ஃபெட்னாவுக்குப் போனேன்!
பால்டிமோர் சென்று பேசிக்கொண்டே காரில் டொரண்டோ செல்வதா அல்லது நியூ ஜெர்சியிலிருந்து போகலாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது, நண்பர் குமரப்பன் நியூ ஜெர்சியிலிருந்து பஸ்ஸில் போகலாமே என்றார். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பஸ்ஸில் புறப்பட்டோம். மாடி பஸ். மேலே இருந்து பார்க்க உண்மையிலேயே வித்தியாசமாக இருந்தது. வீட்டில் ஏதாவது ஆணி அடிக்க, ஏணியில் ஏறி நின்று கீழே பார்த்தால் நம் வீடே வித்தியாசமாகத் தெரியும். அதுபோல.

முதல் நாள் (ஜூலை 5): FeTNA என்றாலே இரு நாள்களும், எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று இருக்கும். சலிக்காமல் தமிழமுதைப் பருகலாம். இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. தனிநாயகம் அடிகள் பற்றிய உரைகளும், புத்தகக் கண்காட்சியும் ஒரு நல்ல தமிழ் அறிஞரை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு புத்தகமும் பொக்கிஷமாகத் தெரிந்தது.

இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டுக்கு கிறித்துவ மதம் பரப்ப வந்தவர். தமிழ் கற்று, அதன் சிறப்பை உணர்ந்து, தமிழுக்கே அடிமை ஆகிறார். 'தேம்பாவணி' அருளுகிறார். தமிழரல்லாத ஒருவரை, தமிழ் இந்த அளவுக்கு ஆட்கொண்டதை அறிந்து மனம் உருகிப் போனேன்.

கவியரங்கம் நன்றாக இருந்தது. நியூ ஜெர்சி குழந்தைகள், மழலைத் தமிழில் 'சீதா கல்யாணம்' வில்லுப்பாட்டில் தந்தது பாராட்டத்தக்கது. சாருலதாமணி அவர்கள் ராகத்தையும் தமிழ்த் திரைப்படப் பாடல்களையும் இணைத்துத் தந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பட்டுப்புடவை அணிந்த இவரே அடுத்த நாள், மெல்லிசைக் கச்சேரியில் பேண்ட், கூலிங் கண்ணாடி அணிந்து பாடியது மிக வித்தியாசம்!

'சிவகாமியின் சபதம்' நடன நாடகம் பிரமாண்டமான தயாரிப்பு. கதை எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக ரசிக்க முடிந்திருக்கும். ஃபெட்னாவுக்கு திரை உலகக் கலைஞர்கள் வருவது வழக்கம். நடிகர் அபி (அபி சரவணன்) பேசும்போது குறிப்பிட்டார், "சென்னையில் படப்பிடிப்பின்போது ஏதும் கண்டு கொள்ளாமல் இருந்த பேரா. கு.ஞானசம்பந்தம், நான் ஃபெட்னா செல்கிறேன் என்று அறிந்தவுடன், வாஞ்சையுடன் வாழ்த்தியதை நினைவு கூர்ந்தார்".

மதுரைவீரன் தெருக்கூத்தை, கனெக்டிகட் ஃபெட்னாவில் கண்டு களித்த நான், இலங்கைத் தமிழ்க் கூத்து 'வேந்தனின் சீற்றம்' காண ஆவலாக இருந்தேன். நேரம் இல்லாமையால் அது பாதியில் நிறுத்தப்பட்டது சிறு வருத்தமே. இலக்கிய வினாடி-வினா என்னைப் பள்ளிக்காலத்திற்கு இழுத்துச் சென்றது. ஆகுபெயர், அடுக்குத் தொடர், வஞ்சப்புகழ்ச்சி - எல்லாம் கனவில் கேட்டதுபோல் இருந்தது. அக்காலத்தில், இலக்கணத்தில் தெரியாத கேள்விகளுக்கு 'ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்' என்று எழுதி வந்தது நினைவுக்கு வருகிறது

ஹீலர் பாஸ்கர், விசா சிக்கல் காரணமாக வரவில்லை என்று அறிந்து சிறு ஏமாற்றம். கம்யூனிஸ்ட் மகேந்திரனின் பேச்சு நன்றாக இருந்தது. காலையில் அவரைப் பார்த்தபோது சில நிமிடங்கள் அமெரிக்கப் பொருளாதாரம் பற்றியும், தற்கால சிந்தனைகள் பற்றியும் பேசினேன். அமெரிக்காபற்றிப் பல கேள்விகள் கேட்டார். முடிந்த அளவு பதில் கூறினேன். சுமார் 20 வருடம் இங்கு வாழ்ந்தபின், அமெரிக்காபற்றி எப்படிப் பதில் கூறினாலும் முழுமையாக விளக்கிய நிறைவு வருவதில்லை. ஒருவேளை சுருக்கமாக இப்படிக் கூறலாம்: வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார், அமெரிக்காவில் வாழ்ந்து பார்!

இரவு. மெல்லிசைக் கச்சேரி மிகவும் அருமை. இசையுடன் நடன விருந்து சேர்ந்து மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. இந்த ஃபெட்னாவில் குறிப்பிட வேண்டிய வேறொரு முக்கியமான நபர் திருமதி. பிரெண்டா பெக். 'பொன்னி வளநாட்டுக் கதைகள்' என்று அவர் தமிழ்நாட்டுக்கு நேரில் சென்று ஆராய்ந்து சேகரித்து வந்து புத்தக வடிவில் தந்துள்ள அந்த இலக்கியம் குடத்திலிட்ட விளக்காகவே உள்ளது. இது எந்தப் புராண இதிகாசத்துக்கும் குறைந்ததல்ல என்கிறார் பிரெண்டா.

இரா. பொன்முடி

© TamilOnline.com