அரங்கேற்றம்: ஸ்ருதி சிவானந்தம்
ஜூன் 1, 2013 அன்று செல்வி. ஸ்ருதி சிவானந்தத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் ப்ளெசன்டன் அமடோர் வேலி மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடந்தேறியது. ஸ்ருதி அதே மேல்நிலைப் பள்ளியில் இறுதியாண்டு மாணவி. சிறு வயதிலிருந்தே ஃப்ரீமான்ட்டில் உள்ள ஸ்ரீ லலித கான வித்யாலயத்தில் குரு திருமதி. லதா ஸ்ரீராமிடம் கர்நாடக இசை கற்று வந்துள்ளார். 'சாமி நின்னே' என்ற பட்ணம் சுப்ரமணிய ஐயரின் நாகஸ்வராளி வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர், நான்கு முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகளான 'சித்தி வினாயகம்' (ஷண்முகப்ரியா), 'பரதேவதா' (தன்யாசி), 'சுவாமிநாத பரிபாலயா' (நாட்டை), 'சிந்தயம்' (பைரவி) ஆகியவற்றைப் பாடி இசையின் வெவ்வேறு பரிமாணங்களில் தமது திறமையை வெளிப்படுத்தினார். ராக ஆலாபனை மற்றும் கல்பனா ஸ்வரங்களை சிறப்பாகப் பாடினார். தியாகராஜரின் 'சரச சாம தான' பாடியபின் நிகழ்ச்சியின் மையமாக 'பாவயாமி ரகுராமம்' என்ற சுவாதித்திருநாள் கீர்த்தனையை அருமையாகப் பாடினார். தியாகராஜரின் 'மோக்ஷமு கலதா', சதாசிவ பிரும்மேந்திரரின் 'பிபரே ராம ரசம்', சுவாதித் திருநாளின் 'பணி மதி முகி பாலே', நாமதேவரின் அபங் பாடலான 'பக்த ஜன வத்சலே' ஆகியவற்றால் கேட்டோரைப் பக்தி ரசத்தில் முழுக்காட்டினார். மகாராஜபுரம் சந்தானத்தின் சிவரஞ்சனி ராகத் தில்லானாவும், 'சிவனார் மனம் குளிர' என்ற திருப்புகழும் நிகழ்ச்சிக்கு நிறைவாக அமைந்தன.

ஸ்ருதி தனது நன்றியுரையை மனதின் ஆழத்திலிருந்து அளித்த விதம், குரு மற்றும் இசைப்பள்ளி மீது அவருக்கிருந்த மிகுந்த மதிப்பை வெளிப்படுத்தியது. குரு லதா ஸ்ரீராம் "அரங்கேற்றம் என்பது ஒரு தொடக்கமே" எனத் தனது வாழ்த்துரையில் கூறியது சிந்திக்கத் தகுந்தது. திரு. ரவீந்த்ர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு. கிருஷ்ணா பார்த்தசாரதி (வயலின்) ஆகியோர் சிறப்பான பக்கபலமாக அமைந்தனர்.

ரமாதேவி கேசவன்,
சான் ஹோசே

© TamilOnline.com