தங்க மீனும் காகமும்
ஒரு ஏரியில் பல மீன்கள் வசித்தன. அவற்றில் அழகான தங்க மீனும் ஒன்று. சூரியன் உதித்ததும் அது துள்ளிக் குதித்து நீரினுள் தாவிப் பாயும். அங்கும் இங்குமாய் நீந்தும். தகதகவென ஜொலிக்கும் அதைக் கண்டு மற்ற மீன்கள் மகிழ்ந்தன. ஏரியின் கரையில் இருந்த மரத்தில் கூடு கட்டி வாழ்ந்த காகமும் அணிலும்கூட அதைப் பார்ந்து மகிழ்வதுண்டு.

தங்க மீனின் நிறமும் பளபளப்பும் காக்கையைக் கவர்ந்தது. எனவே அது அந்த மீனுடன் நட்புக்கொள்ள விரும்பியது. மேலும் அதைக் கொக்கு போன்ற பறவைகள் தின்றுவிடாமல் அவ்வப்போது கத்தி, துரத்தி விரட்டிவிட்டு நட்பு பாராட்டியது. ஆனால் தங்க மீனோ காகத்தின் நட்பை விரும்பவில்லை. "நான் பளபளவென்று எவ்வளவு அழகாக இருக்கிறேன். போயும் போயும் இந்தக் கறுப்பான, அழுக்கும் அவலட்சணமும் கொண்ட காக்கையுடனா நட்புக் கொள்வது! அது மிகவும் கேவலம்" என்று நினைத்தது. அதனால் காக்கை எவ்வளவோ அன்புடன் அழைத்தும் மீன் அதற்குச் செவி சாய்க்கவில்லை.

ஒருநாள் காலை காகம் இரைதேடி வெளியே சென்றிருந்தது. அப்போது சில சிறுவர்கள் அந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தனர். அவர்களிடம் தூண்டிலும், சிறிய வலையும் இருந்தது. அவர்கள் மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தனர். வழக்கம் போலச் சூரியனைக் கண்டதும் தங்க மீனும் தண்ணீரில் துள்ளிக் குதித்தது.

அதைக் கண்ட சிறுவர்கள், "ஆஹா, இந்த மீன் மிகவும் அழகாக இருக்கிறதே" என்று கூறி, அதை வலைவீசிப் பிடித்தனர். பின் அதனை தன் நண்பர்களிடம் காட்ட எண்ணி, ஒரு நீர் நிரம்பிய கண்ணாடிக் குடுவைக்குள் போட்டு எடுத்துச் சென்றனர். திடீரென மாட்டிக் கொண்டதால் செய்வதறியாமல் திகைத்த தங்க மீன் அந்தக் கூண்டுக்குளேயே சுற்றிச் சுற்றி வந்து தவித்தது.

சிறிது நேரத்துக்குப் பின் இரைதேடச் சென்ற காக்கை ஏரிக்கு வந்தது. தங்க மீனைக் காணாமல் சுற்றிச் சுற்றி வந்தது. மரத்தில் இருந்த அணில், காக்கையிடம் விஷயத்தைச் சொன்னது. சிறுவர்கள் தங்க மீனை எடுத்துச் சென்று விட்டனர் என்பதை அறிந்ததும் காக்கை வருந்தியது. எப்படியாவது காப்பாற்ற முயற்சிக்க எண்ணிச் சிறுவர்கள் சென்ற வழியில் சென்றது.

வழியில் சூரிய ஒளியில் தகதகத்த கண்ணாடிக் குடுவையை ஆட்டியவாறே சிறுவர்கள் செல்வதைப் பார்த்தது காகம். உடனே அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. கண்ணாடிக் குடுவையை நோக்கிப் பாய்ந்தது. அது கொத்திவிடுமோ என்று பயந்த சிறுவர்களில் ஒருவன் குடுவையைக் கீழே போட்டான்.

மீன் கீழே விழுந்தது. தண்ணீர் இல்லாததால் துடித்தது. உடனே பாய்ந்த காகம் தன் அலகால் மீனைக் கவ்வி வேகமாக ஏரிக்குச் சென்று அதனுள் போட்டது. மீன் உயிர் பிழைத்தது. மட்டுமல்ல, தான் இதுவரை காகத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கியதற்காக மிகவும் மனம் வருந்தியது. காகத்திடம் மன்னிப்பும் கேட்டது. அன்று முதல் தங்கமீன் காக்கையை நெருங்கிய நண்பனாகக் கருதியது என்பது நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரிய வேண்டும்!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com