ஓய்வெடு மனமே, உளையாதே!
இந்த அவசர உலகில் ஒருவரோடொருவர் அன்போடு உறவாடி வாழ நேரமில்லாமல் சுற்றுவதால், மனவுளைச்சலும், மன அழுத்தமும் அதிகமாகிப் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இவற்றை உணர்ந்து, உடனுக்குடன் தீர்வு கண்டால் வாழ்க்கை இனிமையாகலாம். இதை உளவியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

29 வயது மல்லிகா அடிக்கடி தலைவலி, தலை சுற்றல் என்ற உபாதைகளுடன் என்னிடம் வந்தாள். மயக்கம் வருவதுபோல் இருந்து சுதாரித்துக் கொள்வது வழக்கமானது. இந்தத் தறுவாயில் மார்பு படபட வென்று அடித்துக் கொள்ளும். மூச்சுத் திணறுவது போல் இருக்கும். மல்லிகா தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள். இரண்டு குழந்தைகள். கணவருக்கும் வேலைப்பளு அதிகம். தினம் சமையல், சாப்பாடு, வேலை, குழந்தைகளின் படிப்பு, இதர வகுப்புகள் என்று ஓயாமல் வேலை. சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வகுப்புகள், துணி துவைத்தல், வீடு சுத்தம் செய்தல் என்று வேலைமேல் வேலை. இதனால் காலை உணவு உண்ணுவதில்லை. ஓய்வெடுக்காமல், தூக்கம் குறைந்து போவதும் இவளுக்கு வாடிக்கையானது.

43 வயது சந்திரிகாவிற்கு நல்ல உயர்ந்த பதவி. வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வீட்டுக்கு வந்தால் மனவுளைச்சல் அதிகமாவதாகவும் வருத்தப்பட்டாள். மாதவிடாய் வருவதற்கு முன்னதாக ஒரு வாரம் கோபம் அதிகமாகும். எரிச்சலும் கோபமும் சிலவேளை மன அழுத்தமாக மாறுவதை உணர்ந்தாள். "நல்ல வேலை, நல்ல கணவன், நல்ல குடும்பம் இருந்தும் ஏன் எனக்கு வருத்தம்? புரியவில்லை" என்று தனது வருடந்திர தடுப்புப் பரிசோதனையின் போது வருத்தப்பட்டாள்

32 வயது சேகருக்கு வேலைப்பளு அதிகம். வேலை நிமித்தமாக அடிக்கடி கூட்டங்களில் பேச வேண்டும். வேலையின் நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்திருந்த போதும், பலர் முன்னிலையில் பேச வேண்டும் என்று வருகையில் முதல் மூன்று நாட்களுக்குத் தூக்கம் வராமல் தத்தளிப்பான். இருதயம் படபடக்க, தலைவலி வந்து, வீட்டில் கோபம் பொங்கும். வேலையிலும், வியர்த்து விறுவிறுத்துப் பேச்சை முடிப்பதற்குள் மறுபிறவி எடுப்பது போல் இருப்பதாக என்னிடம் சிகிச்சைக்கு வந்தான்.

45 வயது சண்முகத்திற்கு வேலைப்பளு அதிகம் என்றாலும் வேலையில் மனவுளைச்சல் இல்லை. ஆனால் வீட்டிற்கு வரும் தருவாயில் தினந்தினம் படபடப்பு அதிகரிக்கும். மனைவியின் கண்டிப்பில் குழந்தைகள் சிரமப்படுவது இவனைச் சிரமப்படுத்தும் குழந்தைகள் வீட்டுப்பாடம், குமான் பாடம், இசைப் பயிற்சி, பியானோ பயிற்சி என்று அவர்களை வேலை செய்ய வைப்பதே இவனுக்கு மன உளைச்சலை உண்டாக்கும்.

35 வயது மீனாவிற்குத் தனிமை மன அழுத்ததத்தை ஏற்படுத்தும். வேலைக்குப் போகாமல், வாகனம் ஓட்டத் தெரியாமல், வீட்டிலேயே காலம் கடத்த வேண்டும். கணவரும் குழந்தைகளும் வரும்வரை தனிமையில் இவளுக்குக் கை, கால் குடைச்சல் ஏற்படும். சோகம், அழுகை என்று இல்லாமல், மூட்டுவலி, முதுகுவலி என்று எப்போதும் ஒரு வலி. எல்லோரும் இருக்கும்போது வலி தெரியாது. தனிமையில் மட்டும் கொல்லும் வலி.

மேற்கூறிய நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் மன உளைச்சலும் மன அழுத்தமும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகின்றது. மனவுளைச்சல் என்பது பொதுவான பதற்றக் கோளாறு (Genaralized Anxiety Disorder), சமூகப் பதற்றக் கோளாறு (Social Anxiety Disorder) இனங்காணாத பதற்றமும் மனச்சோர்வும் (Unspecified Anxiety and Depression) என்று பலவிதப்படும்.

இருதயம் படபடவென்று துடிப்பதும், மூச்சடைப்பது போன்ற உணர்வும் மயக்கம் வருவதும் (Panic Attack) மிகையச்சத்தால் ஏற்படுவது. இந்தவித உணர்வு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் அடிக்கடி ஏற்படலாம். மன அழுத்தம் அதிகமானால் உடல்வலி, தூக்கமின்மை, சோகம் என்ற துன்பங்கள் ஏற்படலாம்.

மனவுளைச்சல் இருப்பதை உணர்வது முதலில் அவசியம். அதற்குத் தீர்வு தேடுவது வீட்டில், குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கும். தனது உணர்வுகளை ஒளிவு, மறைவு இல்லாமல் சொல்லிக்கொள்வது நல்லது. விட்டுக் கொடுப்பதும், கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்திக் கொள்வதும் தேவை. வீடு சுத்தமாக வைக்க குடும்பத்தினர் அனைவரும் உதவ வேண்டும். கனிவும், அன்பும் தலையோங்கினால் கண்டிப்புக்கு அவசியம் குறைந்துவிடும். இந்தவகை மனவுளைச்சல் இருப்பவர்கள் புகை, மது, போதைப்பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

மனம் அலைபாயாமல் இருக்க தியானம் செய்வது நல்லது. தினமும் காலையில் பத்து நிமிடங்கள் தியானம் அல்லது யோகம் செய்வது பரபரப்பு உலகிற்கு அருமருந்து. ஆறுமுதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அவசியம் உண்ண வேண்டும். காலை உணவு மிகவும் அவசியம். இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்து, காலையிலும் சாப்பிடாவிட்டால் தலைசுற்றல் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதற்கான நேரத்தை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்தும் செய்யலாம். நல்ல நண்பர்கள் தோழியருடன் மனம் திறந்து பேசவேண்டும். அப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடாமல் மனதைத் திறக்கும் முயற்சியாகமட்டுமே செய்தால் நல்லது. அருகிலிருப்பவரும் தீர்வுகாண முயற்சிக்காமல் காதுகொடுத்துக் கேட்பது மட்டுமே தனது வேலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த முயற்சிகளுக்குப் பிறகும் மனவுளைச்சல் இருக்குமேயானால் அதற்கு மருந்துகளும், உளவியல் ஆலோசகர்களைக் காண்பதும் நல்லது. உளவியல் ஆலோசகர்கள் பிரச்சனைகளைக் கேட்டு, அதற்குத் தீர்வு காணும் வழியை யோசிக்க வைக்க உதவுவர். இவர்களை வாராவாரம் அல்லது அவ்வப்போது கண்டு வரலாம். கணவர் மனைவி இணைந்தும் செல்லலாம். மனவுளைச்சல் அதிகமாக இருப்பவர்களுக்கு Xanax என்ற மருந்து கொடுக்கப்படலாம். இது ஒரு மணி நேரத்திற்குள் நிவாரணம் தரும். பலர் இந்த மருந்து தங்களிடம் இருப்பதாலேயே மனத்தை அடக்கும் முயற்சியில் வெற்றி காண்பர். தேவைப்பட்டால் மட்டும் உபயோகிக்கலாம். ஒரு சிலருக்கு மனத்தை அடக்கி ஒருமுகப்படுத்த மாத்திரைகள் தேவை. இவை பெரும்பாலும் மன அழுத்த மாத்திரைகள் (zoloft, Paxil, Lexapro). இவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகே நிவாரணம் கிடைக்கும்.

வாழ்க்கையை ரசிக்கப் பழகி, தன்னையும் நேசித்து, உறவுகளையும் நேசிக்கத் தொடங்கினால் உளைச்சல் நீங்கி மனம் மகிழ்ச்சியாக இருக்கும். செய்வோமா?

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com