அன்புள்ள சிநேகிதியே,
ஜூலை மாதத் தென்றலில் ஒரு பெண்மணி, தான் 26 வருடங்களாக எப்படி ஒற்றுமையில்லாமல் குடும்பம் நடத்திவர வேண்டியிருக்கிறது என்ற நிலைமையை எழுதியிருந்தார். வருத்தமாகத்தான் இருந்தது. ஏனென்றால் எனக்கும் அதேபோலக் கஷ்டம். நானும் என் வீட்டுக்காரரும் சண்டை போடாத நாளே இல்லை. எப்படியோ 42 வருடங்கள் கழித்து விட்டோம். வெளி உலகத்திற்கு நாங்கள் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வருகிறோம் என்பதுதான் புரிகிறது. பையன்கள் இருவரும் நன்றாகப் படித்து அவர்களே தங்களுக்கு மனைவிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள். ஒருத்தர் வங்காளி. ஒருத்தர் இந்த ஊர்ப் பெண். எனக்கு இதில் பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. அவர்கள் அப்பா அவர்களை ஆசாரம், கலாசாரம் என்று கட்டுப்படுத்தப் படுத்த அவர்கள் விலகி விலகிப் போய்விட்டார்கள். இது எதிர்பார்த்ததுதான். நான் கொடுத்த இடம்தான் அவர்கள் இப்படித் தறிகெட்டு அலைந்தார்கள் என்று என்னிடம் இவர் சண்டை. அப்பப்பா.... கின்னஸ் ரெகார்டில் இடம்பெறும் அளவுக்குச் சண்டை போட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் "போதும் இந்த வாழ்க்கை. இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடலாம்" என்று நினைப்பேன். ஆனால் அங்கே இருப்பவர்கள்தான் இங்கே வந்து விட்டார்களே! அப்பா, அம்மா போய்விட்டார்கள்.
இங்கு வந்த புதிதில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்புறம் இவருக்கு நல்ல பணி வாய்ப்பு வந்ததால் வேறு மாநிலத்துக்கு மாறிவிட்டோம். குழந்தைகள் வளர்ப்பு, மாமனார், மாமியார் அடிக்கடி வருகை - அவர்களுக்கு ஆசாரமான சமையல் என்று குடும்பத்திலேயே மூழ்கிப் போய்விட்டேன். எங்களுக்குள் எந்த டேஸ்ட்டும் ஒத்துப் போனதில்லை. ஒன்பது வித்தியாசங்கள் சொல்லுகிறேன். நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள், என் வாழ்க்கை எப்படி இருக்குமென்று!
1. நான் தாராளமாகப் பணம் செய்ய விரும்புபவள். அவர் ஒரு டாலர் பொருளுக்குச் செலவு செய்ய யோசிக்கும் நேரத்தில் அந்தப் பொருளின் விலை பலமடங்கு கூடிப்போயிருக்கும்.
2. எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும் - இந்த பாட்டு, டான்ஸ் விஷயத்தில் அவர் ஒரு ஔரங்கசீப்.
3. எனக்கு ட்ராவல் பிடிக்கும். அவர் ஒரு பிள்ளையார்.
4. நான் பலவகையான பல தேச உணவுகளை ருசிக்க ஆசைப்படுவேன். அவருக்கு வீட்டுச் சமையல், நாட்டுக் காய்கறிதான் பிடிக்கும். வாழைக்காயும், அவரைக்காயும் பண்ணிப்போட்டே எனக்கு போரடிக்கிறது.
5. எனக்கு ஆடை விஷயத்தில் எல்லாம் மேட்ச் ஆக இருக்க வேண்டும். அவருடைய Dress sense கேட்காதீர்கள்.
6. எனக்குக் குளிர் தேசம் பிடிக்கும். அவருக்குப் பிடித்தது மெட்ராஸ் வெய்யில்.
7. நிறையச் சம்பாதிக்கிறாரே என்று பார்த்தால் ஒரு பெரிய வீடு, சொகுசுக் கார் என்று ஒன்றும் கிடையாது.
8. எனக்கு ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு உம்மணா மூஞ்சி.
9. எனக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும். அவருக்கு உஹூம்...
எங்கள் வீட்டில் எந்த நாய் வளர்ப்பும் கிடையாது. சில சமயம் மற்றவர்கள் ரொமான்டிக் ஆக, ஜாலியாக வெளியே சென்று வருவதைப் பார்த்தால் என் மனதில் வெறுப்பு வரத்தான் செய்கிறது. எதிலுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் வாழ்க்கை ஓடிவிட்டது. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். என்னைப்போல் நிறையப் பேர் இது மாதிரி உங்களுக்கு எழுதியிருப்பார்கள். அவர்களில் நானும் ஒருத்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே,
சமீபத்தில் என்னுடைய தோழி ஒருத்தி பேசிக் கொண்டிருந்தாள். "நம்ம ஊரில் குலம், கோத்திரம், படிப்பு பார்க்கிறார்கள். பிள்ளை சிகரெட் பிடிக்காதவன், பாருக்குப் போகாதவன், தினமும் சந்தியாவந்தனம் அமெரிக்காவிலும் செய்பவன், அருமையான மாப்பிள்ளை. தன் பெண் அதிர்ஷ்டசாலி" என்று நினைத்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்தில், ஒரு பெண்ணும், பிள்ளையும் வளர்ந்த சூழ்நிலை, வாழ்க்கைத் தரம், இவற்றைக் கூர்ந்து கவனித்து, அன்றாடப் பிரச்சனைகள், இருவருக்கும் ஒத்துப் போகுமா (compatibility issues) என்று படித்த அப்பா, அம்மாக்கள் கூட யோசிப்பதில்லை. பாதிப்பேருக்கு வாழ்க்கை அட்ஜஸ்ட்மென்டிலேயே போய்விடுகிறது என்றால், உண்மைதான். இருந்தாலும், குடும்பப் பொறுப்புக்கு முக்கியம் கொடுத்து, சண்டை போட்டுக்கொண்டே ஒரே பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றால், எங்கேயோ இருவரும் விட்டுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். சண்டை போடுவதிலேயே மனது சென்றுவிட்டதால் உங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அடையாள்ம் கண்டுகொள்ள முடியவில்லை என்பது எனது கருத்து. எங்கேயோ இருவரும் மற்றவருடைய பலத்தை உணர்ந்திருக்கிறீர்கள். வெளிப்படையாக அதைப் புரிந்துகொள்ளா விட்டாலும், அந்த நம்பிக்கை பலம்தான் இத்தனை வருடம் உங்கள் உறவைத் தொடர வைத்திருக்கிறது.
நீங்கள் சண்டை என்று சொல்வது உரத்த குரலில் செய்யும் வாக்குவாதமா இல்லை, கட்டிப் புரண்டு அடித்து?! அதைப் போன்றதா என்பது எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வாக்குவாதங்கள் வயது ஆக, ஆகக் குறைந்து போய்விடும். என்னை நம்புங்கள்.
எப்படியோ கடுமையான கட்டத்தைக் கடந்து விட்டீர்கள்! இத்தனை வருடம் குடும்பம் நடத்தி விட்டீர்கள். இதைவிட நிலைமை மோசமாகப் போக வாய்ப்பில்லை. ஒன்பது வேற்றுமைகளை எழுதியிருந்தீர்கள். ஒன்பது ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்கப் பாருங்கள். வாரத்தில் ஒரு நாள் Non Argument Day என்று இருந்து பாருங்களேன். பேசாமலே இருங்கள். 'அவர் எப்படி என்னவிதமாகச் சத்தம் போட்டாலும் நான் பேசாமல் இருக்கப் போகிறேன்' என்ற நினைப்பைக் கடைப்பிடியுங்கள். Trust Me. You will be the winner. Your silence will affect him. உங்களுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டதோ என்று பயப்பட ஆரம்பிப்பார். டேஸ்ட்டில் நீங்கள் வட துருவம், தென் துருவமாக இருக்கலாம். ஆனால், சில கோட்பாடுகள் — பொறுப்புணர்வு, ஈடுபாடு, சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை என்று சில விஷயங்கள் ஒத்துப் போயிருக்கலாம் அல்லவா? இல்லாவிட்டால் எப்படி இந்த 42 வருடங்கள் - குடும்பம், பையன்கள், அவர்களது திருமணம், அவர்களுக்குப் பிறந்த, பிறக்கப் போகும் குழந்தைகள் - சண்டையோடு கொண்டாடிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம் இல்லையா?
வாழ்த்துக்கள். டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |