சந்தர்ப்பங்கள்.... சபலங்கள்....
அன்புள்ள சிநேகிதியே,

நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன். திருமணம் ஆகி 14 வருடங்கள். பெண் ஒன்று, வயது 12. பையன்கள் இரட்டை-வயது 7. கணவருக்கு அடிக்கடி வெளியூர் போகும் நிலைமை. ஒரு professional ஆகவும், தாயாகவும் இருப்பதால் அடிக்கடி மற்ற குடும்பங்களின் உதவியை நாடும் நிலைமை. அவர்களுக்கு நானும் அதேபோல உதவி செய்வதுண்டு. 4, 5 குடும்பங்கள்-அதே வயதுக் குழந்தைகள் இருப்பவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். குழந்தைகள் 'sleep over' என்று வருவார்கள், போவார்கள். பிறந்தநாள் பார்ட்டிகள் இருக்கும் எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எனக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை. இந்த 5 குடும்பங்களில் ஒரு தோழியின் கணவர் எப்போது பார்த்தாலும் என்னை சிலாகித்துப் பேசுவார். 7, 8 வயது பெரியவர். நானும் அவற்றை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். அந்தத் தோழியும் நல்ல மாதிரி. ஆகவே, எதுவும் விகற்பமாகப் படவில்லை.

அப்புறம் 6 மாதம் முன்னால் குடும்பங்கள் சந்திப்பில், நான் சமையலறையில் பழம் நறுக்கிக் கொண்டிருந்தபோது 'இரு நான் உதவி செய்கிறேன்' என்று பின்னாலிருந்து சுதந்திரமாக என் கையைப் பிடித்துக் கத்தியை வாங்கிக்கொண்டார். எனக்கு மண்டையில் சுரீரென்று 'ஏதோ' அடித்தது. எனக்கு அந்த அண்மையும் பிடிக்கவில்லை. கையைப் பிடித்த விதமும் ஒரு மாதிரியாக இருந்தது. அவரிடம் கத்தியைக் கொடுத்துவிட்டு நான் மற்றவர்களுடன் கலந்துகொண்டேன். என் மனதிற்கு நானே "அவர் நல்ல மனிதர். ஏதோ ஒரு உரிமை எடுத்துக் கொண்டார். நாம் பெரிதுபடுத்தக் கூடாது" என்று சொல்லிக்கொண்டேன். மனம் கொஞ்சம் நிம்மதியானது. சகஜமாக இருக்க ஆரம்பித்தேன்.

ஆனால் போன வாரம் 'Barbecue' இருந்தது அதே தோழியின் வீட்டில். குழந்தைகளை அழைத்துக்கொண்டு நான்மட்டும் போயிருந்தேன். கணவர் ஊரில் இல்லை, நன்றாகப் போய்க்கொண்டிருந்தது பார்ட்டி. ஒரு குழந்தைக்கு டவல் தேவைப்பட்டது என்பதற்காக நான் அவர்கள் மாடிக்குச் சென்று டவலை எடுத்துக் கொண்டு திரும்பும்போது, அந்த மனிதர் என்னை அப்படியே ஏதோ எதிரில் மோதுவதுபோல வந்து கட்டிக்கொண்டார். வெலவெலத்துப் போய்விட்டேன். அப்படியே திமிறிக்கொண்டு கீழே பரபரவென்று வந்தேன். டவலால் அந்தக் குழந்தையை நன்றாக அழுந்தத் துடைத்தபடியே என்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தேன்.

என் இரட்டையர்களைத் தனியாகக் கூப்பிட்டு, "அப்பா வந்து கொண்டிருக்கிறார். Big F போகப் போகிறோம்" என்று ஆசைகாட்ட அவர்கள் உடனே கிளம்பத் தயாராகினர். என் பெண்ணுக்கும் சந்தோஷம். என் தோழியிடம் அதே காரணம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

அப்புறம் இரண்டுமுறை அந்தத் தோழி சகஜமாகக் கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். நானும் அவளும் அடுத்த மாதம் வரும் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்குப் பிளான் போட்டிருந்தோம். அவள் கணவர் நிறைய உதவி செய்வதாகக் கூறியிருக்கிறார் என்றாள். எனக்கு நிலைமை இன்னும் சங்கடமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை எவ்வளவு பக்குவமாக எடுத்துச் சொன்னாலும் பின்விளைவுகள் இருக்கும் என்று என் கணவரிடமோ, அந்தத் தோழியிடமோ சொல்லவில்லை. அந்தக் குடும்பத்தைத் தவிர்க்கவும் முடியாது. மற்றக் குடும்பங்களின் தோழமை, குழந்தைகளின் நட்பு எல்லாம் இழந்துவிடுவேன். அவரையே கூப்பிட்டு விளாசலாம் என்று நினைத்தேன். அப்புறம் அவர் என்னைப்பற்றியே கேவலமாகப் பேசிக் கொண்டிருப்பார். இதுபோல முன்னால் எனக்கு ஒரு சம்பவம் நேர்ந்திருக்கிறது. அதன் அடிப்படையில் எழுதுகிறேன். எல்லா வழிகளையும் யோசித்தேன். ஒன்றும் புரிபடவில்லை. சிக்கல் அதிகம் இல்லாமல் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று உங்களிடமிருந்து ஆலோசனை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

நீங்கள் நிறைய யோசித்திருக்கிறீர்கள். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் திறமையுடன் அனுபவம், விவேகம், தைரியமும் சேர்ந்துதான் இருக்கும். நீங்களே அழகாக இந்த ஒரு மாதத்தில் வழி கண்டுபிடித்து விடுவீர்கள். இருந்தாலும் எனக்குத் தோன்றும் கருத்துக்களைச் சுருக்கமாக எழுதி விடுகிறேன்.

* சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்போது சபலங்கள் தலைதூக்கும். நீங்கள் அதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

* அந்த ஒரு கணநேர சபலத்தை நினைத்து அவரே குற்ற உணர்ச்சியில் இருந்து கொண்டிருப்பார். இனி, அவரே நிதானமாக நடந்துகொள்ளப் பார்ப்பார். அவர் அப்படி பவ்யமாக இருந்தாலும் உங்கள் மனம் அவரைப் பார்த்தவுடன் ஒரு red alert modeக்குப் போய்விடும். நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

* அவர் மாறவில்லை. உங்களுடைய தோற்றம் அவருடைய சபல உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டே வருகிறது; அவர் அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அவருக்கு வாய்மொழியால் எச்சரிக்கை கொடுத்துவிட்டு நீங்களும் சிலநாள் சந்தர்ப்பத்தைப் பொறுத்து நிகழ்ச்சிகளில் உங்கள் பங்கேற்பைத் தீர்மானிக்கலாம்.

* சில சமயம் சிலர் பார்வை கொடுக்கும் அந்த எச்சரிக்கையிலேயே மனிதர்கள் அடங்கிப் போய்விடுவார்கள். அந்தப் பார்வை ஓர் அபாய உணர்வை ஏற்படுத்த, ஏற்படுத்த அப்புறம் அந்த நபரைப் பார்த்தாலே அவர்களுக்கு அந்த உணர்வு ஏற்பட்டுவிடும். பிறகு, அந்தப் பார்வைக்குத் தேவை இருக்காது.

* You are an intelligent person. எல்லா உபாயங்களையும் கையாண்டு பாருங்கள். நீங்களே புதிதாக யோசித்து வழிகண்டுபிடித்து குடும்பங்களின் ஒற்றுமை மாறாமல், அவரும் சரியாகப் போய்விட்டிருந்தால், மறுபடியும் இந்தப் பகுதிக்கு எழுதுங்கள். மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com