கண்மணி குணசேகரன்
சிறுகதை, புதினம், கவிதை எனப் படைப்புலகில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கண்மணி குணசேகரனின் இயற்பெயர் அ. குணசேகர். விருத்தாசலம் அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இவர், 1971ல் பிறந்தார். எளிய விவசாயக் குடும்பம். பள்ளியிறுதி வகுப்பை முடித்தபின் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (I.T.I.) பயின்றார். அக்காலகட்டமே இவருக்கு எழுத்து விதையூன்றிய காலம். முதலில் கவிதைகள்தாம் எழுதத் துவங்கினார்.

மூச்சுக் கட்டி ஊதவேண்டிய
முக்கியமான கட்டத்தில் எல்லாம்
சீவாளியைக் கழற்றிச் சரிபார்க்கிறது
வயதான நாயனம்.

ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்.

பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.

போன்ற இவரது கவிதைகள் வரவேற்பைப் பெற்றன. கவிதைகளைத் தொகுத்து 'தலைமுறைக் கோபம்', 'காட்டின் பாடல்', 'கண்மணி குணசேகரன் கவிதைகள்' என்ற தலைப்புக்களில் வெளியிட்டார். அவை வரவேற்பும், பாராட்டுதல்களும் பெற்றன. சிறுகதை, நாவல் என்று பங்களிப்பைத் தொடர்ந்தார். இவரது முதல் நாவலான 'அஞ்சலை' இவரை ஓர் இலக்கியவாதியாக அடையாளம் காட்டியது. கடலூர், விருத்தாசலம் பகுதி மக்களின் வட்டார வழக்கில் எழுதப்பட்ட அந்நாவல், அஞ்சலை என்ற அபலை விவசாயக் கூலிப் பெண்ணின் பிறப்பு, வளர்ப்பு முதல் அவள் வேலை, திருமணம், குழந்தைப் பேறு, வாழ்க்கைச் சிக்கல்கள் என அனைத்தையும் வெவ்வேறான சூழல்களில் வெளிக்காட்டுகிறது. மூன்று சமூகங்களுக்கிடையேயான உறவை மிகவும் எதார்த்தமாகவும் வலுவாகவும் காட்சிப்படுத்துகிறது 'அஞ்சலை'. நல்ல வரவேற்பைப் பெற்ற இப்புதினம் கேரள பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பரிசும் இந்த நாவலுக்குக் கிடைத்துள்ளது.

கண்மணி குணசேகரனின் படைப்பு பற்றி, "நேரடியான எதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர் கண்மணி குணசேகரன். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட இவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும். விவசாயத் தொழிலாளிகளின் எழுதித்தீராத துன்பத்தையே குணசேகரன் படைப்புகளின் பொருளாக்குகிறார். மண்சார்ந்த வாழ்க்கை என்பதனால் எதார்த்தவாதத்தைத் தன்னுடைய படைப்பு அழகியலாகக் கொண்டிருக்கிறார்" என்கிறார் ஜெயமோகன். "தமிழ் இலக்கியம் புதுமைப்பித்தனுடன் நின்றுவிடவில்லை. புதுமைப்பித்தனையும் தாண்டி கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் அடுத்த தளத்துக்கு வந்துவிட்டன. ஒவ்வொரு படைப்புக்கும் போர்த் தீவிரத்துடன் செயல்படும் படைப்பாளி அவர். அவருக்குப் புல்லும் ஆயுதம். எழுதப்போகும் வாழ்க்கை பற்றிய தெளிவான திட்டமுண்டு. உத்தியை யோசித்து அலைக்கழிகிறவரும் இல்லை" என்று பாராட்டுகிறார் நாஞ்சில்நாடன்.

குணசேகரனின் இரண்டாவது நாவலான 'கோரை'யும் குறிப்பிடத்தகுந்தது. படையாச்சி, செட்டியார், தலித் ஆகிய மூன்று சமூகத்திற்கும் இருக்கும் இறுக்கமான உறவுப் பின்னல்களை இப்புனைவில் வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்றாவது நாவலான 'நெடுஞ்சாலை' மிக முக்கியமானது. குணசேகரனின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தரமில்லாத பணி செய்யும் (சி.எல். லேபர்) ஒரு ஒட்டுநர், நடத்துநர், எந்திரப் பணியாளர் என்ற மூன்று பணியாளர்களின் வாழ்க்கையை இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். "தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம்முன் வைத்துள்ளார் கண்மணி குணசேகரன். இவர் ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி." என்று சிலாகிக்கிறார் பிரபல விமர்சகர் வெங்கட்சாமிநாதன்.

எதையும் மிகைப்படுத்தாத இயல்பான கதா பாத்திரங்களும், நுண்மையான சித்திரிப்பும், வாழ்க்கை அவதானிப்பும் கொண்டவை கண்மணி குணசேகரனின் படைப்புகள். நடுநாடு என்று சொல்லப்படும் (கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம்) வட்டார வழக்கிலான பேச்சுமொழியைக் கொண்டது இவரது கதையுலகம். பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. இவரது முக்கியமான சாதனை 'நடுநாட்டுச் சொல்லகராதி'யைத் தயாரித்து வெளியிட்டது. கி. ராஜநாராயணனின் கரிசல் வட்டாரச் சொல்லகராதி, பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல்லகராதி ஆகியவை தந்த ஊக்கத்தினால் தனி ஒருவராகப் பல்லாண்டு காலம் உழைத்து, பல இடங்களுக்கும் சென்று தகவல் சேகரித்து ஒப்பீட்டாய்ந்து இந்த அகராதியைத் தயாரித்துள்ளார். ஒரு பல்கலைக்கழகமோ, மொழி ஆராய்ச்சி நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் செய்திருக்கிறார். இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. இது தவிர சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதையும் பெற்றுள்ளார்.

தன் எழுத்து பற்றிக் கண்மணி குணசேகரன், "என்னைப் போலவே, என் கதைகளும் எளிமையானவை. முந்திரிக்காட்டு கிராமத்து மக்களின், எதார்த்தமான வாழ்க்கையை, முருங்கை மரக்கிளையை வெட்டி நடுவதுபோல, பாசங்கு இல்லாமல், இயல்பான மொழிநடையில் கதைகளை எழுதுகிறேன். கிராமம்தான் என் கதை உலகம், அம்மக்கள்தான் என் கதை மாந்தர்கள். மூளையை கசக்கிப் பிழிந்து, ஆய்வு நோக்கில்,கோட்பாட்டு அடிப்படையில், எதையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. சில எழுத்தாளர்கள் மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று சொல்லி வாசகர்களை மிரட்டுகின்றனர். அதுபோன்ற வித்தை எதுவும் எனக்குத் தெரியாது. என் படைப்புகளை, வாசகர்களால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த மண்ணுக்கும் மொழிக்கும் உண்மையான படைப்பாளியாக இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம்" என்கிறார்.

'உயிர்த் தண்ணீர்', 'ஆதண்டார் கோயில் குதிரை', 'வெள்ளெருக்கு' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். விருத்தாசலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரியும் கண்மணி குணசேகரன் விருத்தாசலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாள்தோறும் இயந்திரங்களுடன் போராடும் ஒரு தொழிலாளியாக இருந்துகொண்டு அகராதியைத் தயாரித்திருப்பதுடன் இத்தனை நூல்களையும் எழுதியிருக்கும் கண்மணி குணசேகரனின் இலக்கியப் பேரார்வம் மெச்சத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com