தெரியுமா?: சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்
சிலப்பதிகார நாட்டிய நாடகம், நகரத்தார் கூட்டமைப்பு மாநாட்டு விழாவில் சான் ஹோசே சிவிக் சென்டரில் நடந்தது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தலைமுறையினர் இளங்கோவின் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். 61 பேர் அடங்கிய இந்த நாட்டியக்குழு பார்வையாளர்களாக வந்திருந்த ஆயிரம் பேரையும் கட்டிப்போட்டது. மதுரை முரளிதரன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேறியது இந்நாடகம். பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள், மாணவியர் என ஆண்களும், பெண்களுமாய் பாஸ்டன், நியூஜெர்சி, கலிஃபோர்னியா, வாஷிங்டன் என பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.

முன்னரே வீடியோவில் சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்துத் தமது பகுதிகளைப் பயிற்சி செய்து, மற்ற பாத்திரங்களுடன் எப்படி இணைய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தியிருந்தனர். ஜூலை 1 முதல் 6 வரை அனைவரும் ஒன்றாகப் பயிற்சி செய்து நாடகத்தை அரங்கேற்றினர். முரளிதரன் வாஷிங்டன், கலிஃபோர்னியா கலைஞர்களுக்கு நேரடிப் பயிற்சி கொடுத்தார். அவரை வரவழைத்து, அனைவருக்கும் பயிற்சி கொடுத்து, பெரும் பொருட்செலவில் நாடகம் சிறப்புற அமையக் காரணமாயிருந்தவர், வள்ளல் அழகப்பரின் பேரன் திரு. வயிரவன் இராமநாதன். இந்த மாநாட்டின் தலைவரும் அவரே. உடைகளை வடிவமைத்த அனிதா அருண், சாலா சிதம்பரம், மீனா தேனப்பன், ஒளி-ஒலி நிர்வாகி சிவகாமி முருகப்பன், அலமேலு கண்ணன், ஒப்பனையாளர் ஜெயந்தி ஸ்ரீதர், மனிதத் தேனீக்களாய் அவருக்கு ஓடி உதவிய விழா ஒருங்கிணைப்பாளர் லதா நாராயணன், கலை விழா ஒருங்கிணைப்பாளர்கள் மாணிக்கம் உலகப்பன், அருண் வைத்தியநாதன் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

திருமதி. உமையாள் முத்து சிலப்பதிகாரம் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார். கண்ணகிக்குச் சிலை எடுக்க கனகனும் விசயனும் தலையில் கல் சுமந்து சேர மன்னனின் வீரர்கள் சூழ வரும் காட்சியுடன் நாடகம் துவங்கியது. கோவலனாகவே மாறிவிட்ட சுஜாதா மெய்யப்பன், நாட்டிய ஆசிரியை. பாஸ்டன் நகர்வாழ் அற்புதக் கலைஞர். ஒரு பெண், ஆணாகக் கம்பீர நடை நடந்து, மாதவியை வியந்து, கண்ணகியுடன் காதல் உறவாடி, பொருளிழந்த வணிகனாய் கவுந்தியுடன் சோகம் காட்டி, கள்வனாய்க் கருதப்பட்டுக் கொலையுண்டு என நவரச நாயகனாய் உணர்ச்சியூட்டினார். மாதவியின் கானல்வரிப் பாடலால் கோபமுற்று கோவலன் ஆடிய ஆவேச நடனமும், அதற்கான ஒளி, ஒலி அமைப்பும் நெஞ்சை உறைய வைத்தது.

கண்ணகியாய் வந்தவர் நியூஜெர்ஸி அஸ்வினி நாகப்பன். விரும்புவோருக்கு இலவசமாக நாட்டியம் கற்பிக்கும் அமைப்பு ஒன்றிலும் இவர் பணியாற்றி வருகிறார். அமைதி, அடக்கம், அன்பு, வாடல் என பாவங்களைப் பதிவு செய்தார் அஸ்வினி. வழக்குரைத்து மதுரையை எரித்த கண்ணகியின் சீற்ற நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. மாதவிப் பெண் மயிலாளாகத் தோகை விரித்தவர் அழகு சிதம்பரம். அரங்கேற்ற நடனம், இந்திர விழா நடனம், கானல்வரிப் பாடல், கோவலன் பரிவு, துறவு என அத்தனையிலும் முத்திரை பதித்தார் இவர். காவிரிப் பூம்பட்டினத்துக் கடை வீதிகள், விற்பனையாளர்கள், வாங்குவோர், அதில் மாலை விற்கும் மங்கை, மாலை விலை கேட்டு மயங்கிவிழும் ஆடவனாக ராம் எனக் காட்சி அமைப்புகளில் சிறுவர், இளைஞர், 85 வயது நாச்சம்மை ஆச்சி போன்றவர்கள் கலக்கினார்கள்.

சேர மன்னராகச் சோமு ராஜரத்தினம், பாண்டியனாக தேவி நல்லகுமார், கோப்பெருந்தேவியாக உமா அருள், புத்த பிட்சுவாக நாராயணன், தலைக்கோல் அரிவையை யானையைப் போல் அபிநயித்து மன்னனிடம் அளித்தும், ஆயர்பாடியில் மாதரியாயும் வந்து அசத்தினார் நிவேதா சுப்ரமணியம். இவர் கவியரசர் கண்ணதாசனின் கொள்ளுப் பேத்தி. நடனக் களம் பல கண்டவர். டெக்சஸில் வசிக்கிறார். மாதவியின் தாய் சித்ராபதி, மாதவியின் பணிப்பெண்ணாய் மாலையைச் சுழற்றியபடி வந்த சுபா சிங்காரம், கவுந்தியடிகளாய்க் களை கூட்டிய அழகு வயிரவன், தேவந்தியாய் வந்த வள்ளி மணிக்குமார், பொற்கொல்லனாய் வந்த டாக்டர். ரமேஷ், மற்றும் நடன மாதர்கள் எல்லோரும் நாடகத்துக்கு அணி சேர்த்தார்கள். கண்ணகி சிலைக்குச் சேர மன்னனுடன் மக்களும் மற்றோரும் வழிபாடு செய்யும் காட்சியுடன் நாட்டிய நாடகம் நிறைவு பெற்றது. அதில் சிலையாகவே மாறி நின்ற முத்து கார்த்திக், அதன் ஒப்பனை, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு. சிலப்பதிகாரம் இளம் தலைமுறையினரைச் சென்றடையக் காரணமான வயிரவன் இராமநாதன் பாராட்டுக்குரியவர்.

செய்திக் குறிப்பிலிருந்து உமையாள் முத்து,
மிக்சிகன்

© TamilOnline.com