எல்லோரும் சமம்
அது ஓர் அடர்ந்த காடு. அங்கு மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. மிருகங்கள் தங்கள் குகைகளிலும், பொந்துகளிலும் பாதுகாப்புத் தேடி அடைக்கலமாகின. பறவைகள் கூடுகளைத் தஞ்சமடைந்தன. அந்தக் காட்டில் வசித்த சில குரங்குகள் மட்டும் போக இடமில்லாமல் மரத்தின் அடியில் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தன.

மரத்தின் மேலிருந்த ஒரு தூக்கணாங்குருவி குரங்குகளைப் பார்த்து இரக்கப்பட்டது. "நண்பர்களே, இப்படி மழையில் நனைந்து கொண்டிருக்கிறீர்களே, பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது. நீங்கள் சும்மா மரத்துக்கு மரம் தாவி விளையாடிய நேரத்தில் எங்களைப் போன்று அழகாக ஒரு கூட்டினைக் கட்டிக் கொண்டிருக்கலாம்" என்று சொல்லி தனது கூட்டைக் காட்டியது.

அதைக் கேட்ட உடனே குரங்குகளுக்குக் கோபம் வந்தது. உடனே ஒரு குரங்கு, "ஏ அற்பக் குருவியே, நாங்கள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம். எங்களைக் கிண்டல் செய்கிறாயா? உன் கூட்டை இப்போது என்ன செய்கிறேன், பார்" என்று சொல்லி மரத்தின் மீது பாய்ந்தேறி, கூட்டினைக் கலைக்க முற்பட்டது.

உடனே குருவி, "அவசரப்படாதே நண்பா, எதையும் அழிப்பது எளிது. ஆக்குவது கடினம். நீங்கள்தான் கோபம் வந்தால் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விடுவீர்கள் என்பது உலகறிந்த விஷயமாயிற்றே! அவசரப்படாமல் நான் சொல்வதைக் கேள்" என்றது.

"என்ன சொல்லப் போகிறாய்?" என்றது ஆத்திரத்துடன் குரங்கு.

"இந்தக் கூட்டை நீ தாராளமாகக் கலைக்கலாம். ஆனால் அதுபோல் ஒன்றை உன்னால் உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்க முடிந்தால் தாராளமாக நீ இதைக் கலைத்துக் கொள்" என்றது குருவி.

"இதென்ன பிரமாதம். குச்சிகளையும், குப்பைகளையும் சேர்த்து எங்களால் ஒரு கூடு கட்ட முடியாதா என்ன?" என்று எக்காளமிட்ட குரங்குகள், அங்கு கிடந்த குச்சிகளைப் பொறுக்கி மரத்தின் மேல் ஏறிக் கூடுபோல் கட்ட முயன்றன. பலமுறை முயற்சித்தும் கூடு கட்ட முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொள்வது போல் அவை தலை குனிந்து நின்றன.

உடனே குருவி, "நண்பர்களே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. உங்களைப் போல் மரத்துக்கு மரம் வேகமாகத் தாவ எங்களால் முடியுமா, மேலிருந்து வேகமாகக் கீழே இறங்க முடியுமா? அல்லது எங்களைப் போல உங்களால்தான் வானில் பறக்க, கூடு கட்ட முடியுமா? அதனால் நம்மில் யாரும் உயர்வுமில்லை. யாரும் மற்றவரை விடத் தாழ்வுமில்லை. நாம் எல்லோரும் சமம்தான். அதனால் நாம் எப்போதும் நண்பர்களாக இருப்போம். மழைத் தண்ணீர் படாத மரத்தின் இந்தப் பகுதியில் வந்து அமருங்கள்" என்று அடர்ந்த கிளையின் ஒரு பகுதியைக் காட்டியது.

குரங்குகளும் மரத்தின் மீதேறின. மகிழ்வுடன் அமர்ந்தன. மழையும் விட்டது. குரங்குகள் நிம்மதி ஆகின.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com