பசுவம்மாவின் கிறிஸ்துமஸ்
1

குளிர் காலம். நிலம் முழுதும் பனி மூடிக் கிடந்தது. பசுவம்மாவும் மற்ற பசுக்களும் நின்றுகொண்டிருந்த தொழுவத்தில் கதகதப்பாக இருந்தது. குழந்தைகள் பனியில் விளக்குக் கூடு செய்து விளையாடுகிறார்கள். விவசாயி, கிறிஸ்துமஸ் மரமாகப் பயன்படுத்துவதற்காக ஒரு கிளையுடன் காட்டிலிருந்து திரும்பி வந்தார். கிறிஸ்துமஸ் இரவுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது.

2

பசுவம்மாவின் நண்பனான காகன் இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தான்? அவன் நன்றாகப் போர்த்திக்கொண்டு பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தான். "என்ன இது அநியாயம்! காக்கைக் கூட்டில் மட்டும் ஏன் எப்போதும் ஒரே இருட்டாகவும் குளிராகவும் இருக்கிறது? ஆனால், பசுக்கள் மட்டும் தொழுவத்தில் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதைப்பற்றி நான் ஒருநாள் கேள்வி கேட்காமல் விடமாட்டேன்!" என்று முணுமுணுத்துக்கொண்டான் காகன். அவன் மெதுவாக எழுந்து பசுவம்மாவின் தொழுவத்தை நோக்கிப் பறந்தான்.

3

தொழுவத்தின் சன்னல் கண்ணாடியில் பனி படர்ந்திருந்தது. காகன் பனியைத் துடைத்துவிட்டு தொழுவத்தின் உள்ளே பார்த்தான். "இந்த உலகத்தில் இப்படியும் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே! நான் குளிரில் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன், பசுவம்மா உள்ளே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாளே! அவள் அங்கே என்ன செய்கிறாள்?" என்று காகன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். தொழுவத்தின் உள்ளே பசுவம்மா மேலும் கீழும் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் முழுதும் வியர்வை ஒழுகிக்கொண்டிருந்தது. காகனைப் பார்த்ததும் அவள், "வணக்கம் காகன், நீதானா அது? வா, உள்ளே வா!" என்று திணறியபடியே சொன்னாள்.

4

உள்ளே வந்த காகன் கேட்டான்: "கா கா! நீ எதற்கு இப்படித் துள்ளிக் குதிக்கிறாய் பசுவம்மா? பசுக்கள் என்றால் கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டாமா?" பசுவம்மா பதில் சொன்னாள்: "ச்... ச்... அது ஒரு ரகசியம். இப்படித் துள்ளிக் குதித்தால் என் மடியில் நன்றாகப் பால் சுரக்கும். இந்த வகையில் நான், என் எஜமானரான விவசாயிக்கு எதிர்பாராத மகிழ்ச்சியளிக்க முடியும். நாளைதானே கிறிஸ்துமஸ் இரவு! விவசாயிக்கு என் கிறிஸ்துமஸ் பரிசாக நிறையப்பால் கொடுப்பேன்!" இதைக் கேட்டதும் காகன் அதிர்ச்சியடைந்தான்.

"கா! என்ன, நாளையா கிறிஸ்துமஸ் இரவு? நீ ஏன் இதை என்னிடம் முன்பே சொல்லவில்லை?"

5

பசுவம்மாவின் பதிலுக்குக் காத்திருக்காமல் காகன் அங்கும் இங்கும் தத்தித் தாவிப் பறக்கத் தொடங்கினான். சற்று நேரம் அவன் அப்படிப் பறந்த பிறகு பசுவம்மாவின் முன்னால் சட்டென்று நின்று ஒரு கேள்வி கேட்டான்: "நான் ஏன் இப்படித் தேவையில்லாமல் தாறுமாறாகப் பறந்துகொண்டிருக்கிறேன்?"

பசுவம்மா சொன்னாள்: "அது எனக்கு எப்படித் தெரியும்? நீ கிறிஸ்துமஸ் இரவைப் பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாய். பிறகு தத்தித் தாவி பறக்கத் தொடங்கினாய்."

"நீ சொல்வது சரிதான். கஷ்டம்! கிறிஸ்துமஸ் வந்தும்கூட எனக்கு இதுவரை ஒரு பரிசும் கிடைக்கவில்லை. நான் எப்படி ஒரு கிறிஸ்துமஸ் பரிசை ஏற்பாடு செய்வேன்? இதை நினைத்தால்தான் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போலிருக்கிறது!"

"ஆனால், உனக்கு எதற்கு கிறிஸ்துமஸ் பரிசு? நீ என்ன, உனக்கு நீயே கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்துக்கொள்ளப் போகிறாயா?" இதைக் காது கொடுத்துக் கேட்காமல் காகன் மீண்டும் தத்தித்தாவி வட்டமாகப் பறக்கத் தொடங்கினான்.

"ஆமாம்! எனக்குப் பரிசு கிடைப்பதற்கான ஒரே ஒரு வாய்ப்பு இதுதான். இப்போது கிடைக்கவில்லை என்றால் பிறகு எப்போதும் எனக்குப் பரிசு கிடைக்காது. நான் புறப்படுகிறேன். நான் உடனே என் வீட்டுக்குச் செல்ல வேண்டும்!"

6

தன் வீட்டுக்கு வந்த உடனே காகன் ஒவ்வொரு பொருளையும் எடுத்து பரிசுப் பொட்டலமாக்கத் தொடங்கினான். அவனது கூட்டின் உள்ளே பலவிதமான பொருட்கள் இறைந்து கிடைந்தன. அவன் ரொட்டி வைக்கிற ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தான். "ஓ, லெகோவின் சிறிய பொம்மை அல்லவா இது? எனக்கு இது மிகவும் பிடிக்கும்!" என்று சொல்லிக்கொண்டே அவன் அதை ஒரு பத்திரிகைக் காகிதத்தில் வைத்துப் பத்திரமாக மூடினான். பிறகு அதை அழகான ரிப்பனால் கட்டி வைத்தான். மீண்டும் ஒரு பொருளைக் கையில் எடுத்துச் சொன்னான் காகன்: "ஓ, இது ஒரு இறைச்சிப்பணியாரம் அல்லவா! இதைப்பற்றி நினைத்தாலே எனக்கு நாவில் நீர் ஊறுமே!"

7

பிறகு காகன், பாத்திரங்களை வைக்கிற அலமாரியைத் திறந்து பார்த்தான். "அட! இங்கு ஒரு பூதக்கண்ணாடி இருக்கிறதே, பிரமாதம்! இதை யாருக்குப் பரிசளிப்பது? சந்தேகம் என்ன, எனக்குத்தான், ஹி... ஹி..." இப்படிப் பலவிதமான பொருட்களை அவன் தன் கூட்டிலிருந்து பொறுக்கியெடுத்தான். ஒவ்வொன்றையும் அழகான காகிதத்தில் வைத்து மூடி ரிப்பனால் கட்டினான். பிறகு குறிப்புகள் எழுதி ஒவ்வொரு பொட்டலத்தின் மேற்புறத்திலும் ஒட்டி வைத்தான். எல்லாக் குறிப்பிலும் இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது: "அன்பான காக்கைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! - இப்படிக்கு அன்பான காக்கை."

8

இவ்வளவு வேலைகள் செய்த பின்னர் களைத்துப் போன காகன் ஒரு மூலையில் அமர்ந்தான். ஆனால் அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. பெரிதாகக் கொட்டாவிவிட்டு அவன் மெதுவாகக் கண் மூடினான். இரவானது. வானில் நிலவு ஓடி வந்தது. காகனால் உறங்கவும் முடியவில்லை. தான் தயார் செய்துவைத்த பரிசுப் பொட்டலங்களை ஓரக் கண்ணால் பார்த்தான். கண்களை இறுக்கமாக மூடினான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான். திரும்பவும் கண்களை மூடினான். தன் மெத்தையில் படுத்து அங்குமிங்கும் உருண்டு புரண்டான். பிறகு சற்று நேரம் மேற்புறத்தையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.

9

"கா... கா... என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!" என்று சொன்ன காகன் துள்ளி எழுந்தான். பரிசுப் பொட்டலங்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினான். "கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், அன்பான காக்கை!"என்று உரக்கக் கத்தினான் அவன். பிறகு அவனே, "ஓ, மிகவும் நன்றி!" என்று கூவினான். "காக்கை, இதோ இதுவும் உனக்குத்தான்!" என்று சொன்னபடியே அவன் ஒரு பொருளை எடுத்துக்கொண்டான். அதை எடுத்துப் பிரித்துப் பார்த்து, "ஓ! இதுதான் நான் மிகவும் விரும்பிய பரிசு! எவ்வளவு அருமையாக இருக்கிறது! உனக்கு மிகவும் நன்றி தங்கமான காக்கையே!" என்று சொன்னான். நீண்ட நேரம் இப்படிச் செய்துகொண்டிருந்த அவன், முற்றிலும் களைத்துப்போய் பரிசுப் பொட்டலக் குவியலின் கீழே மயங்கி வீழ்ந்தான். அந்த நேரத்தில் கோழிக் கூட்டிலிருந்து சேவலின் கூவல் கேட்டது.

10

அவ்வாறு, காத்திருந்த கிறிஸ்துமஸ் இரவும் வந்தது. தொழுவத்தின் உள்ளே எப்போதும்போல நல்ல வெளிச்சமும், கதகதப்பும் இருந்தது. எல்லா பசுக்களின் கொம்புகளும், வால்களும் பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வானொலிப் பெட்டியிலிருந்து அழகான கிறிஸ்துமஸ் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. காகன் தன் அலகால் "டக்... டக்... டக்..." என்று தொழுவத்தின் சன்னலில் தட்டினான். பசுவம்மா மகிழ்ச்சியுடன் காகனை உள்ளே அழைத்தாள்.

11

"வணக்கம் காகன். உள்ளே வா! இங்கே வெப்பமாக இருக்கும். பார், எங்களுக்கு இன்று கடந்த கோடை காலத்தின் நல்ல வைக்கோல் கிடைத்தது. அடடா! இது எவ்வளவு சுவையாக இருக்கிறது தெரியுமா! எங்களுக்குக் கிடைத்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்தாயா? மிகவும் அழகாக இருக்கிறது இந்த மரம்! காகன், உனக்கும் எங்கள் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!"

12

அதை அரையும் குறையுமாகக் கேட்டபடி காகன் பறந்து சன்னலில் அமர்ந்தான். "நான் இரவே எழுந்து, எனக்கு நானே கொடுத்துக்கொண்ட எல்லாப் பரிசுப் பொட்டலத்தையும் திறந்து பார்த்துவிட்டேன்." என்றான் அவன். "அடடா, ஏன் அப்படிச் செய்தாய் காகன்?" என்று வருத்தத்துடன் பசுவம்மா கேட்டாள்.

13

"உனக்கு என்ன தெரியும் பசுவம்மா? காகங்களை யாருக்கும் தேவையில்லை. யாரும் எங்களைச் சற்றும் பொருட்படுத்துவதும் இல்லை. நான் இதை எவ்வளவு முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்! என்னைப் பற்றி நினைப்பதற்கு நான் மட்டும்தான் இருக்கிறேன்!" பொங்கி வந்த அழுகையை காகனால் அடக்க முடியவில்லை. சுவரில் தலை சாய்த்து அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

14

அப்போது "டக்... டக்... டக்..." என்று யாரோ சன்னலைத் தட்டும் ஓசை கேட்டது. திடுக்கிட்டுச் சிறகு விரித்து மேலே பார்த்தான் காகன்.

"அங்கே என்ன நடக்கிறது? சன்னலைத் தட்டுவது யார்? நான் இங்கே இருக்கிறேன்."

பசுவம்மா, ஏதோ ரகசியத்தை மனதில் வைத்திருப்பதுபோல நின்றாள். திடீரென்று நிறையக் கோழிகள் சன்னல் வழியாகப் பறந்து உள்ளே வந்தன. அவை காகனை ஒரு மூலையில் ஒதுக்கின.

"ஐயோ, அம்மா, பசுவம்மா என்னைக் காப்பாற்று! இந்தக் கோழிகளெல்லாம் சேர்ந்து ஏன் இப்படிச் செய்கின்றன? இவை கூட்டில் அமர்ந்து முட்டையிடாமல் ஏன் இப்படிக் கலாட்டா செய்கின்றன?"

15

பசுவம்மா சொன்னாள்: "அது ஒரு ரகசியம். ஒரு கிறிஸ்துமஸ் பரிசு. உனக்கான ஒரு பிரத்தியேகப் பரிசு காகன்!"

"எனக்கு ஒரு கிறிஸ்துமஸ் பரிசா?" நம்பிக்கை வராமல் கேட்ட காகன், தொடர்ந்து சொன்னான்: "ஐயோ இந்தக் கோழிகள் எனக்கு வேண்டாம். எனக்கு உன் பாலும் வேண்டாம், முட்டைக் குழம்பும் வேண்டாம், வேண்டவே வேண்டாம். நான் வீட்டுக்குச் சென்றால் போதும். போய் வருகிறேன்!"

"கொஞ்சம் பொறுமையாக இரு என் காகன். உனக்குக் கொடுக்க நினைத்திருக்கும் பரிசு முட்டைக் குழம்பும் அல்ல, பாலும் அல்ல! வா, நாம் என் சைக்கிளை எடுக்கலாம்."

" போய் உன் வேலையைப் பார் பசுவம்மா! நீ என்ன, உன் பழைய சைக்கிளையா எனக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகத் தரப்போகிறாய்? உன் பழைய சைக்கிள் எனக்கு வேண்டாம்!"
"கொஞ்சம் பொறுமையாக இரு காகன். வா, நாம் இந்த சைக்கிளில் ஏறி உன் கிறிஸ்துமஸ் பரிசிடம் போகலாம். ஆனால் அந்தப் பரிசை நெருங்குவதுவரை நீ உன் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். உனக்குச் சம்மதம்தானே! அப்படியென்றால் ஏறு, போகலாம்."

16

கோழிகளையும் காகனையும் ஏற்றிக்கொண்டு பசுவம்மா, இருளான காட்டினுள்ளே சைக்கிள் ஓட்டிச் சென்றாள். காகன் சைக்கிளின் கைப்பிடியில் அமர்ந்திருந்தான்.

"நான் சொல்வதுவரை உன் கண்களைத் திறக்கக் கூடாது" என்று பசுவம்மா மீண்டும் காகனுக்கு நினைவுபடுத்தினாள்.

17

காட்டின் நடுவில் உள்ள பெரிய மரத்தின் முன்னால் பசுவம்மா சைக்கிளை நிறுத்தினாள். அந்த மரத்தில்தான் காகனின் கூடு இருக்கிறது. அந்த மரம், கிறிஸ்துமஸ் மரமாக நிறைய விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"ஒன்று, இரண்டு, மூன்று! இப்போது கண்களைத் திறந்து பார் காகன்!" என்று பசுவம்மா சொன்னாள்.

18

காகன் தன் கண்களைத் திறந்த நொடியில், அந்த மரத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துமஸ் விளக்குகள் ஒளிர்ந்தன. விளக்குகளின் வெளிச்சத்தில், பனித் துளிகள் மூடிய அந்தக் கிறிஸ்துமஸ் மரம் மகிழ்ச்சியுடன் தன் கிளைகளைக் குலுக்கியது. காகனால் சந்தோஷத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் ஆனந்தத்தால் திகைத்துப்போனான் அவன்.

சில நொடிகளுக்குப் பிறகு அவன் சொன்னான்: "இதோ பார், பசுவம்மா! என் கிறிஸ்துமஸ் மரம் எவ்வளவு அற்புதமாக ஒளிர்கிறது பார்!"

பசுவம்மா மென்மையான குரலில், ஆழ்ந்த நட்புடன் சொன்னாள்: "அன்பான காகன், உனக்கு எங்கள் அனைவரின் அன்பு நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!"

19

"ஆனால் பசுவம்மா, நீ எப்படி இந்த மரத்தை இவ்வளவு விளக்குகளால் அலங்கரித்தாய்? இது எப்படி உன்னால் முடிந்தது?"

"இந்த விளக்குகளை மரத்தில் கட்டித் தொங்கவிட நம் கோழி நண்பர்கள்தான் உதவினார்கள். அவர்களால் பறக்க முடியுமல்லவா?" காகன் நன்றியுடன் பசுவம்மாவின் முன்னாலும், கோழிகளின் முன்னாலும் தலை குனிந்தான்:

"கா...கா... கா... மன்னிக்க வேண்டும்! நன்றி, மிகவும் நன்றி! நான் இப்போது என் வீட்டுக்குச் சென்று வருகிறேன்!" காகன் தன் கூட்டுக்குப் பறந்து சென்றான்.

20

காகனின் கூடு இருந்த மரத்தில் நூற்றுக் கணக்கான விளக்குகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்ததால், காகனின் கூடு மிகவும் பிரகாசமாக இருந்தது. "கடவுளே! என் கூடு இப்போது எவ்வளவு வெளிச்சமாகவும், அழகாகவும் இருக்கிறது! என் வீட்டிலும் இப்போது வெப்பம் இருக்கிறது!" என்ற காகன் தன் சுவர்க் கடிகாரத்தைத் திறந்து எதையோ வெளியே எடுத்தான். பிறகு பசுவம்மாவிடம் பறந்து சென்றான்.

21

"இனி நீ கண்களை மூடிக்கொள்!" என்று காகன் பசுவம்மாவிடம் சொன்னான்.

"ஏன்? உனக்கு ஏதாவது கிறுக்குப் பிடித்துவிட்டதா?"

"சொல்வதைக் கேள் பசுவம்மா. நான் சொல்வதைக் கேட்டால் போதும்!" என்ற காகன் பசுவம்மாவை எதுவும் பேச அனுமதிக்கவில்லை.

பசுவம்மா கண்களை மூடினாள். காகன் பசுவம்மாவின் கழுத்தில் ஒரு அழகான மணியைக் கட்டினான். "அன்பான பசுவம்மா, இது உனக்கான என் கிறிஸ்துமஸ் பரிசு! கடந்த கோடை காலத்தில் எனக்குக் கிடைத்தது இந்த மணி!"

"அடடா! இந்த மணி எவ்வளவு அழகாக இருக்கிறது! என் அம்மாவுக்கும் இதுபோன்ற ஒரு மணி இருந்தது!" என்று மிகவும் மகிழ்ந்தாள் பசுவம்மா.

22

பசுவம்மாவும், காகனும் ஒரு அடிக்கட்டையில் அமர்ந்து நீண்ட நேரம் அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தின் அழகைப் பார்த்து ரசித்தார்கள். கோழிகள் மரக்கிளையில் அமர்ந்து உறங்கின. வானத்திலிருந்து பனித் துகள்கள் பொழிந்துகொண்டிருந்தன. விளக்குகளின் வெளிச்சத்தில் அவை மின்மினிப் பூச்சிகளைப்போல ஒளிர்ந்தன. பசுவம்மாவின் கண்களில் மகிழ்ச்சியும்,
திருப்தியும் தெரிந்தது. அவள் தனக்குக் கிடைத்த புதிய மணியை மெதுவாக ஆட்டிப் பார்த்தாள்.

ஸ்வீடிஷ் மூலம்: ஜுஜூ வெய்லாண்டர் - தாமஸ் வெய்லாண்டர்
தமிழில்: யூமா. வாசுகி

© TamilOnline.com