சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்
2013 மே 29 தொடங்கி ஜூன் 2ம் தேதிவரை சான் ஹோசே பாலாஜி திருக்கோவிலில் ஸ்ரீ ருக்மணி-பாண்டுரங்கர், ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுடன், கோவிலில் ஆனந்தா அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கோவிலின் தோற்றுவாய்க்குக் காரணமான ஸ்ரீ நாரயணானந்த சுவாமிகளின் இருபதாண்டு தன்னலமற்ற சேவையும் இச்சமயத்தில் அன்பர்களால் கொண்டாடப்பட்டது. சுவாமிகளின் பிறந்த தினமான ஜூன் 1ம் தேதியன்று அவரது எடைக்குச் சமமான அரிசியால் துலாபாரம் நடைபெற்றதுடன், முழுநாள் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலச ஸ்தாபனம், பிராணப்ரதிஷ்டை, மந்திர தீட்சை, பூஜைகள் என விழா நாட்கள் பலவகை ஆராதனைகளால் நிரம்பியவையாக இருந்தன. ஸ்ரீனிவாச கல்யாணம், சத்யநாராயண பூஜை ஆகியவையும் பக்தர்களுக்கு நிறைவைத் தந்தன.

கோவில் செயலர் லக்ஷ்மி விட்டல்தாசி, அன்பர்கள் அனில் ரவி, மாதவி ராஜன் ஆகியோர் சுவாமிஜியுடனான தமது ஆன்மீகப் பயண அனுபவங்களைத் தொகுத்து 'சாதனா' என்ற பெயரில் ஒரு மலரை வெளியிட்டனர். கூபர்டினோ மேயர், ஃப்ரீமாண்ட் துணைமேயர் அனு நடராஜன், சான் ஹோசே நகர நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கென்சன் சூ மற்றும் ஆஷ் கால்ரா, சான் ஹோசே காவல்துறைத் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பெங்களூரு, சென்னை ஆகிய ஊர்களில் சுவாமிஜியின் பாலாஜி மடம் இருப்பதையும், அது சான் ஹோசேவில் செய்துவரும் இலவச மருத்துவ சேவை குறித்தும் அன்பர் பிரபு கோயல் எடுத்துரைத்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுவாமிஜி அவர்களுக்கு சுவாமி நாராயணானந்த புரி எனத் திருநாமம் வழங்கி அவரை பாலாஜி மடத்தின் பீடாதிபதியாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com