அரங்கேற்றம்: யஷனா நந்தன்
மே 18 அன்று செல்வி. யஷனா நந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம் கலிஃபோர்னியாவின் சான்டா ஆனாவில் உள்ள கோடினே உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. நடேச கவுத்துவத்திலிருந்து அரங்கேற்றம் களைகட்டத் துவங்கியது. வாசஸ்பதி ராக ஜதீஸ்வரத்தில் ஜதிகளுக்கேற்பச் சிறப்பாக ஆடித் தனது ஞானத்தை வெளிப்படுத்தினார் யஷனா. நாட்டியத்துக்கு அலங்காரமான சங்கராபரண வர்ணத்தை தாளம், பாவத்துடன் சித்திரித்து அனாயாசமாக 50 நிமிடங்கள் ஆடினார். இடைவேளைக்குப் பின்னர் ஆடிய நான்கு நடனங்களும் வெகு சிறப்பு. ஜாவளியில் பாவங்களை வெளிப்படுத்திய விதம் அருமை.

மோஹனத்தில் 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' என்னும் பதத்துக்கு ஆடியதில் அமெரிக்காவிலிருந்தே ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க முடிந்தது! 'அலைபாயுதே' பாடலுக்கு 'கிருஷ்ணா, ஏன் என்னிடம் உனக்கு இந்த அலட்சியம்' என்ற பாவத்தை வெளிப்படுத்தியது அழகான அனுபவம். இறுதியாக ஆடிய தில்லானாவும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த குரு ரம்யா ஹரிசங்கரும், பக்கபலமாக இருந்த ஜி. ஸ்ரீகாந்த், ஜி. நட்ராஜ், கிரண் ஆத்ரேயா, பி. ஹரிபாலு ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com