மதுரை R. முரளிதரன்
'நாட்டியப்பேரரசு' திரு. மதுரை R. முரளிதரன் ஓர் உன்னத நடனக் கலைஞர், சிறந்த நடன ஆசிரியர், அற்புதமான நடன அமைப்பாளர், இயக்குனர். மேலும் பண்ணமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், மிருதங்க வித்துவான் எனப் பல்துறை வித்தகம் கொண்டவர். ஷடாக்க்ஷர கவுத்துவம் போன்று பல்வேறு பாடல்களுடன் முப்பத்தி ஐந்து தாளங்களில் அடங்கிய பரத நாட்டிய மார்க்கங்கள், எழுபத்தி இரண்டு மேளகர்த்தா ராகங்களும் உள்ளடங்கிய ஜதிஸ்வரங்கள், வர்ணங்கள் எனப் பல்வேறு நடன வகைகளை உருவமைத்து அவற்றுக்கு இசையமைத்து ஒலி, ஒளி வட்டுகளாக (CD, DVD) வெளியிட்டுள்ளார். குரு திருமதி. சாமுண்டீஸ்வரியின் சிஷ்யனான இவர் சென்னையில் நிருத்தியக்ஷேத்ரா என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இணையம் வழியே பரதக்கலையில் பட்டக்கல்வி அளித்துவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் அறிவுரைக் குழு உறுப்பினரும் ஆவார். Broadway Musicals-உடன் ஒப்பிடத்தக்க தரம்வாய்ந்த நாட்டிய நாடகப் படைப்புகள் இவரது தனிச்சிறப்பு. க்ளீவ்லண்ட் ஆராதனை உள்படப் பல இடங்களிலும் நடைபெறும் புகழ்பெற்ற நடனப் போட்டிகளில் சிறப்பிடம் பெறும் இவரது நடனப் பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றி மேலும் அறிய அவரிடம் பேசினோம். அதிலிருந்து...

கே: நீங்கள் நடனத்திற்கு எப்படி இசையமைக்க ஆரம்பித்தீர்கள்?
ப: நான் ஏழு வயதில் நடனம் கற்கத் தொடங்கினேன். பரதத்தில் ஒரு ஆண் கலைஞனாக எனது நடனத்திறனை வெளிப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. காரணம், பெண்மையை மையப்படுத்திப் படைக்கப் பட்ட பாடல்கள். ஆண்களுக்கு தாண்டவம், பெண்களுக்கு லாஸ்யம் என்று வரைமுறைப் படுத்தியுள்ளது பரத இலக்கணம். தஞ்சை நால்வர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் நாயகி பாத்திரங்களில் ஆடும் கட்டாயம் ஏற்பட்டது. மாற்றங்கள் என்பது காலத்தின் கட்டாயம். நடனம் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே ஓர் ஆண் கலைஞனாக, நாயகனின் பரிமாணத்தில் முற்றும் வித்தியாசமான கோணத்தில், பக்திரசம் ததும்பும் வர்ணங்களை இயற்றத் தொடங்கினேன். பல்வேறு ஜாவளிகளை இயற்றி மேடை ஏற்றினேன். நான் பாடல்கள் இயற்றிய காலகட்டத்தில் பாட்டுக்கள் சி.டி., டி.வி.டி. கிடைப்பது அரிது. மேலும் அன்றைய குருக்களிடம் ஒலிப்பதிவு செய்த பாட்டுக்களைப் பெறுவது மிகக்கடினம். சிறிது சிறிதாக எனது ஆவலைப் பூர்த்திசெய்யும் பாடல்களை இயற்றி, இசையமைத்து, பதிவு செய்யத் துவங்கினேன். காலப்போக்கில் எனது பாடல்கள் உலகின் பல்வேறு இடங்களில் நடன ஆசிரியர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும் பேருதவியாக இருந்து வருவது மறுக்க முடியாத உண்மை.

கே: உங்கள் இசைப் பின்னணியை விளக்குங்கள்....
ப: நான் சுமார் பத்து வருடங்கள் திரு மதுரை T. சேதுராமன் அவர்களிடம் இசை பயின்றுள்ளேன். இசையமைக்கும் முறையை எனக்குப் போதித்தவர் அவரே. முதலில் நான் இசையமைத்த பாடல்களைக் கேட்டு, கருத்துக் கூறி, மேலும் இசையமைக்க ஊக்குவித்தார். பலகாலம் மிருதங்கம் பயின்றேன். எனது ஆசான் திரு. மதுரை T. சீனிவாசன் இசையையும் ஜாதிக் கோர்வைகளையும் 'நோட்ஸ்' வடிவில் எழுத உதவினார். இப்பொழுது சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் அமைத்துள்ளேன்.

கே:
வானுடைத்து வந்துவிழும்
பேரிடிதான் பிளந்ததுபோல்
தூணுடைத்து துள்ளிவந்து
துரத்தியது நரசிம்மம்

இது நீங்கள் இயற்றிய நரசிம்மாவதாரப் பாடலில் ஒன்று. உங்கள் பாடல்களில் கவித்துவமும், உணர்ச்சியும் ததும்புகின்றன. உங்களுக்கு இவ்வளவு தமிழாவம் எப்படி ஏற்பட்டது?

ப: சிறுவயது முதற்கொண்டே மகாகவி பாரதியார் என் மானசீக குரு. என் வரிகளில் அவரின் தாக்கம் கண்கூடாகத் தெரியும். எனக்குத் தமிழ்ப் பற்று மிக அதிகம். எப்போதும் தமிழ்க் காவியங்கள், புராணங்கள், கவிதைகள், புகழ்பெற்ற படைப்பாளிகளான அகிலன், கண்ணதாசன், சுஜாதா, அமரர் கல்கி ஆகியோரின் நாவல்களை மிக விரும்பிப் படிப்பேன்.

கே: நடனத்திற்கென அமைக்கும் இசை எப்படி மாறுபடுகிறது?
ப: நடன இசையில் லயம் மிக முக்கியம். நான் ஒரு நடனக் கலைஞனின் கோணத்தில் யோசிப்பேன். இறைவனை யாசிப்பேன். பல்வேறுபட்ட தாளங்களையும், நடைகளையும் தொகுத்து ஆடுபவர்களுக்கும், பக்கபலக் கலைஞர்களுக்கும் உற்சாகம் பிறக்கும் வகையில் எனது பாடல்களை அமைப்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.

கே: நீங்கள் சமீபத்தில் தயாரித்து அளித்து வரும் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' பரபரப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட, சுவாரசியமான வரலாற்றுப் புதினம் ஒன்றை நாட்டிய நாடகமாக அமைக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?
ப: நான் அமரர் கல்கியின் பரம விசிறி. அதிலும் 'சிவகாமியின் சபதம்' நாட்டியத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் என்னை மிகவும் கவர்ந்த ஒரு நாவல். ஆயிரம் பக்கங்கள் கொண்ட கதையை இரண்டு மணிநேரத்துக்குள் கதையமைப்பும், காட்சியமைப்பும், விறுவிறுப்பும் குன்றாமல் நடன வடிவில் மேடையேற்றுவது மிகப்பெரிய சவால்தான். முதலில் அந்தக் கதையை அறுபத்தி நான்கு முறை படித்தேன். பின்னர் பலமுறை ஆய்வு செய்து நாட்டிய நாடகத்திற்கேற்ப மெருகேற்றினேன். இதன் இசையமைப்பில் திரு D.I. ஸ்ரீனிவாஸ் உறுதுணையாக இருந்தார்.

கே: சிவகாமியின் சபதத்தை முதன்முதலில் எங்கே மேடை ஏற்றினீர்கள்? வரவேற்பு எப்படி இருந்தது?
ப: 2013 ஃபிப்ரவரியில் சென்னையில், அதிலும் ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு காட்சிகள் கொடுத்தோம். எந்தச் சினிமாப் பிரபலங்களும் பங்கு பெறாமல் full house tickets விற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் என்மீது வைத்த நம்பிக்கைதான் எனது ஊக்கம். பின்னர் பெங்களூரில் நடத்தியபோதும் அருமையான வரவேற்பு கிடைத்தது. தற்போது சென்னையின் பிரபலமான கிருஷ்ண கான சபாவிலும் மும்பை ஷண்முகானந்த சபையிலும் அழைத்துள்ளார்கள். சமீபத்தில் FETNA சார்பாகக் கனடாவில் நடத்தியபோது, வந்திருந்த 3600 பேரும் நிகழ்ச்சியின் நிறைவில் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

கே: சாதாரணமாக வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள் இந்தியாவிலிருந்தே தாம் பயிற்சியளித்த, பழக்கிய குழுவுடனே வருவார்கள். நீங்கள் இங்குள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில், குறுகிய காலத்தில் பயிற்சியளிக்கும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல், ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு கலைஞர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த சவாலை ஏன் மேற்கொண்டீர்கள்?
ப: இது ஒரு சவால் என்பதாலேயே செய்ய நினைத்தேன். அது மட்டுமல்லாமல் ஒரு கலை வளர, அதைப் பயின்றுவரும் கலைஞர்கள் இணைய வேண்டும், கருத்து பரிமாறிக்கொள்ள வேண்டும். எனக்கும் இது ஒரு நல்ல அனுபவம். அயல் நாட்டின் திறமையுள்ள கலைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும், நடன ஆசிரியர்களுக்கும் இந்த நல்லதொரு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி.

கே: மேற்கொண்டு என்ன செய்ய விருப்பம்?
ப: 'த ஜங்கிள் புக்' பாணியில் 'ஹனுமான்' வழங்க ஆசை. அது ஹனுமான் அருளால் விரைவில் நிறைவேறவேண்டும்.

உரையாடல்: சாந்தி சிதம்பரம்,
நியூ ஜெர்சி

*****


சிவகாமியின் சபதம் மேடைவடிவில் என்ன புதுமை?
நான் கொடுப்பதை ரசிர்கள் பார்க்கவேண்டும் என்று நினைக்காமல், ரசிகர்கள் விரும்புவதைக் கொடுக்கவேண்டும் என்று எண்ணிச் செயல்படுவேன். ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்பைவிட மேன்மையாக இருப்பதற்காக முயற்சி எடுப்பேன். நாட்டிய நாடக சரித்திரத்தில் முதன்முறையாக இரட்டை வேடம் (நாகநந்தியாகவும் புலிகேசியாகவும் மதுரை R. முரளிதரன்); ஒரேநேரத்தில், சிவகாமி வளர்ந்து வருவதைத் துல்லியமாகச் சித்திரிக்க மூன்று பருவ நர்த்தகிகள்-(குமரியாக காவ்யலக்ஷ்மி முரளிதரன், நாயகியாக உமா முரளி);
ஏழாம் நூற்றாண்டைக் கண்முன்னே கொண்டுவரும் முயற்சியாக பத்மவாசனின் ஓவியங்கள் அனிமேஷனில் உயிர்பெற்று மேடையில் வருவது-இவை குறிப்பிடத்தக்கன. மூன்று பாகங்கள் கொண்ட நாவலைத் தீப்பட்டிக்குள் யானையை அடைப்பதுபோல் அடைத்துள்ளோம். தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனங்களான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காவடி மற்றும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்களும் இதில் உண்டு.

- மதுரை R. முரளிதரன்

*****


எங்கே? எப்போது?
அமெரிக்காவில் 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம் நடக்கவிருக்கும் இடங்கள்:

செப்டம்பர் 1 வாஷிங்டன்
அக்டோபர் 5 நியூ ஜெர்சி
அக்டோபர் 19 ஃபிலடெல்ஃபியா
அக்டோபர் 27 அன்று சான் ஃப்ரான்சிஸ்கோ

இவற்றை கோல்டன் எலிஃபண்ட் இவென்ட்ஸ் நிறுவனத்தார் வழங்குகிறார்கள்.

- மதுரை R. முரளிதரன்

© TamilOnline.com