மே 25, 2013 அன்று ஆஷ்லேண்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் திருமதி. துர்கா கிருஷ்ணனின் மாணவியான செல்வி. ரூபா ரவியின் வீணை அரங்கேற்றம் நடைபெற்றது. கடினமான கண்டஜாதி அட தாளத்தில் அமைந்த கல்யாணி ராக வர்ணத்துடன் தொடங்கினார் ரூபா. 'சித்திவினாயகம்' (ஷண்முகப்ரியா), தியாகராஜரின் 'சாதிஞ்சனே' (ஆரபி), 'பக்கல' (கரஹரப்ரியா), 'கருடகமன' (நாகஸ்வரவளி), 'ஆனந்த நடமாடுவார்' (பூர்விகல்யாணி) என்று கிருதிகளை அற்புதமாக அடுத்தடுத்துக் கொண்டு போனதில் நேரம் போனதே தெரியவில்லை. 'ஓ ரங்கசாயீ' என்ற காம்போஜி ராகப் பாடலை வெகு அழகாக ஆலாபனை செய்தார். ஹிந்தோளத்தில் 'தேவதேவம்' பாடியபின் ராகம்-தானம்-பல்லவிக்குள் நுழைந்தார்.
இரண்டு ராகங்களில் அமைந்த விசேஷப் படைப்பொன்றை ராகம்-தானம்-பல்லவிக்காகவே குரு துர்கா அமைத்திருந்தார். இதன் ராகமாலிகைப் பல்லவியை ரூபா, மோஹனம், பிருந்தாவனி, வசந்தி, ஹம்சானந்தம், சிவரஞ்சனி, ரேவதி ஆகிய ராகங்களில் சுகமாக வாசித்துக் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர் 'போ சம்போ' பாடிவிட்டுச் சில பிரபலமான கிருதிகளை வாசித்தார். யமுனாகல்யாணியில் லால்குடி ஜெயராமன் அவர்களின் துள்ளலான தில்லானாவுக்குப் பின்னர் சுருட்டியில் மங்களம் வாசித்தார். நியூ இங்கிலாந்து பகுதியின் பிரபல குருமார்களான ரேவதி ராமஸ்வாமி, தாரா ஆனந்த் ஆகியோர் ரூபா ரவியின் நேர்த்தியான வீணைத் திறனை வெகுவாகப் பாராட்டினார்கள். டாக்டர். பிரவீன் சீதாராம் சிறப்பாக மிருதங்கம் வாசித்தார்.
ஆங்கில மூலத்திலிருந்து தொகுக்கப்பட்டது.
ஆங்கிலமூலம்: தீபிகா ஸ்ரீகாந்த், ஆஷ்லேண்ட், மாசசூஸெட்ஸ் |