தென்றல் பேசுகிறது.....
ஒரு மருத்துவர் நோயாளியிடம் கேட்டாராம், "ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் இருக்கிறது. எதை முதலில் சொல்ல?" என்று. "அப்படியா, முதலில் நல்லதைச் சொல்லுங்கள்" என்றார் நோயாளி. "நீங்கள் இன்னும் இரண்டு வாரம் உயிரோடு இருப்பீர்கள்" என்றார் டாக்டர். 'இதுதான் நல்ல சேதியா என்று நினைத்த நோயாளி, "போகட்டும், கெட்டதைச் சொல்லுங்கள்" என்றாராம். "நான் முதலில் சொன்னதை இரண்டு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டும், மறந்துவிட்டேன்" என்றாராம் டாக்டர். அதேபோல, நாமும் இப்போது ஒரு நல்ல சேதியுடன் தொடங்கலாம். 'எகானமிஸ்ட்' பத்திரிகை தனது தலையங்கத்தில் இவ்வாறு கூறுகிறது: "1990களில் ஜான் டைலூலியோ என்ற அமெரிக்கர் வருங்கால இளைஞர்கள் மனித உயிரைச் சற்றும் மதிக்காத, எதிர்காலத்தைக் கருதாத வேட்டை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்கள் காவல் காப்போரைக் கொண்ட காம்பவுண்டுக்குள் அடைந்து அஞ்சி வாழ்வார்கள் என்று கூறியது பொய்த்துவிட்டது. பின்னாளில் அவரே தாம் கூறியது சரியல்ல என்று ஏற்றுக்கொண்டார். காரணம், அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் குற்ற அலைகள் குறைந்துவிட்டன. கொலைகளும் வங்கிக் கொள்ளைகளும் குறைந்துவிட்டன." சமுதாய ஏற்றத் தாழ்வுகள்கூடக் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக அமையவில்லை. குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சிக் காலத்திலும் குற்ற எண்ணிக்கை உயரவில்லை என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணம், காவல்துறையில் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள திறன்வாய்ந்த புலன் துலக்கும் ஆற்றல் என்பதுபோலச் சிலவற்றைக் குறிப்பிடுகிறது எகானமிஸ்ட். அமெரிக்காவும் வளர்ந்த நாடுகளும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம் இது.

இந்தியாவில் நிலைமை தலைகீழாக இருப்பதை கவனித்தே ஆகவேண்டும். 'வேட்டை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள்' அதிகமாகிவிட்டார்கள்; மிக அதிகமான குற்றங்களில் படித்த, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கை இருக்கிறது; தொழில்முறையாக நடத்தப்படும் குற்றங்களுக்குப் பின்பலமாக அரசியல்வாதிகளோ, பெரும் பணக்காரர்களோ இருக்கிறார்கள். அண்மையில் "இந்தியப் பாராளுமன்ற இருக்கையை நூறு கோடி ரூபாய் கொடுத்தால் வாங்கிவிடலாம்" என்று ஒரு காங்கிரஸ் எம்.பி. கூறியிருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரையில் எதைப் பணத்தால் வாங்கமுடியாதென்று கேட்டால் விடை சொல்வது கடினம். அண்ணா ஹசாரே அலை ஒன்று தலைதூக்கி அடங்கிவிட்டது. அவரது முதல் குழுவில் இருந்தவர்கள் சிதறிவிட்டார்கள். சி.பி.ஐ., காவல்துறை எல்லாமே பதவியில் இருப்பவர்களின் கைப்பாவைகள்தாம் என்று உச்சநீதி மன்றமே சொல்கிறது. அப்படியிருக்க, இந்தியாவில் எப்போது குற்றங்கள் குறையும், குற்றவாளிகளின் கொடூர ஆதிக்கம் குறையும் என்று அந்த நல்ல காலத்துக்காகச் சராசரி மனிதன் காத்துக்கொண்டிருக்கிறான்.

*****


செல்ஃபோன் கம்பெனியிடமிருந்து குற்றவாளியின் இருப்பிடத்தைக் கேட்டறிய வாரண்ட் தேவையில்லை என்று ஐக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அமெரிக்கக் காவல் துறையினருக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. "செல்ஃபோனைப் பயன்படுத்தும் ஒருவர் தாம் இருக்குமிடத்தைத் தாமாகவே வெளியிடுகிறார். அதில் ரகசியம் இல்லை. எனவே செல்ஃபோன் கம்பெனியிடம் காவல் மற்றும் புலனாய்வுத் துறைகள் இருப்பிட விவரத்தைக் கேட்டுப் பெறலாம்" என்று தீர்ப்பு சொல்கிறது. இதைத் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கோர்ட் கருதவில்லை. இந்தியாவிலும், ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் தாவூத் இப்ராஹிம் தலையீடு, வேறு யார் யாருக்கு இதில் பங்கு என்பது உட்படப் பல விஷயங்கள் செல்ஃபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டபின், அந்தக் கம்பெனி ஆவணங்களை ஆராய்ந்ததில் வெளிவந்தன. 'இது தவறு, தனிநபர் சுதந்திரம் முக்கியம்' என்று கூறுபவர்கள் உள்ளனர். அரசு தன் கையிலுள்ள அதிகாரத்தை அப்பாவி மக்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே, இவர்களின் அச்சம் தவிர்க்கப்படும். தவிர்க்கப்பட வேண்டும்.

*****


பஞ்சாபில் பிறந்து சென்னையில் போலீஸ் உயரதிகாரியாகப் பணிபுரியும் திரு. எஸ்.கே. டோக்ரா அவர்களின் தமிழார்வம் வியக்கத் தக்கது. கதை, கட்டுரை, சொற்பொழிவு என்று தமிழில் சுறுசுறுப்பாக எழுதிவரும் இவர் இந்த இதழின் நேர்காணலில், "டன் டன்னாக எழுதிக் குவிக்கப் போகிறேன்" என்கிறார். சிறுகதைகளும் மிக வித்தியாசமானவை. FeTNA ஆண்டு விழா, சிலப்பதிகார நாடகத்தைப் பற்றிய சொல்லின் செல்வி உமையாள் முத்துவின் அலசல், இளம் சாதனையாளர்களின் உற்சாகமூட்டும் சாதனைகள், டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரனின் மிக யதார்த்தமான ஆலோசனை என்று பலவற்றைத் தாங்கித் தென்றல் உங்கள் கைக்கு வருகிறது. வாசியுங்கள், ருசியுங்கள்.

வாசகர்களுக்கு இந்தியச் சுதந்திர நாள், கிருஷ்ண ஜயந்தி மற்றும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

ஆகஸ்டு 2013

© TamilOnline.com