அறைக்குள் நுழைந்ததுமே எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுடன் அவர் எடுத்துக்கொண்ட படங்கள் நம்மை வரவேற்கின்றன. மறுபுறம் திரையுலகப் பிரபலங்களுடனான படங்கள். சுவர்முழுதும் மிக அழகான, பிரம்மாண்டமான ஓவியங்கள். ஒரு பெரிய அலமாரி நிறையப் புத்தகங்கள். 'வாங்க' என்று புன்னகையோடு வரவேற்கிறார் நடிகர் ராஜேஷ். தமிழக அரசின் 'கலைமாமணி', நடிகர் சங்கத்தின் 'கலைச்செல்வம்', 'சினிமா எக்ஸ்பிரஸ்', 'தினகரன் நாளிதழ்' விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இருமுறை வென்றவர். தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், ஆராய்ச்சியாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் ராஜேஷ். அவரது சந்திப்பிலிருந்து...
கே: நடிப்பிற்கான விதை விழுந்தது எப்போது, எப்படி? ப: என் சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அணைக்காடு. வளர்ந்தது திண்டுக்கல்லில். பள்ளி ஆய்வுத் துறையில் என் அப்பா ஒரு கிளார்க்காக இருந்தார். அம்மா ஹையர் கிரேடு ஆசிரியர். அம்மா கூடவே போய் ஸ்கூலில் உட்கார்ந்திருப்பேன். படிப்பேன். அம்மாவுக்கு கலைகளில் ஆர்வம் உண்டு. ஆனால் சினிமா எல்லாம் அதிகம் பார்க்க மாட்டார்கள். நான் படித்த வடமதுரை ஸ்கூலில் ஒரு டிராமா போட்டார்கள். அதில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' படப் பாடலுக்கு ஆடினோம். எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. "நன்றாக நடிக்க முடியவில்லையே, முதல் பரிசு வாங்க முடியவில்லையே" என்று அழுதேன். சினிமா பற்றி அதிகம் தெரியாத காலம் அது. ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று மக்கள் பேசிக் கேட்டிருக்கிறேன். அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்திருந்த அந்தக் காலத்தில் காமராஜர் என்பவரும் ஒரு நடிகர் என்றே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த 'தாய்க்குப் பின் தாரம்'. பின்னர் பல படங்கள் பார்த்தாலும் நினைவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 11 வயதில் பார்த்த 'மதுரை வீரன்'தான். எம்.ஜி.ஆர். வந்ததுமே எல்லோரும் தியேட்டரில் எழுந்து நின்று கை தட்டினார்கள். அதைப் பார்த்ததும் நானும் எம்.ஜி.ஆர். போலப் புகழ்பெற்ற நடிகன் ஆக வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அடிப்படையில் நான் மிகவும் கூச்ச சுபாவி. ஒல்லியாக இருப்பேன். மாநிறம்தான். ஆனாலும் சினிமா நடிகன் ஆகும் ஆர்வம் நான் வளர வளரக் கூடவே வளர்ந்தது. என்னைப் புரட்டிப் போட்ட படம் 1960ல் நான் பார்த்த 'டென் கமாண்ட்மென்ட்ஸ்'. ஒரு படத்தை இப்படியெல்லாம் எடுக்க முடியுமா என்று பிரமித்துப் போய் விட்டேன். எனக்கு திக்குவாய் இருந்தது. கலைஞர், சிவாஜிக்காக எழுதிய 'மனோகரா', 'இல்லறஜோதி', 'பராசக்தி' வசனங்களை மணிக்கணக்கில் பேசிப் பழகியதால் படிப்படியாக வாய் திக்குவது நீங்கியது. வசனம் பேசுவது, நடிப்பது என்று அந்த உலகத்திலேயே வாழ்ந்தேன். எனக்கு விளையாட்டிலோ மற்ற விஷயங்களிலோ ஈடுபட முடியவில்லை. விளையாட்டு என்றால் தூசி அலர்ஜி. சினிமாதான் நமக்கான களம் என்று அப்போது தோன்றியது. ஒருமுறை கேட்டதை, படித்ததை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் இருந்தது. சினிமா நடிகன் ஆவதுதான் லட்சியம் என்று தீர்மானித்தேன்.
கே: அதன் பின்....? ப: சினிமா ஆர்வத்தால் படிப்பில் கவனம் குறைந்தது. 11ம் வகுப்பில் 60% எடுத்து பாஸ் செய்தேன். பின் அழகப்பா கல்லூரியில் பியூசி படித்தேன். ஆனால் ஃபெயிலாகி விட்டேன். பின் டீச்சர் ட்ரெயினிங் முடித்தேன். ஆனால் இரண்டு வருடங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போது எனது அப்பா ரிடையர் வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தை நான்தான் அடுத்து கவனிக்க வேண்டும் என்ற சூழல். எனக்கோ வேலையில்லை. 20 வயதுவரை நான் தீவிர ஆத்திகன். காட்டுக்குள் சென்று முழங்காலிட்டுத் தொழுதிருக்கிறேன். ஆனால் அப்படி பக்திமானாக இருந்தும் வாழ்க்கையில் பல சோதனைகள். அப்போது எனது மாமா - அவர் திராவிடர் கழகத்தில் மிகப் பெரிய ஆளாக இருந்தவர். அண்ணா, கலைஞருக்கெல்லாம் மூத்தவர். பட்டுக்கோட்டை அழகிரிக்கு இணையாக இருந்தவர். எம்.ஆர். ராதா செட் - அவர் எனக்கு நிறையப் புத்தகங்களை படிக்கத் தந்தார். அதுபோல இன்னொரு மாமா - அவர் திமுகவைச் சேர்ந்தவர் - அவர் இங்கர்சால், பெட்ரண்ட் ரசல், Rationalist Press Assosiation (RPA) புத்தகங்கள், பெரியாரின் நூல்கள் என்று படிக்கத் தந்தார். அவற்றைப் படிக்கப் படிக்க வேறொரு உலகம் அறிமுகமானது. 22 வயதில் சென்னை திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலையைப் பார்த்துக் கொண்டே, சினிமாவுக்கும் முயல ஆரம்பித்தேன். ஆல்பத்தை எடுத்துக் கொண்டு என் நண்பர் தமிழாசிரியர் நமசிவாயத்துடன் ஸ்டூடியோ, ஸ்டூடியோவாகச் சென்று கொடுப்பேன். 16 வயதினிலே படத்தைப் பார்த்து பிரமித்துப்போய் பாரதிராஜாவைப் பார்க்கப் போனேன். பின் அதன் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்களைச் சந்தித்தேன். அவர்மூலம் 'கன்னிப்பருவத்திலே' படத்தில் கதாநாயகனானேன். 1979ல், என் 29ம் வயதில் அந்த வாய்ப்பு வந்தது. அன்றுமுதல் இன்றுவரை கிட்டத்தட்ட 200 படங்கள் நடித்து விட்டேன். இன்றும் தொடர்ந்து சினிமா, டிவி தொடர் என்று நடித்துக் கொண்டிருக்கிறேன்.
கே: நடிகராக இருந்த நீங்கள், தொழிலதிபர் ஆனது எப்படி? ப: நான் எம்ஜிஆர், ஜானகி அம்மாள் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தேன். அவர்களும் என்மீது அன்பு வைத்திருந்தனர். எம்ஜிஆருக்கு என்மீது தனியான அன்பு இருந்தது. அவர் 1987ல் காலமாகி விட்டார். அதன்பிறகு ஜானகி அம்மாவுக்காக நான் தேர்தல் பிரசாரம்கூடச் செய்தேன். இந்நிலையில், 1990-91ல் எனக்கு ஏற்பட்ட எதிர்பாராத கடன் மற்றும் செலவினங்களால் நான் புதிதாகக் கட்டிய வீட்டை விற்றுவிட்டேன். அப்போது ஜானகி அம்மாள் சொல்லி ஜேப்பியார் என்னைத் தொடர்பு கொண்டார். "வீட்டை விற்று விட்டாய் என்று கேள்விப்பட்டேன். அதை வைத்துப் படம் எல்லாம் எதுவும் எடுக்காதே. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கு" என்று அவர்தான் ஆலோசனை சொன்னார். எனக்கு அது பிடிக்காத தொழில். தெரியாத தொழிலும்கூட. பின் சில லாயர்களை வைத்துக்கொண்டு படிப்படியாக அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இத்தொழிலில் வளர்ந்தேன். முதலில் ரியல் எஸ்டேட். பின்னர் ஹோட்டல். அதற்குப் பின்னால் கன்ஸ்ட்ரக்ஷன் என்று வளர்ந்தேன். ஆனால் ஒரு விஷயம், இப்படி சினிமா, தொழில், வியாபாரம் என்று எல்லாவற்றிலும் நான் வெற்றி பெற்றதற்குக் காரணம் என் ஜாதகக் கிரக அமைப்புகள்தான் என்பதை இங்கே தீர்க்கமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கே: நீங்களோ ஒரு நாத்திகர். எப்படி ஜோதிடத்தின் மீது ஆர்வம் வந்தது? ப: நான் பெரியாரின் பட்டறையில் வளர்ந்தவன். அவர் எழுதிய அத்தனை நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் எனது 32ம் வயதில் எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் வந்தது. திறமை உள்ளவன் எல்லாம், உண்மையாக, நேர்மையாக வாழ்பவன் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது இல்லை. ஆனால் திறமை இல்லாதவன், காட்டுமிராண்டி போல் வாழ்பவன் எல்லாம் வெற்றியாளனாக இருக்கிறானே அதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் வந்தது. நல்லவர்களாக இருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அயோக்யர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இது ஏன் என்ற கேள்வி எழுந்தது. நான் சினிமாவில் சேர்ந்து நிறைய சம்பாதிக்கிறேன். சிகரெட், குடி, பெண் என்று எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. ஆனால் திருமணம் ஆகவில்லை. யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. வயதோ 32 ஆகி விட்டது. அப்போதுதான் நாடி ஜோதிடம் பற்றிக் கேள்விப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் சென்று நாடி பார்த்தேன். அதையும் கூட analytical criticism என்ற வகையில்தான் பார்த்தேன். உண்மையில் மிரண்டு போய்விட்டேன்.
நான் நாடி பார்த்தது செப்டம்பர் மாதம் 23ம் தேதி. நடப்பாண்டுக்குள் திருமணம் நடக்கும் என்று நாடியில் வந்திருந்தது. எனக்கு நம்பிக்கை இல்லை. "இன்னும் மூன்று மாதம் தானே உள்ளது. அதற்குள் ஆகி விடுமா?" என்று சந்தேகப்பட்டு ஜோதிடரிடம் கேட்டேன். "அப்படித்தான் நாடியில் வந்திருக்கிறது. டிசம்பரில் உங்களது பிறந்த நாள் வருவதற்கு முன்னே திருமணம் ஆகி விடும்" என்றார். அப்போது திருமணத்திற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதனால் நான் நம்பவில்லை. ஆனால் அதிசயப்படும்படியாக நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி என் திருமணம் திடீரென நிச்சயமாகி நடந்தது. அதுமுதல் ஜோதிடத்தில் எனக்குத் தீவிர நம்பிக்கை ஏற்பட்டது. பல ஜோதிடர்களைச் சந்தித்தேன். பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பலர் சொன்னது என் வாழ்வில் அப்படியே நடந்தது. தொடர்ந்து பல அதிசயச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்தன. என் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. எனது ஆய்வுகளைத் தொகுத்து 'ராணி' வார இதழில் 'ஜோதிடம் : ஒரு புரியாத புதிர்' என்ற தலைப்பில் தொடராக எழுதினேன். நல்ல வரவேற்பு. பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் எதையுமே கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன் அல்ல. பெரியார் வழியில் பயின்றவன். ஆனாலும் ஜோதிடத்தை நான் திடமாக நம்புகிறேன். இன்றுவரை என் வாழ்வில் ஜோதிடம் சொன்னபடி 90% நடந்திருக்கிறது. இன்னமும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். என் தேடல் தொடர்கிறது.
கே: புத்தகச் சந்தைகளில், நூல் வெளியீட்டு அரங்குகளில் பேசுகிறீர்கள். நல்ல எழுத்தாளராக, பேச்சாளராக அறியப்பட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்... ப: என் எழுத்தார்வத்திற்கு மிக முக்கியக் காரணம் தமிழ்வாணன். சிறுவயதில் கல்கண்டு இதழை வாசிக்க என் அம்மா தருவார். அதுதான் முதல் தூண்டுதல். அதன் பிறகு என்னைத் தூண்டியது அண்ணா மற்றும் பி. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, இந்தியாவின் 14 மொழிகளிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். 30 மாநிலங்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கூடியவர் என்பார்கள் அவரை. பிற்காலத்தில் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சிறந்த அறிவாளி. எதை எடுத்துக் கொண்டாலும் அதன் உண்மையை ஆராயும் பழக்கம் எனக்குச் சிறுவயதிலேயே வந்து விட்டது. ஆதியும் அந்தமும் இல்லாத இந்தப் பிரபஞ்சத்தில் நீ ஏன் வேரைத் தேடிப் போகிறாய்? அந்த உண்மையைக் காண உனக்கு ஆயுள் போதாது என்று என் நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் நான் படித்தேன். கம்யூனிசத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அந்த சித்தாந்த நூல்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 4, 5 ஆண்டுகள் அதற்குச் செலவிட்டேன். Analytical criticism என்ற வகையில்தான் எனது படிப்பும், ஆய்வுகளும் எப்போதும் இருக்கும். பெரியாரையும் அப்படித்தான் படித்தேன். ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். காரணம் அண்ணா, பாலதண்டாயுதம், பி. ராமமூர்த்தி போன்றவர்கள்தான்.
கே: எம்ஜிஆர், சிவாஜி இருவருடனும் நெருக்கமாகப் பழகியிருக்கிறீர்கள் அல்லவா? ப: எம்ஜிஆர், சிவாஜி இருவரையுமே நான் மிக நெருங்கிய உறவினர் போலவே நினைத்தேன். சிறுவயதில் எம்ஜிஆரை ஒரு பெரிய ஹீரோவாகப் பார்த்தேன். சிறு வயதில் அவரைப் போலவே ஒரு கம்பில் தகரத்தைச் சுற்றிவைத்து கத்திச் சண்டை போடுவோம். என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக, ஒரு உறவினரைப் போல உணர்ந்தது சிவாஜியை. என் நினைவில் தங்கியிருக்கும் முதல் படம் அவரது 'அன்னையின் ஆணை'. அவரது வசனங்களை மனப்பாடமாக ஒப்பிப்பேன். என் அம்மா நம் குடும்பத்திற்கு பழக்கமான குடும்பம்தான் அவர்களுடையது என்று சொன்னார்கள். நான் முதன்முதலாக, என் திருமண பத்திரிகையைப் கொடுப்பதற்காக, எம்ஜிஆரைச் சந்தித்தேன். எனது வீட்டைத் திறந்து வைத்ததும் அவர்தான். அதனால்தான் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் இறக்கும் முன்னர் அவர்களைக் காணும், சந்தித்துப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. It's true love. Mature love. அன்பில் மூன்று வகைகள் உண்டு. குழந்தைத்தனமான அன்பு. முதிராத அன்பு. முதிர்ந்த காதல். முதிர்ந்த காதலுக்கு மகாத்மா காந்தி, அன்னை தெரசா போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். சமூகத்தின் மீது, ஏழை, எளிய மக்கள் மீது அவர்கள் கொண்ட அன்பு மாறாதது. அதுபோன்ற அன்புதான் எனக்கு எம்ஜிஆர் மீதும் சிவாஜி மீதும் இருந்தது. கண்ணதாசன் சொன்னார் முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடிவரும் என்று. எம்ஜிஆர் மரணமடைவதற்கு இரண்டு நாட்கள் முன்னால் நானும் ஜேப்பியாரும் அவரைச் சந்தித்தோம். அப்போது எனக்கு 38 வயது. அதேபோலத் தான் சிவாஜியையும் சந்தித்தேன். எம்.எஸ். அம்மா அவர்கள் மீதும் எனக்கு இதே போன்ற அன்பும், மதிப்பும் இருந்தது. அவரையும் இறப்பதற்கு முன்னால் நான் சந்தித்தேன். இதுதான் மெய்யான அன்பு. அந்த vibration தான் இதற்குக் காரணம். இது ஆப்பிரிக்க, செவ்விந்திய கலாசாரம் உட்படப் பல இடங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட.
கே: இந்துமதம் உங்களைக் கவர்ந்தது எப்படி? ப: நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் என்றாலும், பிற மதங்களை வெறுப்பவனல்ல. அவை என்ன சொல்கின்றன என்பதைப் படித்துப் பார்த்தேன். பிரமாணங்கள், மனுஸ்மிருதி என எல்லாவற்றையும் படித்தேன். மாமா மூலம் அறிமுகமான பெரியாரின் நூல்களையும் படித்தேன். அவர் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் பலவாறாகக் கிண்டல் செய்திருப்பார். நானும் கிண்டல் செய்வதற்காக ராமாயணத்தையும், மஹாபாரத்தையும் படிக்க ஆரம்பித்தேன். ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகனையும், வியாசர் விருந்தையும் படித்தேன். இவற்றையெல்லாம் படிக்கும்போது பலப்பல இடங்களில் நம் வாழ்க்கை அவற்றில் பிரதிபலிப்பது தெரிந்தது. இந்துமதத்தில் நிறைய விஷயங்கள் நாம் வாழ்க்கையோடு ஒட்டி வருவதுபோல உள்ளதே என்ற சந்தேகம் எனக்கு வந்தது. தொடர்ந்து கிருபானந்த வாரியார், கீரன் என்று பலர் எழுதிய நூல்களையும் படித்தேன். அவற்றைப் படித்தபின் நமது நடைமுறை வாழ்க்கைக்கும், இதிகாச, புராணங்களுக்கும் நிச்சயம் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது. வாசிப்பும், ஆய்வும் தொடர்ந்தது. இந்துமதம் சொல்கிறது, "மனிதா, பாவம் செய்யாதே, உண்மையாக, நேர்மையாக வாழ். கடவுளே ஆனாலும் தவறு செய்தால், பாவம் செய்தால் தண்டனை உண்டு" என்கிறது. மனிதன் தவறு செய்யக் கூடாது. நல்லவனாக வாழ வேண்டும் என்பதுதான் இந்துமதத்தின் நோக்கம். அதை நேரடியாகச் சொல்லாமல் கதைகள், புராணங்கள் வழியாகச் சொல்கிறது என்ற முடிவிற்கு நான் வந்தேன். ஒவ்வொரு மதத்தினரும் அவர்கள் மதத்தை, கொள்கைகளை உயர்வாகச் சொல்லி வருகின்றனரே தவிர, யாருமே அதை ஒரு analytical criticism முறையில் ஆய்ந்து critical mind உடன் அதனை ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மை என்ன என்பதைச் சிந்திக்கவில்லை. நான் அவ்வாறு ஆராய்ந்து பல விஷயங்களைக் கண்டறிந்தேன்.
கே: நீங்கள் கண்டவற்றைச் சற்றே விரித்துக் கூறுங்களேன்.... ப: இந்துமதம் என்பது வெறும் மதம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. வாழ்க்கையே மதமாக இருக்கிறது. மற்ற மதங்களில் ஓரிரு நாட்கள் விரதம், 40 நாட்கள் விரதம் என்றுதான் இருக்கும். ஆனால் இந்துமதத்தின் சிறப்பு என்னவென்றால் 365 நாளையும் அவர்கள் மதமாக்கி விட்டார்கள். அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, சோம வாரம், சுக்கிர வாரம், ஏகாதசி, துவாதசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி என்று தினமுமே விரதத்தை வைத்து விட்டார்கள். இப்படி தினம் விரதம் இருப்பதால் கொழுப்பு முற்றிலுமாகக் கரைந்து விடுகிறது. அதுபோல எதை எதைச் சாப்பிட வேண்டும், எப்படி எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதைக் கூட இந்து மதம் விரிவாகச் சொல்கிறது. மூளை செயல்பட வேண்டும் என்பதற்காக வைகறையில் துயில் எழச் செய்தார்கள். மந்திரங்களை ஓத வைத்தார்கள். ஆத்திசூடி, கொன்றை வேந்தனை ஒப்பிக்க வைத்தார்கள். அவையெல்லாம் எதற்கு என்றால் நினைவாற்றலை அதிகரிப்பதற்காகத்தான். இப்படி மந்திரங்கள் ஓதி ஓதி, நினைவாற்றல் அதிகமாக இருந்ததால்தான் வெள்ளைக்காரன் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது பிராமணர்களால் அதை எளிதாகக் கிரகிக்க முடிந்தது. இப்படித்தான் வாய்மொழியாகவே மகாபாரதம், ராமாயணம், வேதங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் போன்றவை புழக்கத்தில் எழுத்து வருவதற்கு முன்னரே பாதுகாக்கப்பட்டன.
அதேபோல, பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம் போடுதல். பிள்ளையார் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதம் வேறு. தோப்புக்கரணம் போடுவதால் நமக்கு நன்மை விளைகிறதா இல்லையா என்பது வேறு. சூரிய கலை, சந்திர கலை என இரண்டையும் க்ராஸ் செய்து பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது நமக்கு புத்திக்கூர்மை ஏற்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல. ரத்த அழுத்தம், சுகர் குறையும். ஹார்ட் அட்டாக் வராது. இதைப் பிள்ளையார் முன்னாலும் போடலாம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஏன் மனதிற்குப் பிடித்த நடிகர், நடிகைகள் முன்னாலும் போடலாம். பலன் ஒன்றுதான். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் காதைப் பிடித்துத் திருகுவது, கிள்ளுவது, இழுப்பதற்கும், தோப்புக்கரணம் போடச் சொன்னதற்கும் இதுதான் காரணம். ஆலயத்தைச் சுற்றிவரச் சொன்னதற்கும் இதுதான் காரணம். வெறும் காலில் அவற்றைச் சுற்றி வரும்போது அதுவே அக்குபிரஷர், அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் ஆகிறது. இந்துமதத்தில் எல்லாவற்றையும் விஞ்ஞான பூர்வமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நான் கண்டறிந்தது. இதை விஞ்ஞானம் என்று சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதால் இதை மதத்தில் வைத்து விட்டார்கள்.
காதுகுத்துவது, கைகளில் வளையல், காலில் கொலுசு, கழுத்தில் ஆபரணங்கள் அணிவதற்கெல்லாம் விஞ்ஞானபூர்வமான காரணம் உள்ளது. அங்கெல்லாம் நுண்ணிய நரம்புகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் இவையெல்லாம் அணியப்படுகின்றன. அதுபோல தமிழர்களின் 'தார்பாய்ச்சுக் கட்டு'தான் பிராமணர்களின் பஞ்சகச்சம் ஆகியிருக்கிறது. பெண்களின் மடிசாரும் அப்படித்தான். அவையெல்லாம் ஆதிதமிழர்களின் பாரம்பரிய உடைகள். அக்காலத்தில் திருமணமாகாதவர்கள் வேஷ்டியை அப்படியே கட்டினர். மணமானவர்கள், வயதான பெரியவர்கள் வேஷ்டியை தார்ப்பாய்ச்சாகத்தான் கட்டுவர். வயலில் வேலை செய்பவர்கள் உயர்த்திக் கட்டினர். இதுதான் நமது ஆடை முறை. இவற்றைத்தான் நான் கண்டறிந்தேன். அதுபோலத்தான் நடராஜர் தத்துவமும்.
கே: சுவையாக இருக்கிறதே! அது என்ன? ப: 1500 வருடங்களுக்கு முன்னால் நடராஜர் சிலையே கிடையாது. அந்தக் கால கட்டத்தில் வானவெளியில் ஒரு நெபுலா வெடித்தது. அதன் தோற்றம் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடுவது போன்றும், இப்போதைய நடராஜர் தோற்றத்தில் இருப்பது போன்றும் ஒரு காட்சியைக் கொடுத்தது. அத் தோற்றத்தை அப்படியே ஒரு சிலையாக வடித்து விட்டார்கள் நம்மவர்கள். பிற்காலத்தில் இதைப் பார்த்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன், 'என்னடா இது நம்முடைய அணு இயக்கத்தை இந்த இந்தியர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கண்டுபிடித்திருக்கிறார்களே' என்று மிரண்டு போய்விட்டார். ஏனென்றால் நடராஜர் சிலையின் தோற்றமும், அணு இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதை அவர் கண்டுபிடிக்க, இரண்டும் ஒன்றுதான் என்பதை அறிவியல்பூர்வமாக இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; அந்த நடராஜரின் அபிநயத்தில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நடனமாடும் போது மூளையின் இரண்டு பகுதிகளும், செயல்படாத பிற பகுதிகளும்கூடச் செயல்படுகின்றன என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்துப் பாரம்பரியத்தில் நடனத்தை மிக முக்கியமானதாக வைத்திருக்கிறார்கள். அப்படி நடனம் ஆடுவதால் மூளை அதிகமாக வேலை செய்கிறது. புத்திக்கூர்மை அதிகரிக்கிறது. அதனால்தான் சிறுவயதிலேயே நடனத்தைப் பழக்கி விடுகிறார்கள். அதுவும் பெண்களுக்கு ஏன் வைத்தார்கள் என்றால், அக்காலத்தில் ஆண்களுக்கே அதிகம் வேலை இருந்தது; பெண்களுக்கு இல்லப் பொறுப்பு தவிர்த்து பிற வேலைகள் குறைவு என்பதால் இவற்றைப் பெண்களுக்கென வைத்தார்கள். இப்படி இந்துமதத் தத்துவங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம், விளக்கம் உள்ளது.
கே: உங்கள் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்... ப: எனக்கு பல நகரங்களின் கலாசாரங்களை, பண்பாடுகளை, பாரம்பரியங்களைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, லண்டன், பாரிஸ், ரோம், கனடா, சீனா, ரஷ்யா, ஹாங்காக், பாங்காக் போயிருக்கிறேன். சீனாவின் ஆறு பெரிய நகரங்களையும், சில கிராமங்களையும் பார்த்திருக்கிறேன். ரஷ்யாவில் மாஸ்கோவையும் சில கிராமங்களையும் பார்த்திருக்கிறேன். ரோமில் என்னை வியக்க வைத்த விஷயம் அதன் கட்டடக்கலை. அங்கே கட்டடங்கள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. பாரிஸ் முழுக்க மஞ்சள் நிறத்தைக் காட்டியது. லண்டனில் சிவப்பாகவும் சிமிண்ட் கலரிலும் பல கட்டிடங்கள் இருந்தன. லண்டனில் காரல் மார்க்ஸ் கல்லறையைப் பார்த்தேன். சீனாவில் பெய்ஜிங்கில் மாசேதுங்கின் உடலைப் பார்த்தேன். ரஷ்யாவில் லெனினின் உடலைப் பார்த்தேன். என்னை மிகமிகக் கவர்ந்த நாடுகள் ரஷ்யாவும், சீனாவும்.
கே: நீங்கள் எழுதியுள்ள புத்தகங்கள் என்னென்ன? ப: "அனைத்துக் கலைகளையும் தனக்குள் வசீகரித்துக் கொண்டு தனித்து விளங்குகின்ற ஓர் ஒப்பற்ற கலை சினிமா" என்று கூறினார் ஒரு ரஷ்ய இயக்குநர். Cinema is synthesis of all art, yet independent. ஆய கலைகள் அறுபத்து நான்கும் அதற்குள் சங்கமிக்கிறது. சிறுவயது முதலே சினிமாக் காதல் இருப்பதால் அதைப்பற்றிய ஆய்வைப் பல ஆண்டுகளாகச் செய்திருக்கிறேன். பல உலகப் படங்களை பார்த்துள்ளேன். அவற்றை வைத்து 'உலக சினிமா', 'உலக நட்சத்திரங்கள்', 'உலகத் திரைப்படங்கள்', 'உலக மகா காவியங்கள்', 'உலகின் மாபெரும் இயக்குநர்கள்' போன்ற நூல்களை எழுதியிருக்கிறேன். வெளிநாட்டுப் பயணத்தின் விளைவாக எழுதிய நூல்கள் 'நான் கண்ட சீனா', 'கம்யூனிசத்திற்குப் பின் ரஷ்யா' போன்றவை. எனது வாசிப்பு மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை 'முரண்சுவை' (இது தினமணி கதிரில் தொடராக வந்தது), 'ஜோதிடம்: புரியாத புதிர்', 'கருணை உள்ளம் கொண்ட ஆட்ரி ஹப்பன்' என்பன. மேலும் சில புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதுபோல் அழகாக, தெளிவாக, ஆணித்தரமாகப் பேசுகிறார் ராஜேஷ். ஜோதிடம் போன்ற விஷயங்களில் மிக உறுதியாகத் தன் கருத்துக்களை எடுத்து வைக்கிறார். அவரது மேதைமையும், ஆய்வின் ஆழமும், பரந்த வாசிப்பும் பேச்சில் வெளிப்படுகின்றன. சம்பவங்களைப் பற்றி விளக்கும்போது வருஷம், தேதி, மாதம் என எல்லாவற்றையும் சரியாகக் கூறி பிரமிக்க வைக்கிறார். "நான் என் 64 ஆண்டுகால வாழ்வில் அறிந்ததை, தெரிந்து கொண்டதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார். ஒரு சிறந்த மனிதரைச் சந்தித்த திருப்தியுடன் விடைபெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
என் பெற்றோர் என் பெற்றோர் திருமணத்துக்கு முன்னரே ஒருவருக்கொருவர் உறவினர்தாம். அப்பா வில்லியம்ஸ் மிகவும் சாந்தமானவர். அகவயப்பட்டவர் (introvert) என்று சொல்லலாம். மிக நல்ல மனிதர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர். மிக நேர்மையானவர். அம்மா லில்லி கிரேஸ் அதற்கும் மேலே. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் நீ என் மகனே இல்லை என்று சொல்லிவிடுவார். நான் வீட்டுப் பறவையாக இல்லாமல் அரசியல், சினிமா என்று பெரிய ஆளாக வேண்டும்; சொந்தக்காரர்களைக் கவர வேண்டும், புகழ் பெறவேண்டும் என்று நினைத்தேன். Necessity is the mother of invention என்று சொல்வது போல எனக்கு பணமும், புகழும் தேவையாக இருந்தது. அதை நோக்கிச் சென்றேன். என் அம்மா 63 வயதில் காலமாகிவிட்டார். அப்பா 97 வயதுவரை வாழ்ந்தார்.
- ராஜேஷ்
*****
கடவுளுக்கும் கர்மா உண்டு இந்துமதத்தில் உள்ள முக்கியமானதொரு விஷயம் கர்மா. அதாவது போன பிறவியில் செய்த வினை அடுத்த பிறவியில் அவனைத் தொடர்ந்து வரும். அதனை அவன் அனுபவிக்க வேண்டும் என்பது இந்துமதம் கூறும் உறுதியான தகவல். சாதாரண மனிதன் மட்டுமல்ல; கடவுளே தப்பு செய்தாலும் மாட்டிக் கொள்வான்; அந்த ஊழ்வினையை அவன் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இந்துமதம் கூறும் தாத்பரியம். புராணத்தில் ஒரு கதையைப் பார்க்கலாம். பிருந்தை என்று ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் ஜலந்தரன். அளவற்ற வரம்பெற்ற அவன் தேவர்களைத் துன்புறுத்துகிறான். அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. காரணம் என்னவென்று பார்த்தால் பிருந்தையின் கற்புதான் என்பது தெரிய வருகிறது. எனவே ஜலந்தரன் ரூபத்தில் விஷ்ணு சென்று பிருந்தையைக் கூடுகிறார். அவள் கற்பு பங்கமானதில் உண்மையான ஜலந்திரன் போரில் இறந்து போகிறான். அதனால் சீற்றம் கொண்ட பிருந்தை விஷ்ணுவுக்கு ஒரு சாபம் இடுகிறாள். "என்னை மாறுவேடத்தில் வந்து நீ ஏமாற்றியது போல் உன் அடுத்த பிறவியில் உன் மனைவியை ராட்சசன் ஒருவன் மாறுவேடத்தில் வந்து தூக்கிக்கொண்டு போவான். நீ மனைவியை இழந்து பைத்தியக்காரன் போல் அலைந்து திரிவாய்" என்று சாபம் இட்டுப் பின் தீப்பாய்ந்து உயிர் துறக்கிறாள். அதில் இருந்து முளைக்கும் துளசிச் செடியை விஷ்ணு தம் மார்பில் சூடிக் கொள்கிறார். அந்த பிருந்தை இறந்த இடம்தான் பின்னால் கிருஷ்ணனுக்குப் பிடித்த பிருந்தாவனம் ஆனது. பிருந்தை கிருதயுகத்தில் விஷ்ணுவுக்கு இட்ட சாபம், அவர் திரேதாயுகத்தில் ராமராக அவதாரம் செய்யும்போது பலிக்கிறது. பிருந்தை தீப்பாய்ந்து இறந்தது போல், ராமர் அக்னிகுண்டத்தில் தோன்றி திருஅவதாரம் செய்கிறார். இந்திரனே வாலியாகவும், சூரியனே சுக்ரீவனாகவும், சங்கு, சக்ரமே பரத, சத்துருக்கனன் ஆகவும், ஆதிசேஷனே லக்ஷ்மணனாகவும் பிறக்கின்றனர். இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போக அலைந்து திரிகிறார். சாபம் பலித்தது.
- ராஜேஷ்
*****
"நீ கோடீஸ்வரன் ஆவாய்" பொள்ளாச்சிக்கு அருகில் உள்ளது புரவிப்பாளையம். அங்கு ஒரு ஜமீன்தார். அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் அன்பானவர்கள். அவர்களுடைய பங்களா, அரண்மனை போன்று இருக்கும். நான் படப்பிடிப்பிற்காக 1982ம் ஆண்டு அந்த பங்களாவிற்குச் சென்றேன். அதன் மேல்மாடியில் ஒரு சாமியார் இருந்தார். அவருக்கு 'கோடி சாமியார்' என்று பெயர். சில பக்தர்களைப் பார்த்து 'நீ கோடீஸ்வரன் ஆவாய்' என்று ஆசிர்வதிப்பாராம். எனவேதான் அவருக்கு இப்பெயர். அவரைப் பற்றி பலவிதமான செய்திகள் கேள்விப்பட்டேன். நான் பார்க்கும்போது, அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும் என்றார்கள்.
அங்கே ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது. ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் அவரைப் பார்க்க நான் மாடிக்குச் சென்றேன். மாடியில் சிறிய அறையில் வெகுகாலமாக இருப்பதாக ஜமீன் குடும்பத்தார் கூறினார்கள். நான் சென்றபோது கட்டிலில் படுத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து வெளியே வந்தார். நான் வணங்கினேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்தார். பொதுவாக பிரியமானவர்களை மட்டும்தான் கட்டிப் பிடிப்பாராம். அப்படி அவர் யார் யாரைக் கட்டிப் பிடிக்கிறாரோ, அவர்கள் கண்டிப்பாக முன்னுக்கு வருவார்களாம். என்னைக் கட்டிப்பிடித்தவுடன் 'போய் கட்டிலில் படு' என்றார்.
உடனே நான் போய் அவருடைய கட்டிலில் படுத்தேன். மூன்று நிமிஷம் சென்ற பிறகு 'எழுந்து வா' என்று சொன்னார். நான் எழுந்து அவரிடம் சென்றேன். 'நீ கோடீஸ்வரன் ஆவாய்' என்று கூறி என்னை ஆசிர்வதித்தார். நான் அவரை வணங்கிவிட்டு வந்தேன். கோடீஸ்வரன் என்றால் பல கோடிகளுக்கு அதிபதியா அல்லது குறைந்தது ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பேனா என்பதற்கான விளக்கம் அப்போது எனக்குத் தெரியவில்லை. கோடீஸ்வரன் என்று ஆசிர்வாதம் கிடைத்தது என்கிற மனநிறைவில் இருந்தேன். அடுத்த வருடமே எனக்கு திருமணம் நடைபெற்றது. 1984ம் ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்தேன். அந்த வருடம் மட்டும் மூன்று திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.
ராஜேஷ் எழுதிய 'ஜோதிடம்: புரியாத புதிர்' நூலிலிருந்து. (கற்பகம் புத்தகலாயம் வெளியீடு)
*****
ராமாயணமும் மகாபாரதமும் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நிறைய ஜோதிடக் குறிப்புகள் இருக்கின்றன. பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் பிறந்தவன் அர்ஜுனன். அதனால் தான் அவன் வெள்ளையாக இருக்கிறான். அது சூரியனின் நட்சத்திரம். ஐப்பசி மாதம் கேட்டையில் பிறந்தவன் தர்மன். ரேவதி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் தூது போகிறான். ஜன்மாந்தர நக்ஷத்திரத்தில் தூது போனால் வெற்றி பெறாது. ஒரு காரியம் எடுபடாது என்று தெரிந்தே கிருஷ்ணன் தூது செல்கிறான். இப்படி ராமாயணத்திலும், மஹாபாரத்திலும் நிறைய ஜோதிடம், ஜாதகம் பற்றிய விஷயங்கள் இருக்கின்றன. இன்றைக்கு அரசியலில் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறுகின்றன. நாமும் அதனை விமர்சனம் செய்கின்றோம். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடி ராமரும், கிருஷ்ணரும் தாம். திரேதாயுகத்தில் ராமாவதாரத்தில் சூரியனின் அம்சமான சுக்ரீவனைக் காப்பாற்ற இந்திரனின் அம்சமான வாலியை மறைந்திருந்து கொல்கிறார் ராமர். துவாபரயுகத்தில், கிருஷ்ணாவதாரத்தில் சூரியனின் அம்சமான கர்ணனைக் கொல்ல, இந்திரனின் அம்சமான அர்ஜுனனுடன் கூட்டுச் சேர்கிறார். அது அந்த யுகத்துக்கான தர்மம். இது இந்த யுகத்துக்கான தர்மம் என்கிறார் விஷ்ணு. ஆனால் இரண்டுமே அவர் தனக்காகச் செய்யவில்லை என்பது இதில் குறிப்பிடத்தகுந்தது.
- ராஜேஷ் |