ஜூன் 1, 2013 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திர கோவிலில் 'பாலசம்ஸ்க்ருதி சிக்ஷா' தனது மூன்றாம் ஆண்டு நிறைவை, தெய்வீக இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு ஃப்ரீமான்ட் நகரின் துணைமேயர் திருமதி. அனு நடராஜன் தலைமை விருந்தினராகவும், நந்தலாலா மிஷன் அமைப்பின் நிறுவனர் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
பங்குபெற்ற அத்தனை குழந்தைகளும் 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் சுலோகங்களையும், தோத்திரங்களையும், பஜனைப் பாடல்களையும் தெளிவாகவும் அழகாகவும் இசைத்தனர். 'சபரியின் குருபக்தி' என்ற நாடகத்தில் நடித்த குழந்தைகள் நன்றாக ஆங்கிலத்தில் வசனம் பேசி நடித்தனர். 'ஜெயஜெய சக்தி' என்ற நாட்டியப் படைப்பின் மூலம் தேவி சக்தியின் பல்வேறு பரிமாணங்களைக் கண்ணுக்கு விருந்தாக்கினர். பூஜ்யஸ்ரீ மதியொளி ஸரஸ்வதி அவர்கள் தமது உரையில் இவர்களைப் பாராட்டினார். திருமதி. அனு நடராஜன் தமது சிறப்புரையில் தமது இளம்பருவத்தில் இதைப் போன்ற குழந்தைகள் சங்கத்தில் பங்குபெற்று பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தார். குழந்தைகளுடன் சுவாரஸ்யமாக கலந்துரையாடினார். "யார் குரு?" என்ற அவரது கேள்விக்கு "நமக்கு வாழ்க்கையில் சரியான வழி காட்டுபவர்" என்று பதிலளித்த குழந்தையை அரங்கமே மெச்சியது.
'பாலசம்ஸ்க்ருதி சிக்ஷா' வளைகுடாப் பகுதி இந்தியக் குழந்தைகளுக்குப் பண்பாடு, தெய்வ நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றை போதிக்கும் எண்ணத்துடன் நீரஜா பரமேஸ்வரன், மகேஸ்வரி ரங்கன் ஆகியவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சுலோகம், எளிய பஜனைப் பாடல்கள், புராணக் கதைகள் மூலம் நல்லொழுக்கம், தியானம் ஆகியவற்றை இங்கு வசிக்கும் குழந்தைகள் பின்பற்றும் வகையில் எளிய முறையில் கற்பிக்கின்றது. உடன்வரும் பெற்றோர்களும் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். விவரங்களுக்கு balasamskriti@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.
மேகி ரங்கன், சன்னிவேல், கலிஃபோர்னியா |