2013 ஜூன் 15, 16 தேதிகளில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆண்டு பிறந்தநாளை இந்து ஸ்வயம் சேவக் சங்கம் சிகாகோவில் கொண்டாடியது. விழாவில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் அமெரிக்க மற்றும் இந்திய மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஆன்மிகச் சிந்தனைகளையும், அவர் செப்டம்பர் 11, 1893 சிகாகோ கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவையும் நினைவுகூரும் வகையில் 'Dhrama Bee' என்ற போட்டியை அமெரிக்காவில் வாழும் சிறுவர்களுக்காக ஜனவரி 12 அன்று அறிவித்தது. இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் பங்கேற்க மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை அனுப்பினார்கள்.
மொத்தம் நான்கு பிரிவுகள். K - 8th Grade மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் மூன்று நிமிடப் பேச்சுப் போட்டி, தாங்கள் சென்று வந்த ஆன்மிக இடங்கள் பற்றிய அனுபவங்களை எடுத்துரைத்தல், எழுத்துத் தேர்வு ஆகியவை இருந்தன. இறுதியாகக் குழுச் செயல்பாட்டில் மாணவர்களை அணிகளாகப் பிரித்து ஒரு குழுப்பணி கொடுத்து, பங்கேற்பாளரின் கூட்டுச் செயல் திறனைப் பரிசோதித்தனர். போட்டி ஒருநாள் முழுதும் நடந்தது. விழா நடத்துனர்கள் அனைவரையும் சிகாகோ கலைக் கழகத்திற்கு அழைத்துச் சென்று, சுவாமி விவேகானந்தர், உலகம் பிரமிக்க வைக்கும் வகையில் கொடுத்த சொற்பொழிவை ஆற்றிய மேடையில் சிறுவர்கள் நிற்கும் வாய்ப்பை அளித்தார்கள். பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ்வுமன் துளசி ஹபர்ட் வந்திருந்தார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக சிகாகோ ஹிந்து சேவக் சங்கக் குழந்தைகள் நடித்தார்கள். சங்கத் தலைவர் நந்தா, இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கும் ஹிந்து கலாசாரம் செழித்து வளரும் என்று கூறினார்.
மேலும் போட்டியைப் பற்றிய விவரம், நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் தெரிந்து கொள்ள www.hssus.org
செய்திக்குறிப்பிலிருந்து |