வாலி
தமிழ்த் திரையுலகின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பில் இருந்தவரும் கண்ணதாசனை அடுத்த மிக முக்கியக் கவிஞருமான வாலி (82) சென்னையில் காலமானார். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். அக்டோபர் 29, 1931ல் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலி, பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். பின் ஓவியக் கல்லூரியில் பயின்றார். நாடகம், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நண்பர்களுடன் இணைந்து 'நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகையை சிலகாலம் நடத்தினார். திருச்சி வானொலிக்காகப் பாடல்கள், நாடகங்கள் எழுதினார். திரைப்படத்துக்குப் பாடல் எழுதும் ஆர்வம் இருந்தது. "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திரராஜனுக்கு எழுதி அனுப்பினார். இவரது திறமையை அறிந்த டி.எம்.எஸ். இவரைச் சென்னைக்கு வரவழைத்தார். 1958ல், 'அழகர்மலை கள்வன்' படத்தில் "நிலவும் தரையும் நீயம்மா...' என்ற பாடலை எழுதினார். படிப்படியாக வாய்ப்புகள் வரத் துவங்கின.

எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி இன்றைய சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் வரை நடித்த படங்களில், பன்னிரண்டாயிரத்திற்கும் மேல் பாடல்கள் எழுதிக் குவித்திருக்கிறார் வாலி. குறிப்பாக, "கண் போன போக்கிலே கால் போகலாமா", 'நான் ஆணையிட்டால்...", "தரைமேல் பிறக்க வைத்தாய்," "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" போன்ற பல பாடல்களை எம்ஜிஆருக்காக எழுதி அவரது அரசியல் வெற்றிக்கு வாலியும் ஒரு காரணமானார். 'துட்டுக்கு முட்டையிடும் பெட்டைக் கோழி நான்' என்று தன் கவிதை பற்றிச் சொல்லிக் கொண்ட வாலி "அவதார புருஷன்", "பாண்டவர் பூமி", "ராமானுஜ காவியம்", "கிருஷ்ண விஜயம்", "அழகிய சிங்கர்" போன்ற இலக்கிய ஆக்கங்களையும் எளிய தமிழில் தந்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். "சத்யா", "ஹேராம்", "பார்த்தாலே பரவசம்", "பொய்க்கால் குதிரை" போன்ற படங்களில் நடித்துள்ளார். "கலியுகக் கண்ணன்", "ஒரு கொடியில் இரு மலர்கள்", "சிட்டுக்குருவி", "ஒரே ஒரு கிராமத்திலே" உட்பட 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி, பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். வாலியின் மனைவி ரமணதிலகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார். தனிமையிலும், முதுமையிலும் தவித்த கவிஞர், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். வாலிக்கு ஒரே மகன், பெயர் பாலாஜி. 'வாலிபக் கவிஞர்' என அறியப்பட்ட கவிஞர் வாலிக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com