எட்டு டாலர் வெண்டைக்காய்!
மார்ச் மாதம் பிறந்த உடனேயே என் மனசெல்லாம் ஏப்ரல் 15ம் தேதியைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடும். உலகில் இரண்டு விஷயங்கள்தாம் நிச்சயமானவை என்று சொல்வார்கள். ஒன்று மரணம். இன்னொன்று வருமான வரி. அதுவும் என் கணவர் பென்னெட்டும் நானும் ஃப்ரீலான்ஸ் இசைக் கலைஞர்கள். அதனால் வரி விஷயத்தில் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். அதைப்பற்றிய நினைப்பில் நான் ஏதாவது மிகவும் முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்பேன். அவரோ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பார். பதில் வரக் காத்திருப்பேன். ஒன்றும் வராது. "என்ன யோசனை?" என்பேன். "தோட்டத்திற்கு சிக்கன் மன்யூர் வாங்குவதா, பசு மாட்டுச் சாணமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்பார்.

அவருக்கு சதா வீட்டுத் தோட்டத்தின் நினைப்புத்தான். காய்கறித் தோல், மீந்துபோன உணவுப் பொருள் எதுவும் குப்பைத் தொட்டிக்குப் போகாது. தோட்டத்தில் குழி வெட்டி அதில்தான் போட வேண்டும். அது எருவாகிப் பின்னால் பயன்படும் அல்லவா?

கோடையில் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது அவருடைய காரவான் வேகன், மவுண்ட் ஃபூஜி நர்சரியில் நிற்கும். அதேமாதிரி குதிரை லாயங்களுக்கும் அடிக்கடி போவதுண்டு. அங்கே கிடைக்கும் வைக்கோல் போர் தோட்டத்தில் செடிகளுக்கு மேல் பரப்பப்பட்டுத் தண்ணீரை உள்ளடக்க உபயோகப்படும்.

பக்கத்து வீடுகளில் வேலை செய்யும் மெக்ஸிகன் தோட்டக்காரர்களிடம் சினேகம் செய்துக் கொள்வார். வாராவாரம் பக்கத்து வீடுகளில் வெட்டும் புல் எங்கள் தோட்டத்திற்கு வந்துவிடும். எங்கள் நண்பர் பார்கவன், "ஃப்ராங்க்... நீங்கள் எதிர்வீட்டு மெக்ஸிகன் தோட்டக்காரனிடம் கிராஸ் கொண்டு வந்திருக்கிறாயா என்று உரத்த குரலில் இங்கிருந்து கேட்டால் தப்பாகப் புரிந்துகொண்டு போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போகப்போகிறான்" என்று கேலி செய்வார். ஆனால் பின்னால் அத்தனை மெக்ஸிகன் தோட்டக்காரர்களுக்கும் வெங்காயம், பூண்டு, தக்காளி, சுக்கினி எல்லாம் கொடுக்கப்படும்.

இளவேனில் காலத்தில் வெங்காயம், பூண்டு, ப்ராக்கலி, முட்டைக்கோஸ் போன்றவை பின்புறத் தோட்டத்தில் விளைய ஆரம்பித்துவிடும். கோடைக்காக மார்ச் மாதமே பென்னெட் தோட்டத்தைத் தயார் பண்ண ஆரம்பித்து விடுவார். வெள்ளெரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றிற்குச் சின்னக் குன்றுகள் தயாராகி விடும். தக்காளிக்கு மண்ணில் லைம்-சுண்ணாம்பு (Lime) சேர்க்கப் படும். அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ் போன்றவற்றிற்கு பந்தல் போட்டுவிடுவார். அடிக்கடி மண்ணைப் புரட்டி அதில் காம்போஸ்ட் கலந்து பதமாக வைத்திருப்பார். சாப்பாட்டில் நாற்பது வருடமாக நூறு சதவீதம் வெஜிடேரியனாக இருந்தாலும் தோட்டத்து மண்ணில் மண்புழு நெளிவதைப் பார்த்து சந்தோஷப்படும் பிறவி பென்னெட் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

எனக்கு என்ன பிடிக்கும் என்பது அவருக்கு அத்துப்படி. அமெரிக்கக் காய்கறிகள் மட்டுமல்லாமல் முளைக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவையும் பயிராகும். எண்ணெய்க் கத்திரிக்காய் கறிக்கு ஏற்றாற்போல் குட்டிக் கத்திரிக்காய் ஒரு பக்கம் காய்த்துக் குலுங்கும். ஃப்யூஷன் கச்சேரிகளுக்காக ஆறு மாதங்கள் போல் இத்தாலி போய்வந்த எனக்கு அங்கே சாலடில் சேர்த்திருந்த ‘அருகலா’ ரொம்பவே பிடித்துவிட்டது. அதை அவரிடம் சொன்னதை நானே மறந்து விட்டேன். அந்த வருடத்திலிருந்து தோட்டத்தில் ஒரு பக்கம் புல்வெளி மாதிரி அருகலா விளைகிறது. அவருக்குப் பிடித்த பேஸில் (basil) செடியும் அப்படித்தான். கோடையில் வாரத்தில் இரண்டு நாட்கள் எனக்குச் சமையல் உத்தியோகம் கிடையாது. அவரே best ஆக pesto பண்ணிவிடுவார்.

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? பென்னெட், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்கு வரும் மகன் ஆனந்த் ராமசந்திரன், நான், எங்கள் மூன்று பேருக்கு எவ்வளவு காய்கறி செலவாகும்? அதனால் என்னிடம் பாட்டும் வீணையும் கற்கவரும் மாணவ மாணவிகளிடம் காய்கறிகளை அள்ளி அள்ளிக் கொடுத்துவிடுவார். நான் வேடிக்கையாக "தினம் விடாமல் அகார சாதகம் அரைமணி நேரம் பண்ணுபவர்களுக்கு அரை கிலோ அவரைக் காய் இலவசம்" என்பேன்.

இத்தனை காய்கறி, கீரை வகைகள் கிடைத்த பின்னும் நான் கணக்குப் போட்டேன். மவுண்ட் ஃபூஜி கடையில் அவர் செலவழிக்கும் பணம்—அதாவது காம்போஸ்ட், ஏற்கனவே முளைக்க ஆரம்பித்த காய்கறிகள், விதைகள் இவற்றிற்கு என் தோட்டக்காரக் கணவர் செலவழித்தது, ஆப்சென்ட் மைண்டட் ஃப்ரொபசரான பென்னெட் பல மணி நேரம் தண்ணீர்க் குழாயை மூட மறந்துவிட்டதால் வந்த தண்ணீர் பில்—எல்லாமும் சேர்த்தால் ஒரே ஒரு வெண்டைக்காயின் அடக்க விலை என்ன தெரியுமா?

எட்டு டாலர்! இருந்தாலும் நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது என்ற திருப்திக்கு விலை உண்டா?

கீதா பென்னெட்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com