கச்சேரி: வர்ஷா ரவிகுமார்
ஜூன் 15 அன்று லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தில் செல்வி. வர்ஷா ரவிகுமாரின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. ஆபோகியில் 'எவ்வரிபோத' வர்ணத்தைத் தொடர்ந்து, ஷண்முகப்ரியாவில் 'சித்தி விநாயகம்' கீர்த்தனையுடன் கல்பனா ஸ்வரமும் சேர்ந்து நிகழ்ச்சி களை கட்டியது. லதாங்கி ராகத்தில் பட்ணம் சுப்ரமண்ய ஐயரின் 'அபராதமுலன்னி' அருமை. தொடர்ந்தது பூர்ண சந்திரிகாவில் விறுவிறுப்பான 'தெலிஸிராம' என்ற தியாகராஜ கீர்த்தனை. கானடாவில் 'மாமவஸதா ஜனனி' ஆலாபனைக்கு எடுத்துக்கொண்டார். துக்கடாவில் 'திக்கு வேறில்லை' (வராளி), 'பில்லங் கோவிய செல்வகிருஷ்ணா' (காபி) 'கிருஷ்ண கஹோ' மீரா பஜன் ஆகியவையும் கேட்க அருமையாக இருந்தன. திரு. விக்னேஷ் தியாகராஜன் (வயலின்), கோபால் ரவீந்திரன் (மிருதங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

செல்வி. வர்ஷா, குரு அசோக் சுப்ரமணியம், குரு சாருமதி ராமச்சந்திரன் ஆகியோரிடம் சங்கீதம் பயின்றுள்ளார். கிளீவ்லாண்ட் ஆராதனை, பாபநாசம் சிவன் விழா ஆகிய போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கச்சேரிகள் செய்துள்ளார்.

வர்ஷா, குரு விஷால் ரமணியிடம் நடனம் பயின்று தனது எட்டாவது வயதிலேயே அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் செப்டம்பர் மாதம் Cal Poly San Luis Obispo கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கப் போகிறார்.

கௌசல்யா சுவாமிநாதன்,
ப்ளெஸண்டன்

© TamilOnline.com