எல்லோருக்கும் இருக்கும் ஒரு சுரங்கம். அதன் வழியாக நரம்புகள் செல்கின்றன. இதில் வீக்கம் அல்லது அடைப்பு இருந்தாலோ இந்த நரம்பு நசுங்கலாம். இதனால் நமைச்சல் ஏற்படும். முதலில் குறைவாக இருக்கும் நமைச்சல் நாளாக ஆக அதிகமாகலாம். நரம்பு அதிகமாக நசுங்கினால், கைகளின் சக்தி குறையலாம். கோப்பை, தட்டு போன்றவற்றைத் தூக்க முடியாமலும், காய்கறி நறுக்கமுடியாமலும் சிரமப்படலாம். கணினியில் வேலை செய்ய முடியாமல் போகலாம். இது ஒரு கையை மட்டும் தாக்குவதால் ஒரு சிலருக்கு பக்கவாதமோ என்ற பயம் வரலாம். ஆனால் திடுமென்று தாக்காமல் சில வாரங்களாக, மாதங்களாக, வருடக் கணக்கில் இந்த நோயின் தீவிரம் அதிகமாகும் தன்மை பக்கவாதத்தில் இருந்து வேறுபடும். ஒரு சிலருக்கு இந்த வகை நரம்புத் தளர்ச்சிதானா என்று ஊர்ஜிதம் செய்ய நரம்புகளின் வேலையைக் கணிக்கும் பரிசோதனை தேவைப்படலாம். ஆனால் பலருக்கு மருத்துவர்கள் பார்த்ததுமே சொல்லிவிடுவர். பரிசோதனைகள் தேவை இருக்காது.

சிகிச்சை
தீவிரம் குறைவாக இருக்கும்போது, இந்தத் தளர்ச்சிக்கு கைகளில் மாட்டிக் கொள்ள உறை (Splint) மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை இரவில் அணிந்து கொள்ளலாம். Gabapentin மருந்தும் வழங்கப்படலாம். ஆனால் மணிக்கட்டுச் சுரங்க அடைப்பினால் வருவதால் மருந்துமூலம் தீர்வு கிடைப்பது கடினம். ஒரு சிலருக்கு corticosteroid மருந்தை ஊசி வழியே செலுத்தலாம். இதில் 4 முதல் 6 மாதங்களுக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். பின்னர் திரும்பவும் நமைச்சல் அதிகமாகலாம். இது மணிக்கட்டுச் சுரங்கத்தின் வீக்கத்தைத் தற்காலிகமாக குறைப்பதால் ஏற்படும் நிவாரணம்.

இதற்கு அறுவை சிகிச்சை அவசியம். இது மிகவும் எளிய சிகிச்சை. சுரங்கத்தின் வாயை லேசாகக் கீறி நசுங்கியுள்ள நரம்பை விடுபட வைப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கைகளில் முழுதும் சக்தி இழந்த பின்பு அறுவை சிகிச்சை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்காமல் போகலாம். அதனால் தீவிரம் அதிகமாவதற்குள் அறுவை சிகிச்சை செய்துவிடுவது நல்லது. எளிய அறுவை சிகிச்சை என்பதால் மயக்க மருந்து தேவைப்படாது. கை மரத்துப்போக ஊசி போட்டு இதைச் செய்துவிடலாம். ஆனால் சில வாரங்களுக்கு கைகளுக்கு ஓய்வு தேவை. இதை எலும்பு முறிவு நிபுணர் செய்வார்.

நீரிழிவு நோய் நரம்புகளின் தளர்ச்சி (Diabetic Neuropathy)
நரம்புத் தளர்ச்சி பல காரணங்களால் ஏற்படலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்குக் கைகால் மரத்துப் போவதும், நமைச்சல் ஏற்படுவதும் வழக்கம். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு வரும். Hemoglobin A1c என்பதன் அளவு அதிகமாக இருந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் நடக்கும் போது கால்களில் உணர்ச்சி குறைவாக இருக்கலாம். கண்ணாடி மேல் அல்லது கற்கள் மேல் நடப்பது போலத் தோன்றலாம். இதனால் இவர்களுக்குக் காலில் குத்தினாலோ, அடிபட்டாலோ வலி தெரியாமல் போகலாம். அதனால் இவர்கள் காலணி இல்லாமல் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கால்களைச் சோதனை செய்து கொள்ளவேண்டும். அடி பட்டிருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். கைகளில் உணர்ச்சி குறைவதால் சூடு பட்டுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கை கால்களில் ஏற்படும் இந்தத் தளர்ச்சி glove and stockings போட்டுக் கொண்டது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கு மருந்துகள் மூலம் சிகிச்சை செய்யலாம். நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரியாக வைப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம். அதையும் மீறி இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் Gabapentin என்ற மருந்து கொடுக்கப்படும். இதை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் B12 குறைவால் எற்படும் நமைச்சல்
வைட்டமின் B 12 குறைவாக இருந்தாலும் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படலாம். இவர்களுக்கு ஒரு சில நரம்புகள் பாதிக்கப்படலாம். அதனால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மாறி, மாறி நரம்புகள் பாதிக்கப்படும். இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை மாத்திரை மூலமாகவோ ஊசி மூலமாகவோ சரிப்படுத்தலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு B 12 குறைவாக இருக்க வாய்ப்பு அதிகம். அதனால் இவர்களுக்கு இந்த வைட்டமின் தேவைப்படலாம். ஒரு சிலருக்கு மாத்திரையை ரத்தத்தில் உறிஞ்சிக்கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும். அதனால் ஊசி மாதம் ஒருமுறை தேவைப்படும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com