தென்றல் பேசுகிறது...
சிரியா கவலை தருகிறது. ஆகஸ்டு 21 அன்று தலைநகர் டமாஸ்கஸின் ஒரு பகுதியில் ஏவப்பட்ட விஷவாயு ஆயுதம் சில நூறு உயிர்களைக் கொன்றுள்ளது. அதற்கு முன்னே உயர்நிலை ராணுவ அதிகாரிகள் இவ்வாறு செய்வது குறித்த தொலைபேசி உரையாடல் அமெரிக்க உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் கேள்வி, சிரியாவின் மீது போர் தொடுத்து, அதன் அதிபர் பஷார் அசாதைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டுமா என்பதுதான். 2003ல் போதிய ஆதாரமில்லாமல் இராக்கின்மேல் படையெடுத்ததால் ஏற்பட்ட கசப்பு அனுபவம் இன்னும் நினைவைவிட்டு நீங்காத நிலையில், இப்படி ஒரு போரில் இறங்குவது தேவையா என்ற பெருஞ்சங்கடமும் உண்டு. அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல், ஐ.நா.வின் ஒப்புதல் என்று இதில் வெவ்வேறு அம்சங்களும் உள்ளன. அரசுக்கு எதிரான கலகக்காரர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவலாம் என்றால், சிரியாவில் அல் கைதா சார்ந்தது உட்படப் பல கலகக்கார கும்பல்கள் உள்ளன. தவறான கும்பலின் கையில் ஆயுதம் போய்ச் சேர்ந்து அதனால் சாமான்ய மனிதனுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் தேவையாக இருக்கிறது. எதுவானாலும், போர் ஒரு தீர்வல்ல. போரினால் ஏற்படும் நன்மையைவிட அழிவுகளே அதிகம். வேறெந்த வழியிலும் தீர்க்க முடியவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே போரில் இறங்க வேண்டும்.

*****


போர் வருமோ என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதை எழுதும் இந்த நேரத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐத் தாண்டிவிட்டுச் சற்றே இறங்கி 66.55 ஆக இருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம், லஞ்சம், கறுப்புச் சந்தை, காய்கறி, உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்துச் சராசரி மனிதனுக்கு எட்டாத விலைக்கு ஏற்றிவிடுதல் என்று பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நாளொரு ஊழல் செய்தி வெளிவருவதும், அதுகுறித்த ஆவணங்களே காணாமல் போய்விடுவதும் அரசு என்னும் மிகவுயர்ந்த எந்திரத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி நிலையின் விளிம்பில் இந்தியா தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறவர்களும் உண்டு. எத்தனை குறைகள் இருந்தாலும் மக்களாட்சியே மிகச் சிறந்தது என்று நாம் கூறுகிறோம். அதே நேரத்தில், குற்றத்துக்காகக் கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகத் தகுதியற்றவர்களாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியதை எப்படிச் செயல்படுத்தாமல் தடுக்கலாம் என்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒற்றுமை காட்டுவதும் நமக்குச் சில உண்மைகளைத் தெளிவாக்குகிறது. மக்களாட்சியில் மக்களே நம்பிக்கை இழந்துவிடக் கூடாதே என்கிற ஆதங்கத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

*****


திரைப்படப் பிரபலங்களைத் தென்றல் நேர்காணலில் பார்ப்பது அரிது. எல்லா ஊடகங்களும் அவர்கள்மீதே ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கிற நிலையில் நாமும் அதையே ஏன் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அதற்குக் காரணம். அதைவிட முக்கியமான காரணம் என்னவென்றால், திரைப்படம்/டி.வி. அல்லாத துறைகளில் இருக்கும் மேதைகளை வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டும், அவர்களும் மதிக்கப்பட வேண்டும், அவர்களால் இளந்தலைமுறையினருக்குச் சாதிக்கும் உந்துதல் கிடைக்க வேண்டும் என்பதே. இந்த இதழில் ஒரு மாறுபட்ட நடிகரை நேர்காணல் செய்துள்ளோம். பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்து ஜோதிடத்தை மதிப்பவர், கிறிஸ்துவராகப் பிறந்து இந்துமதத்தில் பல அறிவியல் பூர்வமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்று அடித்துக் கூறுபவர் என்று இப்படிச் சுயசிந்தனையின் உருவகமாக நிற்பவர் நடிகர் ராஜேஷ். அவரது நேர்காணல் சிந்தனைக்குத் தீனி. பெண்களின் உணர்வுகளைத் தாங்கிய நாட்டியப் பாடல்களே மிகுந்திருந்த நேரத்தில், ஆண்கள் அபிநயிக்கவும் ஏற்பப் பாடல் வேண்டும் என்று எண்ணி, பல்வேறு ராகங்கள், தாளக்கட்டுகள், ரசங்கள் இவற்றில் பாடல்கள் இயற்றியுள்ள மதுரை R. முரளிதரன் நேர்காணலும் சுவையானதுதான். தெரிந்தெடுக்கப்பட்ட பிற அம்சங்களும் வழக்கம்போல உண்டு. இனி சுவைப்பது உங்கள் கையில்!

வாசகர்களுக்குப் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

செப்டம்பர் 2013

© TamilOnline.com