கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, பதிப்பாளர் என மிளிர்பவர் யூமா. வாசுகி. இயற்பெயர் மாரிமுத்து. 1965ல் பட்டுக்கோட்டையில் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவருக்கு ஓவிய ஆர்வம் இருந்தது. உறவினர்கள் இருவர் ஓவியர்கள். அதனால் ஓவிய ஆர்வம் அதிகரித்தது. கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பயின்றார். அதற்காகப் பல புத்தகங்களைப் படிக்கத் தொடங்க, அது இவரை இலக்கியத்தை நோக்கி அழைத்துச் சென்றன. கல்லூரிக் காலத்தில் கவிதைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்து 'உனக்கும் உங்களுக்கும்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். பின் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவருக்கு பலவிதமான அனுபவங்கள் வாய்த்தன. அவற்றை எழுதத் துவங்கினார். அவை கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் எனப் பல களங்களிலும் விரிந்தன.
'உயிர்த்திருத்தல்' என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பைத் 'தமிழினி' வசந்தகுமார் வெளியிட்டார். தொடர்ந்து வெளியானது 'ரத்த உறவு.' இந்நாவல் பல தளங்களில் பேசப்பட்டது. குடும்ப உறவுகளின் குரூரத்தையும், அதே சமயம் அங்கே இயல்பாக வெளிப்படும் மனித நேயத்தையும், அன்பையும், பாசத்தையும் பேசுகிறது ரத்த உறவு. இதனைச் சிறப்பான நாவலாகக் கவனப்படுத்துகிறார் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இந்த நாவல் யூமா. வாசுகிக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. இது 'Blood Ties' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசும் இதற்குக் கிடைத்தது. சாகித்ய அகாதமியின் தேர்வுப் பட்டியலில் இது இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல தளங்களில் எழுத ஆரம்பித்தார். அடிப்படையில் ஓர் ஓவியர், கவிஞர் என்பதால் நுண்ணிய பல அவதானிப்புகள் இவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன. இவர் எழுதிய 'மரகத நாட்டு மந்திரவாதி' என்ற சிறுவர் இலக்கிய நூலுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது கிடைத்துள்ளது. 'இரவுகளின் நிழற்படம்' என்ற கவிதைத் தொகுப்பு தமிழக அரசின் பரிசு பெற்றதாகும். என்சிபிஎச் வழங்கிய மொழிபெயர்ப்புக்கான தொ.மு.சி. ரகுநாதன் விருதையும் இவர் பெற்றிருக்கிறார். 'உனக்கும் உங்களுக்கும்', 'தோழமை இருள்', 'இரவுகளின் நிழற்படம்', 'அமுதபருவம்', 'வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். மிக மென்மையான கவிதை நடையில் எழுதப்பட்ட 'மஞ்சள் வெயில்' நாவல் பரவலாகப் பேசப்பட்ட ஒன்றாகும். "இருளின் குமிழ்களைப்போல் உங்கள் புடவை அசைகிறது. மிகச்சன்னமாக ஒலிக்கின்றன உங்கள் கொலுசு மணிகள். நெளிந்து வருகிறது தலையில் சூடியிருந்த பூச்சரம். நடந்து நடந்து அகன்று கொண்டிருந்தீர்கள். ஒரு காலெடுத்து அடுத்த அடி வைக்கும்போது உங்கள் செருப்பிலிருந்து உதிரும் மணல், என்னை உட்கொண்டு திறந்திருக்கும் புதைகுழியை மூடுகிறது சிறுகச் சிறுக... அலைகளை மிதித்தபடி கடலோரமாய் நடக்கத்துவங்கினேன்" எனக் கவித்துவமாக விரிகிறது அந்த நாவல்.
"இலக்கியம் என்பது என் பார்வை. வெளிப்படுத்தறதைச் சிறந்த வகையில வெளிப்படுத்தணும், அவ்வளவுதான்." என்கிறார் யூமா. இலக்கியத்துக்கும் ஓவியத்துக்குமான தொடர்புபற்றிக் கூறும்போது, "இலக்கியம், ஓவியம் இவையிரண்டிற்குமான வெளியீட்டு முறைமையில் ஓவியம் என்பது கோடு, வண்ணங்களால் ஆனதாகவும் இலக்கியம் என்பது எழுத்துகளால் ஆனதாகவும் இருக்கின்றது என்பதே இவற்றிற்கான வித்தியாசமே தவிர இவைகளின் அதிகபட்ச இலக்கு கவித்துவம் என்ற ஒன்றையே மையமிட்டிருக்கின்றது" என்கிறார். கோட்டோவியம் வரைவதில் இவர் தேர்ந்தவர். 'நவீன விருட்சம்' இதழின் அட்டையில் இவரது ஓவியங்கள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் முதல் படைப்பான 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' கவிதை நூலுக்கு, கவிதைகளுக்கேற்றவாறு பல ஓவியங்களை வரைந்து தந்திருக்கிறார்.
'கணையாழி', 'புதியபார்வை', 'சொல்புதிது' போன்ற இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கும் யூமா. வாசுகி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இதழான துளிர் ஆசிரியர் குழுவிலும் முக்கியப் பங்கு வகித்த அனுபவம் கொண்டவர். 'மழை' என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறார். 'குதிரைவீரன் பயணம்' என்ற இலக்கிய இதழைச் சுமார் பத்தாண்டுகளாக நடத்தி வருகிறார். சுந்தர ராமசாமி, பிரம்மராஜன், பெருமாள்முருகன் உள்ளிட்ட பலரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகி உள்ளன. தனது ஓவியங்களைத் தொகுத்து 'Marooning Thickets' என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். தனது சென்னை வாழ்க்கை அனுபவங்களை, 'சுதந்திர ஓவியனின் தனியறை குறிப்புகள்' என்ற தலைப்பில் நாவலாக எழுதி வருகிறார்.
சிறுவர் நாவல்கள் வெளிவருவதும், எழுதுவதும் குறைந்து போன காலகட்டத்தில் விதவிதமாகச் சிறார் கதைகளை எழுதியும், மொழிபெயர்த்தும் அதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறார். 'பூக்கதைகள்', 'மின்மினிக்காடு', 'ஒரு குமிழின் கதை', 'ஆண்பிள்ளையார் பெண்பிள்ளையார்', 'மரகதநாட்டு மந்திரவாதி', 'பனிமலை நாடு', 'ஓட்டகக் கண்', 'வானில் பறவையின் கதை', 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', 'நிறம் மாறிய காகம்', 'அன்பின் வெற்றி' போன்றவை இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறார் படைப்புகளாகும். மொழிபெயர்ப்பு இலக்கியத்தில், தஸ்தயேவ்ஸ்கியின் 'நினைவுக் குறிப்புகள்', டால்ஸ்டாய் எழுதிய 'நிகிதாவின் இளம்பருவம்', அல்பேனிய நாவலான 'பெனி எனும் சிறுவன்', மலையாளத்தில் பத்மாலயாவின் 'கடல் கடந்த பல்லு', ஜானு எழுதிய 'பூமிக்கு வந்த விருந்தினர்கள்', பய்யனூர் குஞ்ஞிராமன் எழுதிய 'ஒற்றைக்கால் நண்டு', அந்த்வர்ன் து செந்த் எழுதிய 'குட்டி இளவரசன்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. தற்போது 'ஸ்ரீராமன் கதைகள்' என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பை சாகித்திய அகாதெமிக்காக மொழி பெயர்த்து வருகிறார். யூமா. வாசுகி தமிழ் படைப்புலகின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவர்.
அரவிந்த் |