அரங்கேற்றம்: ராதிகா ராமகிருஷ்ணன்
ஜூலை 13, 2013 அன்று லேக் ஜூரிக் நிகழ்கலை மையத்தில் நட்ராஜ் டான்ஸ் அகாடமி மாணவி செல்வி. ராதிகா ராமகிருஷ்ணனின் பரத நாட்டியம் மற்றும் குச்சிபுடி நடன அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி. ஸ்மிதா அருண் விருந்தினரை வரவேற்றார். நட்ராஜ் டான்ஸ் அகாடமி 1983ம் ஆண்டு நிறுவப்பட்டது. குரு விஜயலட்சுமி ஷெட்டி அதன் முக்கிய இயக்குனர். டொராண்டோ, கனடாவிலிருந்து வந்திருந்த தொழுதகு. ஜான் பேட்டர்சன் நிகழ்ச்சியை ஆசிர்வதித்தார்.

நாட்டை ராகத்தில் கணபதி துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஹம்சாநந்தியில் சிவஸ்துதியும், கமாஸ் ராகத்தில் மீனாட்சி வழிபாடும் தொடர்ந்தன. ராமாயண நவரசத்தில் அபிநயம், பாவம் மற்றும் பக்தியை மிகவும் அழகாக ராதிகா வழங்கினார். இடைவேளைக்குப் பின்னர் குச்சிபுடி பிரிவில் பிரபலமான பாமா கலாபமும், ஆரபியில் கிருஷ்ண வழிபாடும், ஹிந்தோளத்தில் தில்லானாவும் வெகு அழகு. தொடர்ந்து சிம்ஹநந்தினியில் ராதிகா சிக்கலான பாதவேலையைப் பயன்படுத்தி துர்கா தேவியின் சிங்க வாகனம் படத்தை உருவாக்கினார்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டிலிருந்து ஸ்பென்சர் குடும்பம் முக்கிய விருந்தினராக வந்திருந்து வாழ்த்தினர். ராதிகாவின் சகோதரர் ஸ்ரீஹரி நன்றியுரை வழங்கினார். ராதிகாவின் தாயார் லட்சுமி ராமகிருஷ்ணன் நிறைவுரை கூறினார், அட்சயா இசை அகாடமி மீனு பசுபதி (பாட்டு), கிருஷ்ணா பாலகிருஷ்ணன் (மிருதங்கம்), டாக்டர். பிரசாத் ராமச்சந்திரன் (வயலின்), ஜெயஸ்ரீ பிரசாத் (வீணை) ஆகியோர் நல்ல பக்கபலம்.

© TamilOnline.com