சதீஷ்குமார் டோக்ரா என்னும் எஸ்.கே. டோக்ரா, தமிழக அரசின் காவல்துறை உயரதிகாரி. தமிழகக் காவல்துறையில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. எனப் பல்வேறு பதவிகள் வகித்தவர். தற்போது ஏ.டி.ஜி.பி. ஆக இருக்கும் இவர், தன்னார்வத்தால் தமிழ் பயின்று பிரபல இதழ்களில் இலக்கியம், ஆன்மீகம், வாழ்வியல் சிந்தனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் Crisis Response Journal இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பாடகர், இசை கோர்ப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். பஞ்சாபி, ஹிந்தி, ரஷ்யன், உருது எனப் பல மொழிகள் தெரியும். ஹார்மோனியம் வாசிப்பார். பிடித்த பாடல்களை மெட்டமைத்துப் பாடுவார். ஓவியம் தீட்டுவார். தியானப் பயிற்சியாளர். ஏர்வாடி ராதாகிருஷ்ணன் நடத்திவரும் 'கவிதை உறவு' இதழ், டோக்ரா எழுதிய 'குடும்பமே கோயில்' கவிதை நாடகத்துக்குப் பரிசு வழங்கியுள்ளது. dogratamil.com என்பது இவரது இணையதளம். வாருங்கள், அவருடனே பேசுவோம்....
கே: உங்கள் இளமைப்பருவத்திலிருந்து துவங்குவோமா? ப: நான் பஞ்சாபில் உள்ள தாரிவால் (Dhariwal) என்ற ஊரில் பிறந்தேன். அது பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள சிறு நகரம், நம்ம தேனி மாதிரி. தாய் இல்லத்தரசி. தந்தை இன்கம்டாக்ஸ் ஆஃபிசர். தாரிவாலில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் படித்தேன். குர்தாஸ்பூர் அரசுக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். பின், பட்டாலாவில் (Batala) உள்ள பேரிங் யூனியன் கிறித்துவக் கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். பின்னர் பஞ்சாபின் அமிர்தசரஸிலுள்ள குருநானக் தேவ் பல்கலையில் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழியியல் கற்பித்தேன். பின் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதித் தமிழ்நாட்டுக்கு வந்தேன்.
கே: பல்கலைக்கழக ஆசிரியரான நீங்கள் காவல்துறைப் பணிக்கு வந்தது எப்படி? ப: நான் ஐ.பி.எஸ்.ஸில் தேர்ச்சி பெற்ற 1982ம் ஆண்டிலும், இன்று இருப்பது போலவே, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆகிய பணிகள்மீது இளைஞர்களுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது. சமுதாய அந்தஸ்து மற்றும் சமூக சேவைக்கான வாய்ப்பு ஆகியவையே நான் காவல்துறைப் பணிக்கு வர முக்கிய காரணங்கள்.
கே: முதல் பணி அமைந்தது எங்கே, தமிழார்வம் முகிழ்த்தது எப்படி? ப: அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து, 1985ம் ஆண்டின் தொடக்கத்தில், சிவகாசி உட்கோட்டத்தில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகப் பணி அமர்த்தப்பட்டேன். அதற்குள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் பயிற்சிக் காலத்திலேயே தமிழ் மொழியையும் சரளமாகப் பேச, படிக்க, எழுத கற்றுக் கொண்டுவிட்டேன். பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது ரஷ்யன், சமஸ்கிருதம், உருது ஆகியவற்றைக் கற்றுக்கொண்டதன் பலனாக மொழிகளை சுலபமாகக் கற்றுக்கொள்ளும் சில உத்திகளை உருவாக்கினேன். அவை தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள கைகொடுத்தன. அத்துடன், பல்கலைக்கழகத்தில் என் பேராசிரியர் பணி, இலக்கியம் மற்றும் மொழியியல் தொடர்புடையதாக இருந்ததால், ஒரு மொழி எவ்வாறு வார்த்தைகளை இலக்கணமாக இயக்கி அர்த்தங்களைப் பரிமாறும் சாதனமாகச் செயல்படுகிறது என்று மொழிகளுக்குள்ள அந்தரங்க தர்க்கமுறையை (internal logic of a language) நன்கு அறிந்திருந்தேன். அதனால், தமிழ் இலக்கணத்தைப் புரிந்துகொள்ளச் சிரமம் ஏற்படவில்லை. நம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் தொடர்புகொள்ள இலக்கியம் ஒரு வலிமைமிக்க சாதனம் என்பதை என் பல்கலைக்கழகக் காலத்திலேயே உணர்ந்துவிட்டேன். தமிழில் எழுதினால் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும். என் காவல் பணிக்கும் அது உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து தமிழை என் இலக்கியச் சாதனமாகத் தேர்ந்தெடுத்தேன். கே: உங்கள் பணியில் எதிர்கொண்ட சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்... ப: நம் நாட்டில் காவல்துறை அரசாங்க அதிகாரத்தின் சின்னமாக மக்களால் பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் இது ஆங்கிலேயர் காலத்தின் தொடர்ச்சி. ஒருபக்கம் மக்கள் காவல்துறை அதிகாரிகளை உதவிக்கு அணுகத் தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம் அவர்களை அடக்குமுறையின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான நிர்வாகமும் என் இலக்கியப் பணியும் இந்த விஷயத்தில் எனக்குப் பெரிதும் உதவியுள்ளன.
கே: இலக்கியம் எப்படி உங்கள் பணிக்கு உறுதுணையாக இருக்கிறது? ப: ஒரு பிரச்சனையை சட்டப்படித் தீர்க்கலாம் அல்லது எழுத்து மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தித் தீர்க்கலாம். இறுதி விளைவு ஒன்றுதான். சிலசமயம் விழிப்புணர்வு மூலம் தீர்வு பெறும் பிரச்சனைகளுக்கு எதிர்மறையான பக்க விளைவுகள் இருக்காது. அதற்கு இலக்கியம் உதவுகிறது.
கே: கம்பனும் பாரதியும் உங்களை எப்படிக் கவர்ந்தார்கள்? ப: 20 வருடங்களுக்கு முன்பு கம்ப ராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், ஒருசில பக்கங்கள் படித்த பிறகு பழந்தமிழைப் பார்த்துப் பயந்து கைவிட்டு விட்டேன். தொடர்ந்திருந்தால் இன்று ஒருவேளை கம்ப ராமாயணத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருப்பேன். அவ்வாறு செய்யவில்லை என்பது பெரிய வருத்தம்தான். உலகத்தின் மிகச்சிறந்த 20-30 கவிஞர்களில் கம்பனும் ஒருவர் என்பது என் அபிப்பிராயம். பாரதியார் தமிழுக்கு அழகு சேர்த்த தலைசிறந்த கவிஞர். தமிழ்நாட்டின் இரண்டாயிரம் ஆண்டுக் கால, மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் பரம்பரையுடன் இன்றைய காலத்தை இணைப்பவர். கே: கவிதை எழுதுகிறீர்கள், சிறுகதை, கட்டுரை எழுதுகிறீர்கள். தற்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அலுவல்களுக்கு இடையே எழுத எப்படி நேரம் கிடைக்கிறது? ப: இலக்கியம் இயற்ற நேரத்தைவிடத் திறமைதான் முக்கியம். அடிக்கடி தியானம் செய்வதால் மனதின் படைப்பாற்றல் (creative power) அதிகரிக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சுலபமாக கணினியில் தட்டச்சு செய்துவிடுவேன். பிறர் உதவி தேவையில்லை. அலுவலகப் பணியை முடித்த பிறகுதான் எழுத ஆரம்பிக்கிறேன். அதனால், இலக்கியம் எழுதும்போது 'பணி புறக்கணிக்கப்படுகிறதே' என்ற குற்ற உணர்வு என் கவனத்தைச் சிதைப்பதில்லை.
கே: உங்களது தமிழ்க் கலைச்சொல் உருவாக்க முயற்சி குறித்துச் சொல்லுங்கள்.. ப: ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலோ, தமிழில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்ற நிலை வந்தாலோ புது வார்த்தைகளை உருவாக்குவேன். உதாரணத்திற்கு personality என்ற வார்த்தை பலரால் 'ஆளுமை' என்று மொழிபெயர்க்கப் படுகிறது. ஆனால், எனக்கு அது சரியான வார்த்தையாகப் படவில்லை. அதனால், 'தனியியல்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். எல்லா மனிதர்களுக்கும் சில குணாதிசயங்கள் (traits) இருக்கின்றன. அதை மனித இயல்பு என்று வர்ணிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணாதிசயமும் அதே அளவு இருப்பதில்லை. அத்துடன் குணாதிசயங்களின் இணைப்பு-முறை (interaction of traits) ஒவ்வொருவருக்கும் தனித்தனி வகையாக இருக்கிறது. இந்தப் பிரத்தியேகமான குணாதிசய அமைப்புதான் அவர்களது தனியியல்பு. இதை என் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். இதே போல ஹார்மோனுக்குச் சரியான வார்த்தை கிடைக்கவில்லை. அதனால், 'இயக்கிச்சாறு' என்ற வார்த்தையை உருவாக்கினேன். உடலில் உள்ள சுரப்பிகளால் சுரக்கப்படுவதால் அது 'சாறு' என்றும் நம் உடலின் செயல்களை இயக்குவதால் அது 'இயக்கி' என்றும் பொருள் வரவேண்டும் என்ற முறையில் உருவாக்கினேன்.
கே: உங்களுடைய படைப்புகள், மொழிபெயர்ப்புகள், நூலாக்க முயற்சிகள் குறித்து... ப: நாளுக்கு நாள் என் இலக்கியப் பணி வேகம் பிடித்து வருகிறது. தொடக்கத்தில் 'நம் தமிழ் வித்தியாசமாக இருக்குமோ' என்று அஞ்சினேன். ஆனால், என் இலக்கிய ஆக்கங்களை வாசகர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதால் இப்பொழுது தயக்கம் இல்லாமல் எழுதுகிறேன். விரைவில் டன்-டன்னாக புத்தகங்களை எழுதுவேன் என்ற நம்பிக்கை மனதைத் திடப்படுத்துகிறது. கே: உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார், யார்? ப: எந்த இலக்கியத்தை ஒருமுறை படித்தபிறகு மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறதோ, அதுதான் என் பார்வையில் சிறந்த இலக்கியம். கம்பன், வள்ளுவர், பாரதி, அவ்வையார், கண்ணதாசன், வைரமுத்து, மு. மேத்தா, ஜெயகாந்தன், சாண்டில்யன், பாலகுமாரன், இப்படி என் மனம் கவர்ந்தவர்கள் பலரைச் சொல்லலாம்.
கே: உங்களுடைய பிற ஆர்வங்கள் என்னென்ன? ப: ஆன்மிகம், தியானம் ஆகியவை என் வாழ்க்கையின் அடிப்படை. நான் தமிழகச் சிறைத்துறையின் பொறுப்பதிகாரியாக இருந்தபோது சிறைவாசிகளைத் திருத்தி நல்லவர்களாக மாற்ற தியான முறையை மிக வெற்றிகரமாகப் பயன்படுத்தினேன். தியானத்தின் சக்தி எவ்வாறு கல்நெஞ்சங்களை உருக வைக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். இசையார்வமும் உண்டு.
கே: அதைப் பற்றிச் சொல்லுங்களேன்... ப: எனக்குச் சிறுவயதிலிருந்தே இசையார்வம் உண்டு. பின்னர் நான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது ஓர் இசையாசிரியரிடம் ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதம் கற்று வந்தேன். தமிழ்நாட்டுக்கு வந்தபின் மதுரை ஊரகக் காவல்துறையில் எஸ்.பி. ஆகப் பணியாற்றியபோது மதுரை வானொலி நிலையத்தில் பாரதி, பாரதிதாசன் பாடல்களுக்கு மெட்டுப் போட்டுப் பாடியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அங்கே நிறைய பாடல்களைப் பாடிப் பதிவு செய்திருக்கிறேன்.
கே: உங்களுக்குப் பிடித்த படங்கள்.... ப: அவ்வப்போது படம் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் நாயகன், மைக்கேல் மதன காமராஜன். அஞ்சலி, அக்னிநட்சத்திரம், மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களும் என்னைக் கவர்ந்தவையே. தற்போது பணிச்சூழல் மற்றும் நேரமின்மை காரணமாக அதிகமாகப் படங்கள் பார்க்க முடியவில்லை.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். எங்கள் குடும்பக் கலாசாரம் ஒரு ஆன்மீக கலாசாரம். என் பெற்றோர்கள் தினந்தோறும் காலையில் எழுந்ததும் குளித்துப் பூஜை செய்வார்கள். அடுத்த தலைமுறையிலும் கூட அது தொடர்கிறது. காலையில் எழுந்ததும் நான், மனைவி, என் இரு மகள்கள் என எல்லோரும் சிறிது நேரம் பூஜை செய்து விட்டுத் தான் எங்கள் பணிகளைத் தொடர்கிறோம். நம் இந்திய மதிப்பீடுகளும் ஆன்மிகமும் எங்கள் குடும்பக் கலாசாரத்தின் அடிப்படை.
கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? ப: நிறைய எழுத வேண்டும் என்று ஏற்கனவே சொன்னேன். அத்துடன், என் மகள் ஒரு நிறுவனத்திற்காக முருகன் பாடல்களின் டிஸ்க் ஒன்று தயார் செய்து கொண்டிருக்கிறார். அவர் தயார் செய்யும் மெட்டுகளுக்கு என்னைப் பாடல்கள் எழுதவும் ஒருசில பாடல்கள் பாடவும் சொல்லியிருக்கிறார். வெற்றிகரமாக முடிந்தால், இந்த முயற்சி ஒரு பெரிய அணை மதகைத் திறந்துவிடும்.
அரவிந்த் சுவாமிநாதன்
சொன்னது பலித்தது! 1975ல் எம்.ஏ. தேர்வுகள் முடிந்தபின் விடுமுறைக் காலத்தில் என் நண்பர் அசோக்குமார் என்னை வற்புறுத்தி ஹிமாசல பிரதேசத்திலுள்ள கக்கல் என்னும் சிறிய கிராமத்துக்கு ஒரு ஜோசியரைப் பார்க்க அழைத்துச் சென்றார்.
எனக்கு ஜோசியர்கள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை. அதனால் அந்த முதிய ஜோசியர் என் முகத்தின் அவநம்பிக்கை பாவனையைப் பார்த்து சற்று எரிச்சலுடன், "நீ எனக்கு கை ரேகையையே காட்ட வேண்டாம். உன் நெற்றியைப் பார்த்தே பலன் சொல்கிறேன், நீ சீருடை பணி செய்வாய்" என்று கூறினார்.
1971ல் பங்களாதேஷ் போர் முடிந்து நான்கு ஆண்டுகளே ஆன அந்தக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 'சீருடை பணி' என்று சொன்னால் ராணுவம்தான் நினைவுக்கு வரும். எனக்கு அப்பொழுது ராணுவத்தில் சேர வயது தாண்டி விட்டதால் 'ஜோசியர் ஃப்ராட்' செய்கிறார் என்ற உணர்வு என் முகத்தில் இன்னும் இறுக்கத்தைச் சேர்த்தது. அதைக் கண்ட ஜோசியரின் எரிச்சல் இன்னும் வலுத்தது.
"நீ தென்னிந்தியாவில் பணி புரிவாய்" என்று கர்ஜித்தார்.
"நாம் இதுவரை டெல்லியைத் தாண்டியே போனதில்லையே! இவர் தென்னிந்தியா என்கிறார். டோட்டல் ஃப்ராட்" என்றது என் மனம். ஜோசியரை மனதில் திட்டிக் கொண்டும், நண்பரை வெளிப்படையாக விமர்சித்தபடியும் புறப்பட்டேன். நண்பரோ, "நீ பார்த்துக்கிட்டே இரு! ஒருநாள் எல்லாமே இவர் சொல்றது மாதிரியே நடக்கும்" என்றார்.
1982ல் இந்தியக் காவல் சேவையில் (ஐ.பி.எஸ்) தேர்ச்சி பெற்றேன். 1983ல் ஐதராபாத்தில் உள்ள தேசியக் காவல் அகாடமியில் பயிற்சி தொடங்கியது. சில மாதங்கள் கழித்து யார் யார் எந்தெந்த மாநிலத்தில் பணிபுரிவார்கள் என்ற பட்டியல் வந்தது. எனக்குத் தமிழ்நாடு என்றபோது அந்த ஜோசியர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை.
எஸ்.கே. டோக்ரா (dogratamil.com-ல் இருந்து)
*****
அடி-உதை; வெட்டு-குத்து! காவல் பணி மறக்க முடியாத அனுபவங்களை அளித்துள்ளது. சிவகாசியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக இருந்தபோது ஒருநாள் மதிய நேரத்தில் தபால் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மம்சாபுரத்தில் பயங்கரமான வெட்டு, குத்து நடந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. காவலர்களைத் திரட்ட நேரம் இல்லாத அவசரத்தில் ஜீப் ஓட்டுநரை வண்டியில் ஏறச் சொல்லித் தனியாகவே புறப்பட்டேன். போய்ப் பார்த்தால், ஒரு சிலர் வெட்டுண்டு விழுந்து கிடந்தனர். நானும் என் ஓட்டுநரும் தாக்குதல் நடத்திய கூட்டத்தை அவர்களது தெருவுக்குள் விரட்டியடித்தோம். அந்த நேரத்தில் கையில் வைத்திருந்த லத்தியால் ஒரு நபரை இலேசாகத் தட்டிவிட்டேன். அவர் அந்தச் சமுதாயத்தின் நாட்டாண்மை என்பது எனக்குத் தெரியாது. திடீரென்று சுமார் இருபது, முப்பது இளைஞர்கள் கையிலிருந்த அரிவாள்களை என் பக்கம் திருப்பி 'எங்க நாட்டாமையை எப்படிடா அடிக்கலாம்?' என்று கண்கள் அனல் கக்க என்னை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஒரு கணம் 'இதுதான் நம் கடைசி நொடி' என்று இதயத் துடிப்பு ஸ்தம்பித்தது. மனதைத் திடப்படுத்தி சூழ்நிலையைச் சமாளித்தேன். நட்பாகப் பேசி அவர்களது ஆத்திரத்தை ஆற்றினேன்.
அதே கலவரத்தின் போது ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்குப் போகும்போது அங்கே எங்களுடன் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினருக்கு "நான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில வந்திடறேன். அதற்குள்ள நீங்க எல்லாரும் தண்ணி போட்டு ரெடியா இருங்க" என்றேன். என்னதான் தமிழ் கற்றுக் கொண்டிருந்தாலும் எனக்கு 'தண்ணி போடுவதன்' அர்த்தம் அப்போது தெரியாமல் போய்விட்டது. ஆனால், தீயணைப்புத் துறையினர் நான் வண்டிகளில் தண்ணீர் நிரப்பச் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு தலையாட்டினார்கள். நல்லவேளை, கலவரக்காரர்களைத் தண்ணீர் போட்டு ரெடியாக இருக்கச் சொல்லவில்லை!
எஸ்.கே. டோக்ரா |