இங்கிலீஷ் கூட்டு
தேவையான பொருட்கள்
கேரட், நூல்கோல், சௌசௌ, பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்ந்து சிறிய சிறிய சதுரங்களாக நறுக்கியது - 3 கிண்ணம்
பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 5 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய், நெய் (கலந்தது) 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
ஒரு கனமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் பாசிப்பருப்பு சேர்க்கவும். கிள்ளுப்பதமாக வெந்ததும் நறுக்கிய காய்கள், பட்டாணி சேர்த்து சிறிது வெந்தவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். குழையக் கூடாது. தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கூட்டில் சேர்க்கவும். கொதிக்கும் சமயம் அரிசி மாவைச் சிறிதளவு தண்ணீரில் கலந்து சேர்க்கவும். இறக்கிய பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பச்சை மிளகாய்க் காரம் சிறிது தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும். சப்பாத்தி, பூரியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

வர்தினி நாராயணன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com