கவியோகி சுத்தானந்த பாரதியார்
'மகரிஷி', 'கவியோகி' என்றெல்லாம் போற்றப்பட்ட மகாகவிஞர் சுத்தானந்த பாரதியார். இவர் மே 11, 1897ல், சிவகங்கையில் ஜடாதர அய்யருக்கும், காமாட்சி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். தந்தை வேதம் கற்றவர், சிவபக்தர், உபன்யாசகரும்கூட. குடும்பமே சுதந்திரப் போராட்ட உணர்விலும் ஆன்மீகத்திலும் பற்றுக்கொண்ட ஒன்று. தந்தை ஓதிய வேதத்தையும், இதிகாச, புராணச் சொற்பொழிவுகளையும் கேட்டு வளர்ந்த வேங்கட சுப்பிரமணியனுக்கு ஆன்மீக ஆர்வம் இயல்பாகவே இருந்தது. ஐந்து வயதில் அரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பின் சிவகங்கை அரசர் பள்ளியில் பயின்றார். பள்ளியின் கட்டுப்பாடும், பாடங்களும் அவரது ஆர்வத்தைக் குன்றச் செய்தன. வீட்டிலிருந்தபடி தானாகவே பயில ஆரம்பித்தார். தெய்வசிகாமணிப் புலவர் வேங்கட சுப்பிரமணியனுக்குத் தமிழ் இலக்கண, இலக்கியம் சொல்லித் தந்தார். எட்டாம் வயதில், மதுரை மீனாக்ஷியம்மன் ஆலயத்திற்குச் சென்றபோது அன்னையின் பேரருளால், குண்டலினிக் கனல் தூண்டப்பெற்றது. ஆசுகவியாக கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றார்.

அம்மா பரதேவி தயாபரியே
சும்மா வுலகின் சுமையாகவிரேன்
எம்மாத் திரமுன் பணியிங்குளதோ
அம்மாத் திரம்வைத் தடிசேர்த்தருள்வாய்

என்ற கவிதையைப் பாடினார். அதுதான் அவரது முதல் கவிதை. அதுமுதல் பல பாடல்களை எழுதினார். கம்பனைக் கற்றுத் தேர்ந்தார். வேதம், உபநிஷத்துக்கள், பிரம்மசூத்திரம், ஸம்ஹிதை, ஸ்மிருதி முதலியவற்றைக் கற்றறிந்தார். ஷேக்ஸ்பியர், டென்னிஸன், பைரன், மில்டன், ஷெல்லி போன்றோரையும் படித்தறிந்தார். தாய்வழிச் சிறிய பாட்டனார் பூர்ணாநந்தர் இவருக்கு யோகம் பயிற்றுவித்தார். இமாலய மகான் ஞானசித்தர் 'சுத்தானந்தம்' என்று தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசமும் அருளினார்.

தொழில் நிமித்தமாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து அதை முதல் வகுப்பில் தேறிய சுத்தானந்தர், காட்டுப்புத்தூர் பள்ளியில் ஆசிரியர் பணி மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இயற்றி, இசையமைத்து மாணவரிடையே பரப்பினார். பாடசலையைச் சிறந்த குருகுலமாக மாற்றி அமைத்தார். தேவகோட்டையில் சாரண ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களை ஒழுக்கசீலராக வாழ வலியுறுத்தினார். மகாத்மா காந்தியைச் சந்தித்தது சுத்தானந்தரின் வாழ்வில் திருப்புமுனை ஆனது. தனது பணியை உதறிவிட்டு ஊரூராகச் சென்று காந்திஜியின் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார். கிராம மக்கள் மனதில் காந்திய விதை விதைத்ததில் சுத்தானந்தருக்கு மிகப் பெரிய பங்குண்டு. திலகர், நேதாஜி, வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதியார், திரு.வி.க., செண்பகராமன் பிள்ளை போன்றவர்களுடன் நெருக்கமும் நல்ல நட்பும் கொண்டிருந்தார். காந்திஜியின் ஆலோசனைப்படி திரு.வி.க.வுடன் இணைந்து கிராம முன்னேற்றப் பணி, மதுவிலக்கு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல், பெண்கள் மறுவாழ்வு போன்ற சமூகப் பணிகளை மேற்கொண்டார். ஞான வேட்கை கொண்டிருந்த இவர், குடும்பத்தார் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது அதனை மறுத்துத் துறவு பூண்டார். சமய நெறிகளை ஆராயத் துவங்கினார். அனைத்து மதங்களும் கூறுவது ஒரே இறைவனைத்தான் எனத் தன் அனுபவத்தில் உணர்ந்த பின், அந்த நெறியைப் பரப்புவதற்காக 'சமரச போதினி' என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார். வ.வே.சு. ஐயரின் அழைப்பின்பேரில் சேரன்மாதேவியில் அவர் நடத்திவந்த குருகுலத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

எழுத்திலும் பேச்சிலும் வல்லவர் சுத்தானந்தர். அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் 1908 முதல் 1924 வரை நடத்தி வந்த 'விவேகபோதினி' பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். பிரகாசத்தின் 'ஸ்வயராஜ்யா' பத்திரிகைக்கும் சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார். வை. கோவிந்தன் நடத்திய 'சக்தி' பத்திரிகையில் பணியாற்றிய இவர், வ.வே.சு. ஐயர் நடத்திய 'பாலபாரதி'யிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். 'சுயராஜ்யா', 'இயற்கை' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார். ஆன்ம தாகத்தால் இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சுத்தானந்தர் சித்தாரூடர், ஞானசித்தர், மேஹர் பாபா, ஷிர்டி பாபா, சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மஹரிஷி, அரவிந்தர், அன்னை எனப் பல மகான்களைச் சந்தித்து ஆசி பெற்றார். ரமணாச்ரமத்தில் சிலகாலம் தங்கி ஆன்ம விசாரம் செய்ததுடன், பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். பின் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றவர் அங்கேயே தங்கி மோனத்தவம் மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் அதனைக் கலைத்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டார். பின் மீண்டும் பாரதமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல ஆன்மீக, சமய, இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்யர் ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள், சுத்தானந்தருக்கு 'கவியோகி', 'பாரதி' என்னும் பட்டங்களை அளித்து கௌரவித்தார். இமயஜோதி சுவாமி சிவானந்தர் 'மஹரிஷி' என்றும் சிறப்புப் பட்டம் அளித்துப் பாராட்டினார்.

கதை, கவிதை, உரைநடை, மேடை நாடகம், தமிழிசை, திரையிசை எனப் பல களங்களிலும் செயல்பட்டவர் சுத்தானந்தர். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருக்கிறார். மருது பாண்டியர்களைக் கதை மாந்தராக்கி 'சுதந்திரக் கனல்' என்ற நாவலை எழுதியிருக்கிறார். விக்டர் ஹியூகோ எழுதிய 'லே மிசராபிலே' என்கிற நாவலைத் தமிழில் 'ஏழைபடும்பாடு' என்ற தலைப்பில் தந்திருக்கிறார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது. 'லாஃபிங்மேன்' என்ற கதை தமிழில் 'இளிச்சவாயன்' ஆனது.

"எப்படிப் பாடினரோ", "இல்லையென்பான் யாரடா", "அருள் புரிவாய் கருணைக் கடலே" போன்ற சுத்தானந்தரின் பாடல்கள் புகழ்பெற்றவை. இவருடைய பாடல்களைத் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எம். தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என். பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன், என்.சி. வசந்த கோகிலம், பி.யூ.சின்னப்பா, சி.எஸ். ஜெயராமன், உள்ளிட்ட புகழ்பெற்ற பலர் பாடியுள்ளனர். 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 'சுதர்சனம்', 'மரகதம்', 'பொன்வயல்' உட்படப் பல திரைப்படங்களுக்கு இவர் பாடல் எழுதியுள்ளார். இவர் நூல்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது 'பாரத சக்தி மகாகாவியம்'. இதனைத் தனது "ஆயுட்காவியம்" என சுத்தானந்தரே குறிப்பிட்டுள்ளார். இது ஐம்பதாயிரம் வரிகள் கொண்ட ஒரு கவிதைப் பேரிலக்கியம். இது தவிர இவர் எழுதிய 'யோகசித்தி', 'கீர்த்தனாஞ்சலி', 'மேளராகமாலை' போன்ற நூல்களும் குறிப்பிடத் தகுந்தவை. தமிழ் தவிர சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு என பல மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார். 'யோகசித்தி' ஃப்ரெஞ்சு, சமஸ்க்ருத மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இது குறட்பாக்களிலான நூல். 'The Gospel of Perfect Life' என்னும் பெயரில் இந்நூல் சுத்தானந்தரால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

சுத்தானந்தர் செய்த மற்றொரு குறிப்பிடத் தகுந்த சாதனைப் பணி, திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததது. அதற்கு இவரே தகுதியானவர் என்று சுட்டியவர் அறிஞர் அண்ணா. அப்புத்தகம் 1968ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தெய்வநெறிக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது. 'சோவியத் கீதாஞ்சலி' என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது. தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நிறுவிய ராஜராஜன் விருதை முதன் முதலில் பெற்றவர் சுத்தானந்த பாரதியார்தான். 'பாரத சக்தி மகாகாவியம்' நூலுக்கு அப்பரிசு கிடைத்தது. சுத்தானந்தர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து மிகச் சிறந்ததெனச் சில அறிஞர்களால் போற்றப்படுகிறது. இவரது தமிழ் இலக்கியப் பணிக்காக மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.

சுத்தானந்தர் ஜெனிவா, பெர்லின் நகரங்களில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டார். சோவியத் யூனியன், ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஃபிஜி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும், அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆஸ்திரியாவிலும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டார். தன் வெளிநாட்டு அனுபவங்களை 'நான் கண்ட ரஷ்யா', 'நான் கண்ட ஜப்பான்' போன்ற தலைப்புகளில் நூலாக்கியிருக்கிறார்.

தம் இறுதிக்காலத்தில் அமைதியான யோக வாழ்வு வாழ விரும்பிய சுத்தானந்தர், யோக சமாஜத்தை சென்னை அடையாற்றில் துவங்கினார். பின்னர் 1977ல் தமது சொந்த ஊரான சிவகங்கையில் 'சுத்தானந்த யோக சமாஜம்' நிறுவினார். 1979ல் சுத்தானந்த தேசிய வித்யாலய உயர்நிலைப்பள்ளியை அங்கு அமைத்தார். அருகிலேயே தமது தவக்குடிலை அமைத்துக் கொண்டு தமது சமய, இலக்கிய, ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்த சுத்தானந்தர் மார்ச் 7, 1990ல், 93ம் வயதில் மஹாசமாதி அடைந்தார். தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு முன்னோடி கவியோகி, மஹரிஷி சுத்தானந்த பாரதியார்.

(தகவல் உதவி: பெ. சுபாசு சந்திர போசு எழுதிய 'கவியோகி சுத்தானந்த பாரதியார்', சாகித்ய அகாதமி வெளியீடு)

பா.சு.ரமணன்

© TamilOnline.com