பாஸ்டன்: பால கோகுலம் ஆண்டு விழா
ஜூன் 15ம் தேதியன்று, 'பால கோகுலம்' என்ற நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் கலாசாரப் பள்ளி தனது இரண்டாவது ஆண்டு விழாவை நாஷூவாவில் உள்ள பிராட்ஸ்ட்ரீட் தொடக்கப்பள்ளி கலையரங்கில் சிறப்பாகக் கொண்டாடியது. பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட நன்னெறியூட்டும் இந்திய கலாசாரக் கல்வித் திட்டமான 'பூர்ண வித்யா'வை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பாலகோகுலத்தில், 'துருவா' (முதல் இரண்டு வகுப்புகள்), 'பிரஹலாதா' (அடுத்து ஐந்தாம் வகுப்பு வரை), 'சங்கர-சாரதா' (ஆறாம் வகுப்புக்குமேல்) என்று மூன்று பிரிவுகள் உள்ளன.

முதலில் 'துருவா' குழந்தைகள், அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய 'சின்ன சின்ன பதம் வைத்து' என்ற பாடலையும், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகத்தையும் மழலைக் குரலில் அழகாகக் பாடினர். 'பிரஹலாதா' வகுப்பினர் ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் அசத்தினர். 'சங்கர-சாரதா' மாணவ மாணவியர் 'திரிதராஷ்டிரரின் தர்ம சங்கடம்' என்ற தலைப்பிலான விவாதத்தில் திறமையாக வாதிட்டனர். பாலகோகுலம் மற்றும் ஆலயத்தின் வளர்ச்சியைப் பற்றி ஓர் ஓலி-ஒளிக் காட்சியையும் வழங்கினர். சமஸ்கிருத நாடகம், லிங்காஷ்டகம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா என்று பல வழிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். 'மனசா சததம் ஸ்மரணீயம்' என்ற பாடலுடன் விழா நிறைவெய்தியது. மேலும் அறிய: www.hindutemplenh.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
மாசசூஸெட்ஸ்

© TamilOnline.com