பெண்கள் மீண்டு வர்றாங்க....
ஆண்களைவிடப் பெண்கள் தங்கள் திறமையை இரண்டு மடங்கு அதிகமாக நிரூபித்தால்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதுபோன்ற பாரபட்சம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. ஆண்களின் அளவுக்கு வேலை செய்ய முடியும் என்பதையும், அதிக காலத்துக்கு அதே வேலையில் தொடரமுடியும் என்பதையும் நிரூபித்தால் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்தத் தடையும் கிடையாது.

டாக்டர் அப்துல் கலாம், குடியரசுத் தலைவர், மாணவர்களுடனான கலந்துரையாடலில்...

*****


கற்பு மனசு சம்பந்தப்பட்டது. அது ஒரு நம்பிக்கை. மூடு மந்திரம். பெண்கள் மீண்டு வர்றாங்க. உடைச்சிட்டு வர்றாங்க. நூறு வருஷமாகக் கட்டிப்போட்டே வச்சிருந்தோம். கயிறு இத்துப்போகும்; இல்லையா, தானாக அவிழ்ந்துவிடும். நாம் சினிமாக்காரங்க நல்ல சிந்தனையாகப் பேசுவோம். அர்த்தபூர்வமாகச் சினிமா எடுப்போம். அதைச் செய்தால் போதும்.

பாரதிராஜா, வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலிருந்து...

*****


எதற்காகவும் மக்கள் கவலைப்பட வேண்டாம். மக்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு உள்ளது. மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் உள்ளது. எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு நீங்கள் திரும்புவீர்கள். அதற்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ, அவற்றை இந்த அரசு செய்யும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

ஜெயலலிதா, தமிழக முதல்வர், சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே பேசியது...

*****


மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய கட்சி துவங்கியிருக்கிறேன். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வர வேண்டும் என்பதற்காகக் கருத்து சொல்ல மாட்டேன். நாம் சொல்லும் கருத்துக்கு நியாயமான காரணம் இருக்கிறதா, மக்களுக்கு அதனால் என்ன பிரயோஜனம் என்று பார்ப்பேன்.

விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியது...

*****


சச்சின் எப்போதும் மனவலிமை உள்ளவர். இது இளமை முதலே அவரிடம் இருந்து வந்துள்ளது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிராட்மனுக்கு அடுத்தபடியாக சச்சின் இருக்கலாம். நான் பார்த்தவரை சச்சின்தான் சிறந்த பேட்ஸ்மேன். கடின உழைப்பும் பயிற்சியும்தான் டெண்டுல்கரின் வெற்றிக்குக் காரணம்.
சிவராமகிருஷ்ணன்,

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், செய்தியாளர்களிடம் கூறியது...

*****


முதலீடுகளுக்கு நாம் மேற்கத்திய நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவசியம் இல்லை. தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இன்னும் பயன்படுத்தக்கூடிய ஏராளமான வளங்கள் உள்ளன. பெரும் முதலீட்டை எதிர்பார்க்கும் நமக்கு இந்தப் பிராந்தியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இந்த உச்சி மாநாடுகள் மிகவும் முக்கியமானவை. ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் பேசும்போது, தடையற்ற வர்த்தக ஏற்பாடு குறித்துப் பேசுவேன்.

மன்மோகன்சிங், பிரதமர், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் கிழக்காசிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும்போது விமானநிலையத்தில் கூறியது...

*****


அரசியலில் மாறுபட்ட நிலைகள் ஏற்படும் என்பது, அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும். அதனால்தான் பெரியாரும், ராஜாஜியும் இறுதிக் காலம்வரை நட்போடு இருந்தனர். இருவருமே நேர் எதிர் கொள்கைளைக் கொண்டவர்கள். இருந் தாலும், கொள்கைகளுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டுத் தனிப்பட்ட முறையில் நட்புடன் இருந்தனர். அந்த மாமனிதர்கள் விதைத்துவிட்டுப் போன அரசியல் நாகரிகம் இப்போதும் தழைத்தோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.

மு. கருணாநிதி, ராஜாஜி அறக்கட்டளை வழங்கிய 'ராஜாஜி விருது' பெறுகையில் பேசியது...

*****


'மியூசிக் தெரபி'ன்னு சொல்லும்போது எனக்குக் கவலையாக இருக்கிறது. நாம் மனித உயிர்களோடு விளையாடுகிறோம். தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள் மாதிரி எந்த நினைப்பும் மனதில் இல்லாமல் தவம் செய்கிறவர்களுக்கு அதெல்லாம் முடியும். எல்லா விஷயங்களிலும் அல்லல்பட்டுக் கொண்டு கவனம் இல்லாமல் நாம் இருக்கிறோம். உயிரோடு விளையாட எனக்கு மனமில்லை. சில ராகத்தைப் பாடினால் இருதயத்திற்கு நல்லது. கிட்னிக்கு நல்லது. எல்லாமே விஞ்ஞானத்தில் இருக்கிறது.

கே.ஜே. யேசுதாஸ், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com