மே 25, 2013 அன்று ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி தனது ஆண்டுவிழாவை மேடி கிரீக் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. அதன் உறுப்பினர் பள்ளிகளான பியர்லேண்ட், கேட்டி, உட்லண்டஸ் பள்ளிகளிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தமிழ்த்திறனை வெளிப்படுத்தியதுடன், 2012-13 கல்வியாண்டில் வென்ற விருதுகளைப் பெற்றனர்.
இறைவணக்கப் பாடலுடன் விழா தொடங்கியது. பெருநகரப் பள்ளித் தலைவர் திரு. இரா. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். உயர்நிலை மாணாக்கர்களின் தமிழ் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. கேட்டி பள்ளி மாணாக்கர் உருவாக்கிய பல்வேறு இடங்கள் குறித்த ஒரு கட்டற்ற கலைக்களஞ்சிய வலைத்தளம் பற்றிய விளக்கவுரையும், 'கடையேழு வள்ளல்கள்' பற்றிய நாடகமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பியர்லேண்ட் பள்ளி மாணாக்கர்களின் 'டெக்சஸ்-தமிழ்நாடு' மாநிலங்களின் ஒற்றுமை வெகுவாகக் கவர்ந்தது. உட்லண்ட்ஸ் பள்ளி மாணாக்கர்கள் வழங்கிய 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் மிகச் சிறப்பு.
விழாவின் சிறப்பு விருந்தினர் ஆஸ்டின்-டெக்சஸ் பல்கலைக்கழக ஆசியக் கல்வித்துறைப் பேராசிரியர் திரு. சங்கரன் இராதாகிருஷ்ணன் அனைத்தையும் மனமாரப் பாராட்டியதுடன் குழந்தைகள் வழக்கமாக வீட்டில் தமிழ் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்வதை சற்றே மாற்றி, குழந்தைகள் தத்தம் பெற்றோரை வீட்டில் தமிழில் பேசச் சொல்லவேண்டும் என கேட்டுக்கொண்டது வித்தியாசமான வேண்டுகோள். தமிழ் கற்பது, மொழி அறிவதற்காக என்று மட்டுமல்லாமல் அமெரிக்க மண்ணில் வளரும் தலைமுறையினர் தமிழ்ப் பண்பாடு தெரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றார். பின்னர், பள்ளி தன்னார்வ ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்ப் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் பற்றிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி ஆண்டுமலரைத் திருமதி. அகிலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இறுதியாக மாணாக்கர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழா அமைப்பாளர் திரு. ஜகன் அண்ணாமலை நன்றி கூறினார். மேலும் விபரமறிய: www.houstontamilschools.org
|