அரங்கேற்றம்: பிரியா நாகராஜன், உமா சுப்ரமணியன்
ஜூன் 15, 2013 அன்று, மில்வாக்கி கிரீன்ஃபீல்ட் ஹைஸ்கூலில் திருமதி. பிரியா நாகராஜன், அவருடைய மகள் உமா சுப்ரமணியன் இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நாட்யார்ப்பணாவின் குரு கிருபா பாஸ்கரனிடம் இவர்கள் நாட்டியம் பயின்று வருகிறார்கள். ஜோக் ராகத்தில் புஷ்பாஞ்சலியில் தொடங்கி, கமாஸ் ராக 'மாதே' வர்ணத்தில் தேவியின் லீலைகளை இருவரும் மாறிமாறி ஆடினர்.

மகிஷாசுரவதம், முருகன் மாம்பழ லீலையை அழகாகச் சித்திரித்தனர். உமா ஆடிய கமாஸ் ராக 'இடதுபதம் தூக்கி ஆடும்' பதத்துக்கு நடராஜரின் நடனத்தையும் அதை ரசித்த பதஞ்சலி, வ்யாக்ரபாதரையும் கண்முன் நிறுத்தியது. பிரியா 'வள்ளிகணவன் பேரை' என்ற காவடிச் சிந்துக்கு பாவங்கள் காட்டிச் சிறப்பாக ஆடினார். அதன் பின்வந்த ரமண மகரிஷியின் அக்ஷரமணமாலையில் இருந்து சில வரிகளை எடுத்து ஸ்வரம் அமைத்த அமிர்தவர்ஷிணி பதம் எல்லோரையும் திருவண்ணாமலைக்கே கூட்டிச் சென்றது. டாக்டர். அம்பிகா காமேஸ்வரின் 'ஞானஜ்யோதியின் வடிவே ரமணா' என்ற ஹம்சாநந்தி தில்லானா மெய்மறக்கச் செய்தது.

முரளி பார்த்தசாரதி (பாட்டு), M.S. சுகி (மிருதங்கம்), கன்னியாகுமரியின் சிஷ்யர் வீரமணி (வயலின்), கிருபா (நட்டுவாங்கம்) பரவசப்படுத்தின. ரமணரைப் பற்றிய மங்களத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

உமா எட்டாம்வகுப்பு படிக்கிறார். செஸ், டென்னிஸ் ஆகியவற்றில் பரிசுகள் பெற்றிருக்கிறார். கர்நாடக இசையும் பயின்று வருகிறார். பிரியா FedEx ல் IT மேனேஜராகப்பணிபுரிகிறார்.

சேதுலக்ஷ்மி,
மில்வாக்கி, விஸ்கான்சின்

© TamilOnline.com