ஜூன் 29, 2013 அன்று அஞ்சலி நாட்யாவின் மாணவி செல்வி. ஜனனி விஜயகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. முதலாவதாக கணேசரையும், நடராஜ மூர்த்தியையும், குருவையும் ஆசி வேண்டி கம்பீர நாட்டையில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து தோடய மங்களத்தில் ராமர், கிருஷ்ணர் ஏழுமலையானாகவே பாவித்து ஜனனி ஆடியவிதம் சிறப்பு. லால்குடி ஜெயராமனின் 'செந்தில் மேவும் சிவபாலா' (நீலாம்பரி) வர்ணத்திற்கு அருமையாக வடிவமைத்திருந்தார் குரு ராதிகா கிரி. அதற்கு ஜனனி ஆடிய விதம் சபையோரின் கைதட்டலைப் பெற்றது.
நடனம் ஆடினார் என்ற வசந்த ராகக் கீர்த்தனையும், கஞ்சதளாயதாட்சி என்ற மனோகரி ராகக் கீர்த்தனைக்கும் காமாட்சியாக எட்டுவித பாவங்களில் வித்தியாசமான முத்திரைகளுடன், அருமையான முகபாவங்களுடன் ஜனனி ஆடியது நெகிழச் செய்தது. பூர்விகல்யாணி ஜாவளி, பிருந்தாவன சாரங்கா தில்லானா ஆகியவற்றில் நிறைவான அபிநயமும், தாளக்கட்டும் ஒருசேர ஆடியது உள்ளத்தைக் கவர்ந்தது. இறுதியாகத் திருப்புகழுக்கு ஆடி நிறைவு செய்தார் ஜனனி. அழகாகப் பாடிய ஜி. ஸ்ரீகாந்த், வாசிப்பால் மெருகூட்டிய எல். கேசவன், முத்துக்குமார் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். ஜனனி விஜயகுமார் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காகப் பல கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
கௌசல்யா சுவாமிநாதன், ப்ளசண்டன், கலிஃபோர்னியா |