பேராசிரியர் நினைவுகள்: சாம்பாரின் வரைத்து
'நான் இன்னாருக்கு, இப்படிப்பட்ட சமயத்தில் இவ்வளவு பெரிய உதவி ஒண்ணை, ஒண்ணை என்ன, ஓராயிரத்தை, செஞ்சிருக்கேன். கொஞ்சமானும் நெனச்சுப் பாக்கறானா பாரு, நன்றி கெட்ட ஜென்மம்' என்பது போன்ற புலம்பல்களை நாம் எத்தனை நூறுமுறை கேட்டிருப்போமோ; நாமேகூடச் சொல்லியிருப்போமோ! ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்யும் போது, அந்த உதவியின் தன்மையை அல்லது அளவை நிர்ணயிப்பது யார்? உதவி செய்பவரா அல்லது செய்யப்பட்டவரா? 'உதவி எப்படிப்பட்டது, அதன் அளவு பெரியதா, சிறியதா என்பதையெல்லாம் அளவிடுவது, உதவி செய்தவனின் வேலை அன்று' என்று வள்ளுவர் தீர்மானமாகச் சொல்கிறார். 'உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'. உதவி பெரியதா சிறியதா என்ற கேள்விக்கு விடையைத் தீர்மானிப்பது உதவி செய்தவனின் வேலையன்று; அது செய்யப்பட்டவனுக்குச் சொந்தமானது. இன்னும் சொல்லப் போனால், செய்யப்பட்டவனுடைய பண்பு எத்தன்மைத்தோ அத்தன்மைத்து' என்று, தீர்மானத்தை, உதவியைப் பெற்றவனிடமும், அவனிலும் அதிகமாக அவனுடைய பண்பினிடத்திலும் ஒப்படைத்தார் வள்ளுவர். இதைப் புரிந்துகொள்ளச் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. 'உதவி செய்யப்பட்டவன்தான்' உதவியின் அளவை நிர்ணயிக்கிறான் என்பதையாவது புரிந்துகொண்டுவிடலாம். ஆனால், அதென்ன அவனுடைய பண்பின் அளவைச் சார்ந்தே உதவியின் அளவும் தீர்மானமாகிறது என்றொரு கூடுதல் நடைமுறை?

இதை விளக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் ஆசிரியர் (பேரா. நாகநந்தி) தமது வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை விடாமல் திரும்பத் திரும்பச் சொல்வார். பலமுறை நானே கேட்டிருக்கிறேன். இந்தச் சம்பவத்தைச் சொல்வதற்கு முன்னால், ஆசிரியர் இது நிகழ்ந்த சமயத்தில் இருந்த வாழ்க்கைச் சூழலையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

அவருக்குத் தமிழில் இளங்கலைப் படிக்கும் விருப்பம் இருந்தது. அவருடைய தந்தைக்கு இதில் சம்மதமில்லை. படிப்புக்குரிய உத்தியோகம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை இருந்ததால் அவருக்குத் தன் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றியான கவலை வந்துவிட்டது. அது 1950களின் காலகட்டம். 'தமிழ் படித்தவன் உருப்பட மாட்டான்; அவனுக்குச் சரியான வேலை கிடைக்காது' என்ற கருத்து அந்தக் காலகட்டத்திலேயே வேர்பிடித்துச் செழித்தோங்கி இருந்திருக்கிறது. ஆனால், ஆசிரியரோ தமிழை முதன்மைப் பாடமாகப் படிப்பதில் பிடிவாதமாக இருந்தார். சலித்துப் போன அவருடைய தந்தையார் (ஒருவேளை, பிள்ளையை மிரட்டிப் பணிய வைப்பதற்காகவோ என்னவோ) 'அப்படியானா, நீயே படிச்சுக்கோ. என்னால ஒன் படிப்புக்கு ஒரு தம்பிடி செலவழிக்க முடியாது' என்ற பாணத்தைப் பிரயோகித்தார். எடுத்த முடிவில் ஒருபோதும் தளர்ச்சி அடையாத சுபாவம் கொண்ட ஆசிரியருக்கோ இது தன்மானப் பிரச்சனை.

தஞ்சையிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்தார். செலவுக்குப் பணம் வேண்டுமே! உழைத்துச் சம்பாதித்துத் தானே பணம் கட்டிப் படிப்பது, தன்னுடைய இதர செலவுகளையும் தன் வருமானத்திலேயே சமாளிப்பது என்று தீர்மானித்தார். 1950களில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் அளவுக்கா வசதிகள் இருந்தன! அப்போது வேலை வாய்ப்புகளே மிகவும் குறைவு. அதிலும், வேலை செய்துகொண்டே கல்லூரிக்கும் போவதற்கு அவகாசம் கிடைக்கும் அளவுக்கான வேலைகளோ அறவே இல்லை என்றுவிடலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சென்னை, தங்கசாலைத் தெருவிலிருந்த ஓர் மெஸ்ஸில் பரிமாறுபவராகப் (சர்வராகப்) பணியாற்ற முடிவெடுத்தார் ஆசிரியர். பொதுவாக, மதிய உணவுக்குத்தான் அதிகக் கூட்டம் சேரும். மற்ற நேரங்களில்—காலைச் சிற்றுண்டி, இரவுச் சாப்பாடு தவிர்த்து—கூட்டமும் இருக்காது; வேலையும் இருக்காது. எனவே, மதிய நேரத்தில் மட்டும் அங்கே இருந்து பரிமாறிவிட்டு, தங்கசாலைத் தெருவிலிருந்து மாநிலக் கல்லூரிக்கு ஒரு வேகநடை விட்டால், வேலையையும் பார்த்துக் கொள்ளலாம்; படிப்பையும் தவறவிட வேண்டியதில்லை. இது அவருக்கு வசதியாக அமைந்திருந்தது.

அங்கே பணியாற்றிய சமயத்தில் நடந்ததுதான் இப்போது இந்தக் குறளுக்கு விளக்கமாக அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த சம்பவம். அந்தக் காலச் சென்னையில் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த இடங்கள் என்றால், திருவல்லிக்கேணி, மயிலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த தங்கசாலைத் தெரு தொடங்கி, பாரிமுனை வரையில் மட்டும்தான். இன்னும் ஓரிரு இடங்கள் வளர்ச்சியடைந்திருக்கலாம். இந்தக் குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருந்த ஒரு புகழ்பெற்ற, பெரிய நிறுவனம் வேலைக்கு ஆளெடுத்துக் கொண்டிருந்தது. அதற்காகப் பலரை நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தது. அந்த நாளில், இப்படிப்பட்ட இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக, வெளியூரிலிருந்து வந்து, ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, நேர்முகத் தேர்வை முடித்துவிட்டுத் திரும்புவது வழக்கமாக இருந்தது. ஓரிரு மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பி, உடனே திரும்பிவிடும் என் காலம் போன்றதன்று. இப்போதெல்லாம் ஆன்லைன் தேர்வுகள் வந்துவிட்டன. வீட்டிலிருந்தபடியே ஸ்கைப் செய்துவிட முடிகிறது!

கதைக்குத் திரும்புவோம். அந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வந்திருந்தார் ஓர் இளைஞர். வெளியூர்க்காரர். ஓரிரு நாட்களுக்கென ஓரிரு மாற்றுடைகளோடு வந்திருந்தார். நேர்முகத் தேர்வுக்காக, அந்த நாளில் பெரிய அளவில் மதிப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய வெள்ளை வெளேரென்ற சட்டை ஒன்றே ஒன்றை எடுத்து வந்திருந்தார். வந்தவர் எங்கேயோ தங்கினார். அது இப்போது முக்கியமில்லை. தேர்வுக்காக, தான் எடுத்து வந்திருந்த வெள்ளைச் சட்டையை அணிந்துகொண்டு அந்த அலுவலகத்துக்குச் சென்றார். காலை ஒன்பது-பத்து மணிக்கு அங்கே சென்றால், நேர்முகத் தேர்வுகளுக்கே உரிய எழுதப்படாத அந்தநாள் விதிமுறைகளின்படி, தேர்வுக்கு வந்தவர் காத்திருந்துதான் ஆகவேண்டும். தேவை இருக்கிறதோ இல்லையோ; தேர்வுக்குப் பலர் வந்திருக்கிறார்களோ அல்லது சிலர்தான் இருக்கிறார்களோ, வேலை கேட்டு விண்ணப்பித்து வந்திருப்பவனுக்குக் கழுதைப் பொறுமை இருந்தே ஆகவேண்டும். இப்படிப்பட்ட பொறுமை இருக்கிறதா என்று பார்ப்பதற்கேகூட, வேண்டுமென்றே காலம் தாழ்த்துவார்கள்.

காலையில் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் சென்றவர், மதியம் வரை காத்திருந்தார். இவர் அழைக்கப்படவே இல்லை. பொறுமை காப்பதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன! மதிய உணவு இடைவேளை வந்தது. 'எல்லாரும் போயி எங்கியாவது சாப்பிட்டுட்டு, சரியான நேரத்துக்குத் திரும்பி வாங்க' என்று அறிவித்தார்கள். (மதிய உணவை அலுலகமே ஏற்பாடு செய்யும் முறை எனக்குத் தெரிந்து 80களில்தான் தொடங்கியது.) நேர்முகத் தேர்வுக்கு வந்தவன், சொன்னபடியெல்லாம் ஆடியாக வேண்டும். அவன் தலையெழுத்து அது. அப்படி மதிய உணவுக்காக வெளியே வந்தவர்களில், நாம் குறிப்பிடும் அந்த இளைஞரும் ஒருவர். இது நடந்தது 1950களில் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்வோம். அந்த இளைஞர் வந்திருந்த அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருந்த மெஸ்ஸில்தான் என் ஆசிரியர் சர்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மெஸ் சாப்பாடு என்றால் ஏதோ மேசை நாற்காலி போட்டு அமரச் செய்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! தரையில் வரிசை வரிசையாக விரிப்புகளை விரித்திருப்பார்கள். அதில் சம்மணமிட்டு அமர்ந்து உண்பார்கள். அப்படித்தான் இந்த இளைஞரும் ஓர் இலையில் அமர்ந்து கொண்டார். நிறைய பேருக்குப் பரிமாற வேண்டும் என்பதால், சிலர் அவசர அவசரமாக ஓடியபடியே பரிமாறுவார்கள். அரை ஓட்டத்தில் இருந்தபடியே, கையில் வைத்துள்ள பண்டத்தை இலையில் சரித்தபடியே வேகவேகமாக அடுத்த நபருக்கு நகர்ந்துவிடுவார்கள். அப்படி ஒருவர் பரிமாறிக் கொண்டிருந்தார் (இவர், ஆசிரியரல்லர்; வேறொருவர்) அவர் பரிமாறியதோ, சாம்பாரை. ஒரு கையில் தூக்குச் சட்டி நிறைய சாம்பார். இன்னொரு கையில் அதை மொண்டு இலையில் விடுவதற்காகச் சிறிய குவளை. இப்படி ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு இலையாக சாம்பாரைச் சரித்துக் கொண்டே வந்தவர், நம் இளைஞரிடம் வரும்போது சற்றே அவசரப்பட்டுவிட்டார். அவர் வீசிய வீச்சில், சாம்பார் இலையில் விழுவதற்குப் பதிலாக, இளைஞரின் வெள்ளைச் சட்டைமேல் விழுந்தது. வெள்ளைச் சட்டையின் மார்புப் பகுதி முழுக்க சாம்பார் அபிஷேகம்!

அதிர்ந்து போனார் அந்த இளைஞர். இன்னும் அரைமணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட்டு, நேர்முகத் தேர்வுக்குத் திரும்பியாக வேண்டும். இருப்பதோ, போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சட்டை மட்டுமே. மாற்றுச் சட்டை வேண்டுமானால்—இப்போது இருப்பதைப் போன்ற ஆயத்த அங்காடிகள் இல்லாத காலம் அது—அவர் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பிப் போய், நல்லதாக ஒரு சட்டையை அணிந்து கொண்டு, அங்கிருந்து திரும்பலாமென்றால், இருப்பதோ அரைமணி நேர அவகாசம். சட்டென்று ஓடிப்போய்த் திரும்புவதற்கு ஆட்டோவா, டாக்ஸியா! ட்ராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருந்த காலம் அது.

இந்தத் தேர்வுக்காக அந்த இளைஞர் செய்திருந்த அத்தனை முன்தயாரிப்புகளும் இமைப்போதில் வீணாகிவிட்டன. சாம்பார் திருக்கோலத்தோடு அவர் எப்படி நேர்முகத் தேர்வை எதிர்கொள்வார்! நேர்முகத் தேர்வுகளில், ஆடைகள் திருத்தமாக இருக்க வேண்டியது கட்டாயத் தேவையல்லவா! எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் மனமொடிந்து போனார். எத்தனையோ கனவுகளுடன் வந்திருந்த அவருக்கு, இதோ இரண்டு நிமிடங்களுக்கு முன்வரையில்கூட நம்பிக்கைகளுடன் காத்திருந்த அவருக்கு, இப்போதோ, தேர்விலேயே கலந்து கொள்ள முடியாத நிலை! பிறகுதானே வேலை! ஒரு வாய்ப்பை இழந்தால், அடுத்த வாய்ப்பை இன்டர்நெட்டில் தேடிக்கொள்ள முடியாத காலமல்லவா அது! அடுத்த வாய்ப்பு, அதுவும் இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ! உடைந்து போய் விம்மி அழத் தொடங்கிவிட்டார் அவர்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத திருப்பம் நடந்தது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com