2013 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் நாட்களில் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து பன்னாட்டுப் புறநானூறு மாநாடு ஒன்றை Cultural center (Montgomery College, 7995 Georgia Ave, Silver Spring MD 20910) வளாகத்தில் நடத்த உள்ளனர். பேரறிஞர் மருதநாயகம், கவிஞர் அறிவுமதி, முனைவர் இறையன்பு பேராசிரியர் முருகரத்தனம், பேராசிரியர் அண்ணாமலை, திருமதி. வைதேகி ஹெர்பர்ட் ஆகிய தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.
வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து புறநானூற்றைப் படித்து வந்தனர். படிக்கச் சற்று கடினமாக இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதைக் கூறும் நூல் புறநானூறு என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சங்க காலத் தமிழனின் மதச்சார்பற்ற வாழ்வியல், வீரம், கொடை, ஈகை, விருந்தோம்பல் ஆகியவற்றை அதன்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று கூறிய கணியன் பூங்குன்றனாரின் பரந்த நோக்கு வியப்பிலாழ்த்தியது. மன்னர்களின் வீரம், செங்கோன்மை, புலவரைப் பாராட்டும் பண்பு, பாணர், விறலியர், பொருநர் ஆகிய கலைஞர்களுக்குப் பொன்னும் பொருளும் வரையாது வழங்கிப் பாராட்டிய பெருந்தன்மை, பாரி, பேகன் போன்ற வள்ளல்களின் தன்னலமற்ற, அருள்கூர்ந்த உயிர்நேயம் ஆகிய சிறப்புக் கூறுகளால் புறநானூறு கற்றோரைக் கவர்ந்தது. கையறுநிலைப் பாடல்கள் கண்கலங்கச் செய்தன.
புறநானூற்றைப் பலரும் படித்துப் பயன்பெறவெண்டும் என்ற எண்ணத்தோடு ஐந்து ஆண்டுகளில் பலமுறை புறநானூறு தழுவிய கருத்தரங்கங்களை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு, புறநானுறு வாசிப்பு முற்றுப் பெறவே, அதுகுறித்து ஒரு பன்னாட்டு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் அறிஞர்கள் கூடிப் புறநானூற்றின் பெருமையைப் பேசுவதோடல்லாமல், மற்றவர்களைப் புறநானூற்றைப் படிக்கவும், அதுபற்றிய சிந்தனையைத் தூண்டவும், அதன் கூறுகளை ஆய்வு செய்யவும் வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மாநாட்டில் மாணவர்களும் பெரியவர்களும் கலந்துகொள்ளத் தக்க பல போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மாநாடு புறநானூறுக்கென நடைபெறும் முதல் பன்னாட்டு மாநாடு ஆகும். மாநாடு பற்றிய விவரங்களைப் பார்க்க: www.classicaltamil.org
பிரபாகரன், மேரிலாந்து. |