பூரணி என் மருமகள்
ஒரு சனிக்கிழமை இரவு வழமைபோல மகன் அருணோடு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டோம். அவன் கடந்த மூன்று மாதங்களாக யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியத் தொண்டனாகப் பணிபுரிகின்றான். ஏறக்குறைய 17 வருடங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவிற்கு நாங்கள் வந்து குடியேறியபோது அவனுக்கு வயது 12. இங்கு வந்த புதிதில் ஏற்பட்ட பள்ளிக்கூடம் சம்பந்தமான சிறுசிறு பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து அவன் ஒரு அமெரிக்கப் பிரஜையாக முற்றாகவே மாறிவிட்டான். இங்கு BA மற்றும் மருத்துவப் பட்டமும் பயிற்சியும் பெற்று, ஒரு மனோதத்துவ வைத்தியராகப் பணியேற்பதற்கான காலமும் வந்துவிட்டது.

அப்போதுதான் இங்கு வேலை தொடங்குவதற்கு முன்னர் சிலகாலம் தான் பிறந்த இடத்தில் வேலை செய்யவேண்டும் என்ற ஆவலை அவன் தெரிவித்தான். பிறந்த மண்ணின்மேல் அவனுக்கு இருந்த ஆழமான உணர்வுகளை அப்போது நான் புரிந்துகொண்டேன். ஒரு தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மூன்று மாதங்கள் போரினால் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுடன் பணிபுரிவதற்காக அவன் யாழ்ப்பாணம் புறப்பட்டான். இப்போது இங்கு திரும்பிவரும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஸ்கைப்பில் அருணின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது. "எப்படி இருக்கிறாய் அருண்" என்று கேட்டார் எனது மனைவி.

"நல்லா இருக்கிறேன். வேலை நல்லாப் போகுது. இன்னும் சில வாரங்களில் நான் பார்க்கும் நோயாளிகளை விட்டு வரப்போவதை நினைக்கும்போதுதான் வருத்தமாய் இருக்கு. அவர்களுக்கு இன்னும் நிறைய உதவி தேவை" என்றான்.

"இங்கே வந்து புது வேலை தொடங்கிறதைப் பற்றி ஆவலாய் இருக்கிறாயா" என்று கேட்டேன்.

"ஓ... கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் இருக்கிறேன்" என்றான்.

"என்ன, நல்லா மெலிஞ்சு போனாய். சரியாச் சாப்பிடறதில்லையா" என்று ஒரு தாய்க்கே உரிய கரிசனையோடு கேட்டார் என் மனைவி. "நான் நல்லாத்தான் இருக்கிறேன். உங்களுக்கு நல்ல செய்தியொண்டு சொல்லவேணும்" என்றான். என்ன என்று ஆவலோடு கேட்டோம்.

"இங்கே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கூட்டிக்கொண்டு வரப்போறேன்" என்றான்.

எங்கள் இருவருக்கும் ஆச்சரியம், இல்லை, அதிர்ச்சி. இங்கு படிக்கும் காலத்தில் அவன் பெண் நண்பர்களில் பெரும்பாலோர் வெள்ளைக்காரரும் சீனா, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்தான். எப்போதாவது ஏதாவது நெருக்கமான உறவு உண்டா என்று கேட்டால் "இல்லை, அவர்கள் வெறும் நண்பர்கள்தான்" என்பான். இடையிடையே அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ப் பெற்றோர் தமது மகள்மாருக்காக எங்களைத் தொடர்பு கொண்டபோது, நன்றாகப் பழகிப் பார்க்காமல் என்னால் எதுவும் சொல்லமுடியாது என்று தட்டிக்கழித்து விடுவான். இப்போது இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுகிறான்.

"யார் அந்தப் பெண்?" என்று கேட்டோம்.

"உங்களுக்கு நினைவிருக்கும். அக்கவுண்டன்ட் கந்தசாமியின் மகள் பூரணி. என்னோடு சின்னவயசிலை படிச்சவள்" என்றான்.

இப்போது எங்கள் அதிர்ச்சி இன்னும் அதிகமாயிற்று. கந்தசாமியின் மகன் குமரன் இளம் வயதிலேயே போராளிகளோடு சேர்ந்துவிட்டான். அங்கு அதிகத் துணிச்சலோடு போராடி ஒரு உயர்பதவிக்கு வந்திருந்தான். கந்தசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் படையினரின் கரைச்சல்களைத் தவிர்ப்பதற்காகவும், மகனை இடையிடையேயாவது பார்க்க முடியுமென்ற நம்பிக்கையோடும் குடும்பத்தோடு முல்லைத்தீவிற்கு இடம்பெயர்ந்தார். ஆனால் அங்கு சென்ற சிறிது காலத்தில் குமரன் ஒரு விமானக் குண்டுவீச்சில் இறந்து போனான். கந்தசாமியும் நாளடைவில் நலிவுற்று முல்லைத்தீவிலேயே காலமானார். பூரணியும் தாயும் இறுதிப் போர்வரை முல்லைத்தீவிலே இருந்துவிட்டு, பின்னர் சிறிது காலத்தை அகதிகள் முகாமில் கழித்து இப்போது ஊருக்குத் திரும்பியிருந்தனர். இறுதிப் போரில் ஏற்பட்ட பயங்கர அனுபவங்களால் பூரணிக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டிருந்தோம்.

"அவளை நீ எங்கே சந்தித்தாய்" மனைவி சற்றுக் கோபத்தோடு கேட்டார்.

"அவள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள்"

"அவளுக்கு மனநோய் என்று தெரிந்தும் நீ இந்த முடிவை எடுத்தது சரியாகப் படவில்லை" என்றேன்.

"கடும் அதிர்ச்சியினால் வந்த நோய் இது. இப்போது முற்றாகக் குணமாகிவிட்டது. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் இனிப் பிரச்சினைகள் வருவதற்கு சந்தர்ப்பம் இல்லை"

"அனுதாபத்தில் செய்யும் திருமணம் நன்றாக அமையாது" என்றேன்.

"அனுதாபத்தில் இதைச் செய்யவில்லை. நான் விரும்பித்தான் இதைச் செய்கிறேன். அவள் ஒரு அழகான பெண். நல்ல புத்திசாலி. அவளை நான் காதலிக்கிறேன்" என்று அழுத்தமாகச் சொன்னான்.

"ஊரிலிருக்கும் பெரியப்பாவிற்குச் சொன்னாயா?" எனது ஒன்றுவிட்ட அண்ணன்தான் அங்கு அவனுக்குத் தெரிந்த உறவினர்.

"பூரணியின் அம்மாவிடம் சம்மதம் கேட்க பெரியப்பாவைக் கூட்டிப் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் இதைத் தடுக்க அவர் எவ்வளவோ முயற்சித்தார். அதனால் நான் தனியாகப் போய்தான் பூரணியின் அம்மாவோடு கதைத்தேன். முதலில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பூரணியும் நானும் கஷ்டப்பட்டு அவரைச் சம்மதிக்க வைத்தோம். ஆஸ்பத்திரி நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்யப்போகிறோம்" என்று உறுதியோடு சொன்னான். அவன் முடிவெடுத்தால் அதை மாற்றமுடியாது என்று எங்களுக்குத் தெரியும்.

ஏமாற்றத்தை மறைத்தபடியே "சரி. உனது சந்தோசந்தான் எங்களுக்கு முக்கியம். நீ உனது விருப்பப்படி செய். திகதி முடிவு செய்ததும் உடனே எங்களுக்குச் சொல்லு. நாங்களும் அங்கு வருகிறோம். திருமணத்தைச் சின்னதாகச் செய்வோம். பிறகு இங்கு வந்ததும் நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரு ரிசப்ஷன் வைப்போம்" என்றேன்.

அருணோடு பேசி முடித்த சிறிது நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது எனது ஒன்றுவிட்ட சகோதரர்தான்.

"அருண் உங்களுக்குச் சொன்னானா?" என்றார்.

"ஓ... சொன்னான்" என்றேன் தயக்கத்தோடு.

"என்ன வளர்ப்பு வளரத்திருக்கிறீங்கள். நாங்கள் சொல்கிற ஒன்றையும் கேட்கிறான் இல்லை. அந்தச் சுகமில்லாத பெண்ணைக் கட்டப்போறானாம்" என்றார்.

எனக்கு இப்போது சற்றுக் கோபம் வந்துவிட்டது. "மனநோயும் உடல் நோயைப் போலத்தான். இப்போது அதைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும்" என்றேன்.

"அப்படிச் சொல்ல முடியாது. இங்கு நிறையப் பேர் நோய் மாறாமல் இருக்கிறார்கள்" என்றார்.

"அவன் முடிவெடுத்திட்டான். நாங்களும் சம்மதம் கொடுத்திட்டோம்" என்றேன்.

அண்ணருக்கு கோபம் வந்திருக்கவேண்டும். "அந்தப் பெண்ணை ஆர்மிக்காரர் பலாத்காரப் படுத்தினதாக இங்கு சொல்கிறார்கள்" என்றார்.

"யாரும் சும்மா சொல்லிறதை வைத்து முடிவெடுக்கேலாது" என்று சொல்லி கோபத்தோடு ஃபோனை வைத்தேன்.

அவர் சொன்னது மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான கொடூரங்கள் அங்கு நடந்ததாகச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. பூரணிக்கும் அப்படி ஏதாவது நடந்திருக்குமா?

என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பித் தவித்தது. அன்றிரவு அரைகுறைத் தூக்கத்திலும் அதே நினைவுதான்.

ஆனால் மறுநாள் மனதில் ஒரு தெளிவு. அண்ணர் சொன்னதுபோல ஏதாவது நடந்திருந்தாலும், அது அந்தப் பெண்ணின் தவறு இல்லையே! இது அனுதாபத்தோடு அணுக வேண்டிய விஷயம் என்பதை உணர்ந்தேன்.

பூரணிக்கு என்ன நடந்தது என்பது பற்றி அருணுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். அவனே முடிவெடுத்த பிறகு நாம் ஏன் இதுபற்றி யோசிக்க வேண்டும்? பூரணியை மருமகளாக ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன்.

இரத்தினம் சூரியகுமாரன்

© TamilOnline.com