தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 15ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என பல இலக்கிய வகைப்பாடுகளில் இயங்கியவர்.
இவ்விழாவில் பிற பிரிவுகளில் விருது பெற்றோர்: புனைவு இலக்கியப் பிரிவில் கண்மணி குணசேகரன் ('அஞ்சலை' நாவல்); அபுனைவு இலக்கியப் பிரிவில் பிரபஞ்சன் ('தாழப் பறக்காத பரத்தையர் கொடி'), அப்பு ('வன்னி யுத்தம்'); கவிதைப் பிரிவில் தேவ அபிரா ('இருள் தின்ற ஈழம்'), நிலாந்தன் ('யுகபுராணம்'); மொழிபெயர்ப்புப் பிரிவில் எம்.ஏ. சுசீலா ('அசடன்' ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு), முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை சங்கநூல்கள் மொழிபெயர்ப்புக்கு வைதேஹி ஹேர்பர்ட் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு).

மாணவர் கட்டுரைப் போட்டியில் மீரா ரகுநாதன் பரிசு பெற்றார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது ஆசீர்வாதம் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட 'கணிமை விருது' முகுந்தராஜ் சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகைதந்து சிறப்பித்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com