ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-6)
இதுவரை....
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உதவிச்சேவையின் முக்கியத்துவம், தனியார் (angel) மூலதனம் விற்பதா வளர்ப்பதா, என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்!

*****


கேள்வி: எனக்கு ஒரு நிறுவனம் தொடங்கப் புது யோசனை பிறந்துள்ளது. நான் கலந்தாலோசித்த சிலர் என் தற்போதைய வேலையை விட்டு உதறிவிட்டு, தாமதமின்றித் தன்னம்பிக்கையோடு நிறுவனத்தை ஆரம்பித்துவிடு என்கிறார்கள். ஆனால் எனக்கோ யோசனையை இன்னும் ஆராய்ந்து வெற்றிக்கான வாய்ப்பை மேலும் கணித்துவிட்டுப் பிறகு என் நல்ல வேலையை விடலாம் என்று தோன்றுகிறது. எது சரி?

கதிரவனின் பதில்: இன்னொரு மிக நல்ல, ஆனால் பதிலளிக்க வெகு கடினமான கேள்வி! (யம்மாடியோவ்! நல்லா கேட்டுட்டீங்க போங்க! இந்த மாதிரி கேக்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க! பதில் சொல்றத்துக்குள்ள மண்டை காஞ்சுடுது) இந்தக் கேள்விக்கும் 100% இந்த மாதிரிதான் செய்ய வேண்டும், அந்த மாதிரி செய்யக் கூடாதென்று கறாராகக் கூறிவிட முடியாது. இருந்தாலும், சென்றமுறை மாதிரி, எனக்குத் தெரிந்த அளவுக்கு இரண்டு பக்கத்தையும் விளக்குகிறேன். அப்புறம் உங்களுக்கேற்ற சரியான முடிவெடுப்பது உங்கள் பாடு!

நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையும், அதற்கான யோசனையும் பலருக்கும் வருகிறது. ஆனால் அந்த முயற்சியில் குதித்து 100% முனைப்புடன் தீவிரமாக முயல்வதா அல்லது நிதானமாக யோசித்து வெற்றி நன்கு சாத்தியமே என்று தெரிந்தவுடன் ஆரம்பிப்பதா என்பது பலப்பல அம்சங்களைப் பொருத்தது: யோசனை என்ன, அது குறி வைக்கும் வணிகச் சந்தை என்ன (எவ்வளவு பெரியது, எவ்வளவு வேகமாக வளர்கிறது), நிறுவனரின் குணாதிசயம், நிறுவனரின் பொருளாதார, குடும்ப நிலவரங்கள், அவரால் எப்படிப்பட்ட இணைநிறுவனர்கள் மற்றும் குழுவினரை ஈர்க்க முடிகிறது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனால், நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்கு அடிப்படையாக அமையும் அத்தியாவசியமான அம்சங்களைப் பற்றி முதலில் கூறுகிறேன். அதன் பிறகு முடிவெடுக்கும் வழிமுறை என்ன என்று பார்ப்போம். முதலாவதாக, யாராக இருந்தாலும் சரி, நிறுவனர் ஆக வேண்டுமானால் அவர்களுக்கு மிக பலமான தன்னம்பிக்கை இருந்தே தீர வேண்டும்.
அதாவது, நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு நாளும் துயிலெழும்போது என்னடா இப்படி முட்டாள்தனமாக நல்ல வேலையை விட்டுவிட்டு இந்த ஆரம்ப நிறுவனச் சனியனைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோமே, இது பலனளிக்குமா என்று சந்தேகத்தோடு அங்கலாய்த்துக் கொண்டு எழுவதானால், நிச்சயமாக ஆரம்பிக்கக் கூடாது! நல்ல வேலையிலேயே இருப்பதே சரி, அல்லது நல்ல மூலதனமுடைய வேறு ஆரம்ப நிறுவனத்தில் சேரலாம். அதாவது, நிறுவனம் ஆரம்பிப்பதற்குத் தேவையான, அடிப்படையான முதல் அம்சம் தன்னம்பிக்கைதான்.

துளிரும் யோசனையை வைத்து நிறுவனத்தை ஆரம்பிப்பதே கடினம். மேலும் அதை ஒரு தழைத்து வளரும் ஸ்தாபனமாக உருவாக்குவது தன்னம்பிக்கையோடு செயல்பட்டால்தான் முடியும்! நான் ஏற்கனவே, ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றிய என் கட்டுரைத் தொடர்களில் பலமுறை கூறியுள்ளதென்னவென்றால், எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெற்றியடைவதில்லை (டாட் காம் கொப்புளக் காலத்தைத் தவிர!). உங்கள் வழிப்பாதையில் தோன்றப் போகும் இடைஞ்சல்களும் முட்டுக்கட்டைகளும் கணக்கற்றவை. அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது சாதாரணமா என்ன! தன்னம்பிக்கையில்லாவிட்டால் வாய்ப்பே கிடையாது.

சரி, ஒரு பிரமாதமான உதாரணத்துக்கு வருவோம். கூகிள் நிறுவனம் இப்போது கொடி கட்டிப் பறந்து பில் கேட்ஸின் மைக்ரஸாஃப்ட், ஏன், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறதல்லவா? அதன் ஆரம்ப கால அல்லல்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? தேடல் என்பது மிகச் சர்வ சாதாரணமானது, அதற்கு மதிப்பதிகமில்லை என்று அதை ஒரே ஒரு மில்லியன் டாலருக்கு விற்கும் முனைப்பு வந்தது. ஆனால் நிறுவனர்களின் தன்னம்பிக்கையால் விற்காமல், இன்னும் முக்கியமாக, மனந்தளராமல் தொடர்ந்தனர். தேடலை வைத்து டாலர்களை பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் நிறுவனமாகிவிட்டது! (முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, கண்முன் நடனமிடும் தொகையை மறுத்து நிறுவனத்தை வளர்ப்பதென்பது அபாரமான தன்னம்பிக்கை இருந்தால்தானே முடியும்).

மேலும் உங்கள் யோசனைமீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு யாருக்கும் எப்படி நம்பிக்கை உண்டாகும்? எவ்வாறு மூலதனத்தாரை உங்கள்மேலும், உங்கள் யோசனை மேலும் நம்பிக்கை வைத்து மூலதனமிடச் சம்மதம் பெறுவீர்கள்? அதே போல், நம்பிக்கையில்லாவிட்டால், இணைநிறுவனர்களையும், நிறுவனத்தின் முதல் பணியாளர்களையும் ஈர்ப்பது முடியாத காரியந்தான். சந்தேகமும் தன்னம்பிக்கையின்மையும் மிகக் கொடுமையானவை. மேன்மேலும் தோல்வி மனப்பான்மையை உரம் போட்டு வளர்த்து, தன்னையே பலிக்கவைக்கும் தீய ஜோதிடக் கருத்துக்களாகிவிடும் (self fulfilling negative prophecies).

தன்னம்பிக்கை இருப்பதால் மட்டும் ஆரம்பித்து விடுவதா? அது போதாது. இன்னும் பல அம்சங்கள் (மேல் கூறியவை உட்பட) தேவை. அவை திரண்டு சேருமாயின், அல்லது சேரும் என்று பலமான முன்குறிகளும் தோன்றினால், ஆரம்பிப்பது நல்லதுதான். அத்துடன் பிணைப்புள்ள பல நுணுக்கங்களை இப்போது காண்போம்.

நானும், என்னைவிட அனுபவம் அதிகமுள்ள பல அறிஞர்களும் கூறியுள்ளபடி யோசனைகள் மிக மலிவானவை. காசுக்கு நூறு என்பார்களே அம்மாதிரி. நல்ல யோசனை என்று உங்களுக்குத் திடீரெனத் தோன்றிவிட்டால் போதாது. அந்தமாதிரி ஒன்று கிடைத்து விட்டது என்பதால் மட்டும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையுடன் எச்சரிக்கை உணர்வைக் காற்றில் பறக்கவிட்டு களத்தில் குதித்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிடுவது விவேகமென்று கூற முடியாது.

முன்பு குறிப்பிட்டபடி, பல அம்சங்களையும் கலந்து கருதியே செயல்பட வேண்டும். அதற்காக யோசித்துக் கொண்டே இருங்கள் என்று நான் சொல்லவில்லை. நான் கூறும் அம்சங்களை அளவிட நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்ல்லை. சில நாட்களுக்குள்ளேயே வேகமாக முடியக் கூடும். ஆனால் அளவிட அதிகமாகத் தேவையானது விவேகந்தான். இப்போது அந்த அவற்றைச் சற்று விளக்கமாகக் காண்போம்:

முதலாவதாக எடைபோட வேண்டியது உங்கள் யோசனையைத்தான். நீங்கள் குறிவைக்கும் வணிகத் துறையிலுள்ள சில பேரிடம் பேசி உங்கள் யோசனை எவ்வளவு நல்லது, அதை எவ்வாறு பதமாக்க வேண்டும் என்று பார்க்கவேண்டும். ஒரு வைரம்கூட, நன்கு பட்டை தீட்டப்பட்ட பின்தானே மதிப்புயர்கிறது! உங்கள் குறியில் உள்ள வணிகத் துறையின் அளவும் வளர்ச்சியும் உங்கள் யோசனைக்கு எப்படிச் சரிபட்டு வரும் என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, உங்கள் யோசனை நிறுவன பயனர் மென்பொருள் (enterprise application software) துறையில் என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய தருணத்தில், பெருநிறுவனங்களின் தகவல் மையங்களில் நிலைநாட்டப்பட வேண்டிய மென்பொருள் உருவாக்குவீர்களா, அல்லது வலைமேகத்திலிருந்து சேவையாக அளிக்கப்படக் கூடிய மென்பொருளைப் பற்றி யோசனையா?

முதல் வகையைவிட இரண்டாம் வகைக்கு வாய்ப்பு அதிகம் என்பேன். மேலும் இந்நிறுவனம் பெரிதாக வளர்ந்து தனியாக நிலைக்கக் கூடியதா, அல்லது நீங்கள் ஓரளவுக்கு தொழில்நுட்பமாக வளர்த்து வேறொரு நிறுவனத்துக்கு விற்றுவிட உத்தேசமா. இரண்டுக்கும் மிக்க வேறுபாடு உள்ளதல்லவா? வணிக ரீதியான வாய்ப்பைப் பற்றி சற்று ஆராய்ந்து வெற்றி வாய்ப்பு சற்றேனும் உள்ளதா, அல்லது ஆரம்பத்திலிருந்தே எதிர்நீச்சலா என்று அறிந்துகொள்வது நன்று.

சரி. உங்கள் யோசனையின் வணிகத் துறையிலுள்ள சிலரிடம் கலந்தாலோசித்ததில் நல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய வேலையை உதறிவிட்டு முழு முனைப்புடன் புது முயற்சியில் இறங்குமுன் அதற்குத் தக்க குணாதிசயம் உங்களுக்கு உள்ளதா என்று தன்னாய்வு செய்துகொள்வது நல்லது. ஆரம்பித்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடத்தான் செய்யும். ஆனால் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், நேர்மறையான மனப்பாங்கு தேவை. பல சிறு தோல்விகளையோ மறுத்தல்களையோ சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது தட்டிவிட்டுக் கொண்டு, வேண்டிய மாற்றங்களை அமுலாக்கி மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கு உள்ளதா, அல்லது இது வெற்றியடைய வாய்ப்பேது என்று மனம்தளரக் கூடியவரா?

மிக இருண்ட தருணங்களிலும் உங்கள் உள்மனத்தில் யோசனை மீதும் தன்மீதும் அசையாத நம்பிக்கை இருக்கும் மனப்பாங்கு இருந்தால்தான் ஆரம்பநிலை நிறுவனத்தின் பல இடைஞ்சல்களையும், தடங்கல்களையும் கடந்து வெற்றி காண முடியும். அப்படியில்லாவிட்டால், தனியாக ஆரம்பிப்பது கடினந்தான். குறைந்தபட்சம் அப்படிப்பட்ட தளராத, உற்சாக மனப்பாங்குள்ள இணைநிறுவனருடன் சேர்ந்து களத்தில் இறங்கலாம்.

அப்படி ஒருவர் கிடைத்தால், அவர் அபாயங்களைப் பற்றியோ, குறைகளைப் பற்றியோ சிறிதும் யோசிக்காது நடந்து கொண்டால், உங்கள் மனப்பாங்கு அத்தருணங்களில் சரியான நடவடிக்கை எடுக்கத் தேவையாயிருக்கலாம். இரண்டு குணாதிசயங்களும் ஒத்துப் போகுமா என்பது வேறு விஷயம். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு கலந்தாலோசிக்கும் இணைநிறுவனர்களாக இருப்பின் இந்த மாறுபட்ட குணாதிசயங்கள் நிறுவனத்துக்கு பலமாகவும் அமையக்கூடும்.

அடுத்து, உங்கள் பொருளாதார மற்றும் குடும்ப நிலை. தற்போதைய ஊதியத்தில் அல்லது பங்கு வருமானத்தில் நிறையச் சேமித்ததால் பலமாதக் கணக்கில் ஊதியமின்றிக் குடும்பம் நடத்த முடியுமா என்று யோசிக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிக்குப் பிறகும் நிறுவனம் தோல்வியடைந்து இழுத்து மூட நேர்ந்தால் பரவாயில்லையா? திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தேவையான நேரம் நீங்கள் ஒதுக்கக் குடும்பத்தினரின் சம்மதமும், ஒத்துழைப்பும் உள்ளதா? (தனிக்கட்டையானால், இது சற்று எளிதாகிறது). சேமிப்பில்லாவிட்டால், குடும்பம் நடத்தும் அளவுக்கு சேவைத்துறையில் வருமானம் (consulting services) பெற முடியுமா என்று கணிக்க வேண்டும். அப்படி இருந்தால், ஆரம்பிக்கும் நிறுவனம் மூலதனம் பெறும்வரை குறைந்த நேரமே செலவிட முடியும். இதையும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

இன்னும் இம்மாதிரி நிறைய அலசிக் கொண்டே போகலாம்! ஆனால் இறுதியாக ஒரு முக்கியமான அம்சத்தைக் கூறிவிட்டு இந்த யுக்தியைப்பற்றி முடித்துக் கொள்வோம்.
முந்தைய யுக்தி ஒன்றில் தனிமரம் தோப்பாகாது, நிறுவனம் ஆரம்பிக்கக் குழு அத்தியாவசியம் என்று கூறியிருந்தேன். (ஏன், இப்பகுதியிலேயே, மேற்கொண்ட குணாதிசய அம்சத்தில் கூட குறிப்பிட்டுளேன்). நீங்கள் மட்டும் வேலையை விட்டு ஆரம்பித்து விட்டால் போதாது. உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உழைக்க முன்வரும் ஒரு தோழனாவது உண்டா? அப்படியில்லாவிட்டால் நிறுவனம் நடத்துவது மிகவும் கடினம். பல விஷயங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கவும், உங்கள் பலவீனங்களுக்கு (ஆமாம், எல்லாருக்கும் பலவீனங்கள் உள்ளன, உங்களுக்குந்தான்!), ஈடு கொடுக்கும், இட்டு நிரப்பும் திறன் கொண்ட இணை நிறுவனர் ஒருவராவது கிடைத்தால்தான் நல்லது.

மேற்கூறிய அம்சங்களாவது சரிப்பட்டுள்ளன என்று பலமாகக் கருதினால், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்கள் நிறுவனம் ஆரம்பிக்கத் தயாராகிவிட்டீர்கள். அவற்றில் ஒன்று குறையாக இருந்தால் கூட இன்னும் நன்கு யோசித்தே செயல்படுங்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பார்ப்போம். அடுத்த முறையாவது சற்று எளிதான விஷயமாகக் கேளுங்களேன், ப்ளீஸ்?!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com